தமிழ்நாடு எங்களுடைய தந்தையர் நாடு என்று நம்பி ஓடிவந்து 1983இல் தொடங்கி இன்றுவரை கிட்டத்தட்ட மூன்று தலைமுறைகளாய் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிற ஈழத் தமிழர்களுக்கு, மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 110 விதியின் கீழ் பல நல்ல திட்டங்களையும் சலுகைகளையும் அறிவித்துள்ளதைத் தமிழ்ப் பேரரசு கட்சியின் சார்பாக வரவேற்கிறேன் மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதே நேரத்தில் திருச்சி சிறப்பு முகாமில் உள்ள ஈழத் தமிழர்களுக்கான விடுதலையை அறிவிக்காதது வருத்தமளிக்கிறது.
ஏதிலியர் முகாம்களில் பழைய பழுதடைந்த வீடுகளில் வசித்துக் கொண்டிருக்கிற 7,469 வீடுகளைக் கட்டித்தருவதற்கு 231 கோடியே 54 லட்சம் ரூபாய் ஒதுக்கியும் அதிலும் 3,510 வீடுகளை முதற்கட்டமாக கட்டித் தருவதற்கு 108 கோடியே 81 லட்சம் ரூபாய் ஒதுக்கியிருப்பதும் வரவேற்கத்தக்கது.
நல்ல மதிப்பெண் எடுத்த 50 மாணவர்களுக்கு பொறியியல் படிப்புக்கான இலவசக் கல்வியும், அவர்களுக்கான விடுதிக் கட்டணத்தையும் அரசே ஏற்குமென்றும், வேளாண் படிப்பிற்காக 5 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அதற்கான செலவுகளையும் அரசே ஏற்றுப் படிக்க வைக்கும் எனவும் அறிவித்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. அதே சூழலில் ஈழத்தமிழர்களின் நீண்டநாள் கோரிக்கையான மருத்துவப் படிப்பிலும் தங்களுக்கு இடமளிக்க வேண்டும் என்பதைத் பரிசீலனை செய்து, மருத்துவ படிப்பிற்கான இடங்களையும் தாங்கள் உடனடியாக ஒதுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
இரட்டைக் குடியுரிமை, திருச்சி சிறப்பு முகாமில் உள்ள ஈழத் தமிழர்கள் விடுதலை ஆகியவை தொடர்பாக எம்.பி.,- அமைச்சர், துறைச் செயலர் உள்ளிட்டவர்களோடு ஒரு குழு அமைத்து விரைந்து ஆய்வு செய்யப்படும் என்று அறிவித்திருக்கிறீர்கள். சமீப நாட்களாக திருச்சி சிறப்பு முகாமில் வாழும் 70க்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்கள் தங்களுக்கான தண்டனைக் காலம் முடிந்த பின்பும் விடுதலை கிடைக்காமல் போனதால் அவர்களில் விரக்தியான பலர் கடுமையான தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நிலையில் அவர்களுக்கான விடுதலையைப் பெற விரைந்து தீர்வு காண்போம் என்று அறிவித்திருப்பது சற்று ஆறுதலாக இருக்கிறது. இருப்பினும் அறிவிப்பில், தண்டனைக் காலம் முடிந்தும் சிறை தண்டனை அனுபவிக்கும் அப்பாவித் தமிழர்களின் விடுதலைக்கான நாள் குறித்த அறிவிப்பு இடம்பெறாதது பெருத்த வருத்தமளிக்கிறது. 2016இல் 6 நபர்களை விடுதலை செய்ததை முன்னுதாரணமாக கொண்டு அவர்களை விரைவாக விடுதலை செய்ய, விரைந்து முடிவெடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள ஏதிலியர் முகாமில் அவர்களின் குடும்பத்தோடு வசிக்க விருப்பப்படுகிறவர்களையும் முகாமை விட்டு வெளியே பதிந்து இருப்பவர்கள் அல்லது ஈழத்திற்கு போக நினைப்பவர்களையும் அவரரவர்களின் விருப்பப்படி அனுப்பி வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். சிறப்பு முகாம்களில் உள்ள ஒரு சிலரை சிங்கள அதிகார வர்க்கம் தங்கள் நாட்டிற்கு அழைத்துச் சென்று மறைமுகமாக மீண்டும் ஒரு இனப்படுகொலையை அரங்கேறச் செய்வதற்கு காத்திருக்கிறது என்பதையும் தங்களின் மேலான கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். அதேபோன்று மிக முக்கியமாக திருச்சி சிறப்பு முகாம்களில் தண்டனை காலங்களை கழித்தவர்களின் தண்டனைக் காலத்தையும் கணக்கில் எடுத்து அரசு போர்க்கால அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்றும் உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன்.
ஏதிலியர் முகாமிலுள்ள நம் தமிழீழ உறவுகளுக்கு தொகுப்பு வீடுகள் வேண்டியும், திருச்சி சிறப்பு முகாமிலுள்ள நம் ஈழச் சொந்தங்கள் விடுதலை சம்பந்தமாகவும் நாங்கள் எடுத்த கடுமையான முன்னெடுப்பிற்கு, பெரும் தவிப்போடு உடனிருந்து உந்து சக்தியாக விளங்கிய உலகத் தமிழர்களுக்கும், உயிரைப் பணயம் வைத்துப் போராடிய சிறப்பு முகாம் ஈழச் சொந்தங்களுக்கும், தோளோடு தோள் நின்ற அனைத்து அரசியல் கட்சித் தலைமைகளுக்கும், பெரும் மரியாதைக்குரிய ஊடகத் தோழமைகளுக்கும், அரசு அதிகாரிகள், மாண்புமிகு அமைச்சர்கள், மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் மீண்டும் எனது நெகிழ்ந்த நன்றிகள்.
வ.கெளதமன்
பொதுச் செயலாளர்
தமிழ்ப் பேரரசு கட்சி