“தோழர் சேகுவாரா” திரைப்படம்

க்ரெய் மேஜிக் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் அலெக்ஸ் இயக்கத்தில் சத்தியராஜ், நாஞ்சில் சம்பத், மொட்டை ராஜேந்திரன், கூல் சுரேஷ் ஆகியோர் நடித்திருக்கும் திரைப்படம் “தோழர் சேகுவாரா”. படத்தின் ஆரம்பத்திலேயே ஒரு கல்லூரி வளாகத்தில் பலர் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடக்கிறார்கள். ஏன் கொலை செய்யப்பட்டார்கள். கொலை செய்தது யார்? என்பதுதான் கதை. ஒடுக்கப்பட்டவர்களின் கை ஓங்கினால்தான் உலகம் சமநிலை பெறும் என்பதை துணிச்சலாக சொல்லியிருக்கும் இயக்குநர் அலெக்ஸ்சின் சிந்தனை போற்றத்தக்கதாகும். குனிந்தவன் நிமிர வேண்டும், நிமிர்ந்து நின்றவன் தன் தவறை உணரவேண்டும் என்பதை திரையில் சித்திரிக்கப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட ஒரு மாணவன் கல்லூரியில் பல இன்னல்களுக்கிடையே சேர்க்கப்படுகிறான். அக்கல்லூரியின் முதல்வர் முதல் ஆசிரியர்கள் உயர்சாதி மாணவர்கள் வரை தாழ்த்தப்பட்ட மாணவனை கீழ்த்தரமாக நடத்துகிறார்கள். அதையெல்லாம் அம்மாணவன் எப்படி தாங்கிக் கொண்டு நிமிர்கிறான் என்பதை திரைக்கதை சொல்லுகிறது. பேராசிரியராக வரும் சத்தியராஜின் ஊக்கம் தரும் வசனமும், சமூக சீர்திருத்தவாதியாக நடித்திருக்கும் நாஞ்சில் சம்பத்தின் சுயமரியாதை கருத்துக்களும் படம் பார்ப்பவர்களின் நெஞ்சங்களை நிமிர வைக்கிறது. அரசியலின் தத்துவத்தை அப்படியே வெளிச்சம் போட்டு நடித்திருக்கிறார் கூல் சுரேஷ். மொட்டை ராஜேந்திரனின் நகைச்சுவை பரவாயில்லை. உயர் சாதியினராக நடித்திருக்கும் அனைவரும் தங்களின் கதாபாத்திரத்தின் தன்மையை நன்கு உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.