ஒன்றிய அரசுக்கு வ.கௌதமன் கடும் கண்டனம்.
சுதந்திரத்திற்காகப் போராடிச் செத்தவர்களில் அதிகம் பேர் தமிழர்கள் என்று சொல்கிறது இந்திய ஒன்றியத்தின் சுதந்திரப் போராட்ட வரலாறு. உண்மை நிலை இப்படி இருக்க 26.01.2022 தலைநகர் டெல்லியில் நடைபெறவிருக்கும் குடியரசு தின அணிவகுப்பில், வெள்ளையர்களை ஓட ஓட அடித்துத் துரத்திய எங்கள் வேலுநாச்சியாரையும், உலகளாவிய வணிகம் எங்களாலும் செய்ய முடியும் என வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்து அன்றைய நாளிலேயே கப்பலோட்டிய எங்கள் வ.உ.சியையும், இந்திய ஒன்றியம் முழுக்க வாழ்கின்ற மக்களை சுதந்திர வேட்கையோடு தனது பாடல்கள் மூலம் தட்டி எழுப்பி போராட வைத்த எங்கள் பாரதியையும் உள்ளடக்கிய அலங்கார ஊர்தியினை இந்திய ஒன்றிய அரசு புறக்கணித்திருப்பது என்பது இப்பூமிப்பந்தின் ஆதி குடியான எங்கள் தமிழர் குடியினை அவமானப்படுத்தியதிற்கு சமமானது என்பதை தமிழ்ப் பேரரசு கட்சியின் சார்பாக, இந்திய ஒன்றிய அரசிற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய ஒன்றியத்தில் வெள்ளையர்களை முதன் முதலில் எதிர்த்ததோடு மட்டுமல்லாமல் ஒரு நெல்மணிக்கூட கப்பம் கட்ட முடியாது என மிகக்கடுமையான யுத்தம் செய்தவர் எங்கள் பூலித்தேவன். வெள்ளையர்களை நிலைக்குலைய வைத்த முதல் கலகம் வரலாற்று சிறப்பு மிக்க எங்கள் வேலூர் சிப்பாய்க் கலகம். தென்னாப்பிரிக்காவில் வழக்கறிஞராக வாழ்ந்து கொண்டிருந்த மகாத்மா காந்தியடிகள் அவர்களுக்கு சுதந்திர தாகத்தின் ஊற்றுக்கண் திறந்தவள் எங்கள் தில்லையாடி வள்ளியம்மை என்கிற தமிழச்சி. காந்தியடிகளுக்கு வந்த உயிராபத்தை தன்னுடலில் தாங்கி தென்னாப்பிரிக்க மண்ணில் உயிர் துறந்தவர் எங்கள் சாமி நாகப்பன் படையாட்சி என்கிற ஒரு தமிழன். நேதாஜியின் ஐ. என்.ஏ படையில் மலேசியா, பர்மா, சிங்கப்பூரில் வாழ்ந்த தமிழர்கள் மட்டுமல்ல, தாய்த் தமிழ்நாட்டிலிருந்தும் கூட்டம் கூட்டமாக ஓடிச்சென்று இணைந்து எதிரிகளோடு யுத்தம் செய்து மாண்டவர்கள் எங்கள் தமிழர்கள். கார்கில் யுத்தத்தில் மட்டும் அல்ல, இன்றும் கூட இந்திய ஒன்றியத்தின் எந்த எல்லையில் சண்டை நடந்தாலும் 10 ராணுவ வீரர்கள் செத்தால் அதில் பாதி பேர்களின் உடல்கள் எங்கள் தமிழ் மண்ணிற்கு வருகின்றன. யதார்த்தம் இப்படி இருக்க வெளிநாட்டுப் பார்வையாளர்களுக்கு தமிழ்நாட்டு சுதந்திரப் போராளிகளை தெரியாது என உப்புசப்பற்ற ஒரு காரணத்தைச் சொல்லி எங்களின் அலங்கார ஊர்தியினை மறுத்திருப்பதென்பது திமிர்த்தனத்தை விடவும் மேலானதாகத்தான் நாங்கள் பார்க்க வேண்டியிருக்கிறது. இதேபோன்று மேற்கு வங்கம் மற்றும் கேரளா நாட்டின் ஊர்த்திகளையும் பாசிசத்தோடு மறுத்து பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களின் வாகனங்களை மட்டும் அனுமதித்திருப்பதென்பது நேர்மையற்றது மட்டுமல்ல, இது ஒரு அறமற்ற செயல் என்பதையும் இந்திய ஒன்றிய அரசு புரிந்துகொண்டு தங்களை திருத்திக்கொள்ள வேண்டும்.
குடிசை ஓரத்தில் முக்காடிட்டு உட்கார்ந்து கொண்டும் கோவணத்தோடு மாடு பிடித்துக்கொண்டும் வரும் ஊர்தி என்றால் ஏற்பீர்கள். வாளோடும் வேலோடும் முறுக்கிய மீசைகளோடும் வரும் ஊர்தி என்றால் மறுப்பீர்களா? பாராளுமன்றத்திலும் ஐக்கிய நாடுகள் சபையிலும் ஏன் சீன எல்லையிலும் கூட எங்கள் வள்ளுவனை வானுயர புகழும் மோடி அவர்களே! உங்களுக்கு கூட தெரியாமலா இந்த புறந்தள்ளுதல் நடந்திருக்கும்? மாபெரும் வரலாறு கொண்ட, தொன்மைமிக்க எங்கள் தமிழ்நாட்டையும், தமிழர் மாண்பையும் புறக்கணித்தாலோ அல்லது அவமானப்படுத்தினாலோ நாங்கள் தொடர்ந்து வேடிக்கை பார்க்க மாட்டோம் என்பதனை எச்சரிக்கையோடு தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாடு அரசும் இதனை சாதாரண ஒரு நிகழ்வாக எடுத்துக் கொள்ளாமல், உடனடியாக மிகக் கடுமையான எதிர்ப்பினை காட்டவேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன்.