“ஒத்த ஓட்டு முத்தையா”வை வெற்றி ஓட்டு முத்தையாவாக மாற்ற ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்தார் கவுண்டமணி

கவுண்டமணி கதையின் நாயகனாக  நடித்திருக்கும் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இவ்விழாவில் கலந்து கொண்ட நகைச்சுவ நடிகர் கவுண்டமணி பேசும்போது,  “அனைவரும் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தை பற்றி நிறைய பேசி விட்டார்கள். பிறகு நான் என்ன பேசுவது? தயாரிப்பாளர் ரவி ராஜா இந்த திரைப்படத்தை சிறந்த முறையில் தயாரித்திருக்கிறார். இணை தயாரிப்பாளர் கோவை லட்சுமி ராஜனும் சிறப்பாக பணியாற்றி இருக்கிறார். இவர்கள் இருவருக்கும் என் நன்றி. இந்த விழாவிற்கு வருகை தந்திருக்கும் ரசிகர்கள், வருகை தராமல் வீட்டில் இருக்கும் ரசிகர்கள், வெளியூரில் இருக்கும் ரசிகர்கள், வெளிநாட்டில் இருக்கும் ரசிகர்கள், ஹாலிவுட்டில் இருக்கும் ரசிகர்கள் என அத்தனை பேருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.  இந்த ‘ஒத்த ஓட்டு முத்தையா’வை பாருங்கள். இந்த ‘ஒத்த ஓட்டு முத்தையா’வை நன்றாக பாருங்கள். இந்த ‘ஒத்த ஒட்டு முத்தையா’வை திரும்பத் திரும்ப பாருங்கள். . பார்க்க மறந்து விடாதீர்கள். இந்த ‘ஒத்த ஒட்டு முத்தையா’வை வெற்றி ஓட்டு முத்தையாவாக மாற்றுங்கள். அது உங்கள் கடமை. அது உங்களுடைய பொறுப்பும் கூட. இத்துடன் எனது பேச்சை நிறைவு செய்து கொள்கிறேன், வணக்கம், நன்றி,” என்றார்.*******

 இந்தப் படம் குடும்பத்துடன் காண வேண்டிய படம்.‌ படத்தை வெளியிடும் பைவ் ஸ்டார் செந்திலுக்கும் நன்றி.  இயக்குநர் பி. வாசுவிற்கும் நன்றி. என்னுடைய ரூம் மேட் பாக்யராஜுக்கும் நன்றி.‌ தயாரிப்பாளர் கே .ராஜன் என் நண்பர் தான். அவருக்கும் என் நன்றி.‌  இயக்குநர், இசையமைப்பாளர் மற்றும் நடித்த நடிகர்கள் நடிகைகள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

இயக்குநர் சாய் ராஜகோபால் பேசுகையில், ”ஒத்த ஓட்டு முத்தையா படத்தை வாழ்த்த வருகை தந்திருக்கும் அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் நன்றி. இந்தத் திரைப்படத்தில் 35 நட்சத்திர நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் என் மீது வைத்திருக்கும் அன்பின் காரணமாக குறைவான ஊதியத்தை பெற்றுக் கொண்டு நடித்தார்கள். அவர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.‌ 

 இந்தப் படம் உருவான விதம் ஆச்சரியமானது. அதனை உங்களிடத்தில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.  நடிகர் சிங்கமுத்துவின் மகன் வாசன் கார்த்திக் நடிப்பில் தயாராகும் ‘தேவர் ஹோட்டல்’ என்ற படத்திற்கான கதை விவாதத்திற்காகத்தான் அவருடைய அலுவலகத்திற்கு சென்று ஒரு வருடமாக திரைக்கதையை தயார் செய்து கொண்டிருந்தோம். திடீரென்று எதிர்பாராத விதமாக இந்த படத்தின் தயாரிப்பாளர் அங்கு வருகை தந்தார்.  என் மனைவி உடல் நலமில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருடன் எப்போதும் ஒரு உதவியாளர் இருக்க வேண்டும் என்ற நிலை. அந்தத் தருணத்தில் என்னுடைய மகனின் நண்பரான கோவை லட்சுமி ராஜன் எனக்கு அறிமுகமானார். அவருக்கு பெங்களூருவில் உள்ள தயாரிப்பாளர் ரவி ராஜா நண்பர்.  கொரோனா காலகட்டத்தின் போது நான் வீட்டில் இருந்தே நகைச்சுவை காட்சிகளை எழுதி அதனை யூடியூபில் பதிவேற்றிக் கொண்டிருந்தேன்.  அந்தத் தருணத்திலும் அண்ணன் கவுண்டமணி என்னிடம் போனில் தொடர்பு கொண்டு பேசுவார். அந்த நேரத்தில் நேரத்தை வீணடிக்காமல் இரண்டு திரைக்கதைகளை எழுதி இருக்கிறேன் என்று அவரிடம் சொன்னேன். அப்போது உடனே ‘எங்கே ஒரு கதையை சொல்லு கேட்போம்’ என்றார். போனிலேயே கதையை சொல்லத் தொடங்கினேன் ‘மூணு பொண்ணு-  அப்பா அம்மா –  அந்த மூணு‌ பொண்ணுங்களையும் அண்ணன் -தம்பிக்கு தான் கல்யாணம் பண்ணி கொடுக்கணும். அப்படின்னு நினைக்கிறாங்க. ஆனா அந்த மூணு பொண்ணுங்களும் ஏதோ ஒரு சூழ்நிலைல வேற வேற பசங்கள லவ் பண்றாங்க. அவங்க கல்யாணம் பண்ணிட்டாங்களா, இல்லையா? அந்த அப்பா கேரக்டர் அந்த மூன்று பசங்களுக்கும் கல்யாணத்தை பண்ணி வச்சாரா, இல்லையா?’ இதுதான் கதை என்றேன்.‌ கேட்டவுடன், ‘நன்றாக இருக்கிறது. குடும்பங்கள் அனைவரும் ரசிக்கும் வகையில் இருக்கிறது. இதை நான் செய்தால் நன்றாக இருக்கும்’ என்றார். உடனே நானும் ‘உங்களுக்காகத்தான் எழுதினேன்’ என்று ஒரு பொய்யை சொன்னேன். உடனே அவர், ‘நான் இதுவரை அப்பாவாக நடித்ததில்லையே..!’ என்றார்.  உடனே மூணு தங்கச்சி என்று மாற்றினேன். ஓகே சொன்னார். ‘கொரோனா முடிந்தவுடன் நீயும் தயாரிப்பாளரை தேடு, நானும் தயாரிப்பாளரை தேடுகிறேன்’ என்றார்.‌ 

 கொரோனா முடிந்தவுடன் கோவை லட்சுமி ராஜனுடன் நட்பு ஏற்பட்டது. அவர் மூலமாக தயாரிப்பாளர் ரவி ராஜாவின் அறிமுகமும், நட்பும் கிடைத்தது. அதன் பிறகு நாங்கள் மூன்று பேரும் கவுண்டமணியை சந்தித்தோம் .அதன் பிறகு அவர்களை சிங்கமுத்துவின் அலுவலகத்திற்கு அழைத்து வந்து கதையை சொன்னேன். அந்தத் தருணத்தில் என் மனைவியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தது, மனதில் சஞ்சலம் ஏற்பட்டது. சினிமாவா? மனைவியா? என இக்கட்டான சூழலில் மனைவியை கடவுள் காப்பாற்றுவான். 30 ஆண்டு காலமாக சினிமா மீதிருந்த காதல் காரணமாக மருத்துவமனையில் அருகில் இருந்த ஒருவரிடம் இரண்டு மணி நேரம் என் மனைவியை பாதுகாப்பாக உடனிருந்து கவனித்துக் கொள்ளுங்கள், நான் வந்து விடுகிறேன் என்று சொல்லிவிட்டு, கலை இயக்குநர் மகேசுடன் சிங்கமுத்துவின் அலுவலகத்திற்கு வந்து தயாரிப்பாளரை சந்தித்து கதையை சொன்னேன்.  அதன் பிறகு மருத்துவமனையில் இருந்த என்னுடைய மனைவி ஒரு வார காலத்திற்குப் பிறகு மறைந்து விட்டார். இந்த தகவல் தயாரிப்பாளர்களுக்கு தெரிந்தது. சற்று தாமதமாக தொடங்கலாம் என திட்டமிட்டிருந்த அவர்கள், என்னுடைய மன மாற்றத்திற்காக உடனடியாக படத்தின் பணிகளை தொடங்கினார்கள்.  அப்படி தொடங்கியது தான் இந்த படத்தின் பணிகள்.‌ தற்போது இந்த படம் நன்றாக வந்திருக்கிறது.  

 திரையுலகில் கவுண்டமணிக்காக நான் எழுபது படங்களில் எழுதி இருக்கிறேன். மற்ற நடிகர்களுக்காக 40 படங்களில் எழுதி இருக்கிறேன். தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். சினிமாவில் சாதிக்க நினைக்கும் அனைவருக்கும் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். மனதை தளர விடாமல் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருங்கள். நிச்சயம் உங்கள் திறமைக்கு ஏற்ப வாய்ப்பு கிடைக்கும். எழுபது படங்களில் எழுதி இருந்தாலும் இந்தப் படத்தில் இயக்குநராக பணியாற்றுவதற்கான வாய்ப்பினை வழங்கிய கவுண்டமணிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.  இந்தப் படத்தில் நான்கு பாடல்கள்-  ஒரு பாடலுக்கு ஒரு நாள் என நான்கு நாட்களில் அனைத்து பணிகளையும் நிறைவு செய்துவிட்டார் இசையமைப்பாளர் சித்தார்த். படத்தில் இரண்டு  பாடல்களை நான் எழுதி இருக்கிறேன். இந்தப் படத்தின் வெற்றி விழாவை மதுரையில் நடத்த விரும்புகிறோம். அந்த விழாவை கொண்டாடுவது ரசிகர்களின் கையில் தான் இருக்கிறது. அனைவருக்கும் நன்றி,” என்றார்.