கண்ட்ரிசைடு பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சாது ஃபெர்லிங்டன் இயக்கத்தில் சிறுவர்களின் குணாதிசயங்களை காட்சியாக காவியம் படைத்திருக்கும் படம் “சிறுவன் சாமுவேல்”. ஒரு ஏழைச்சிறுவன் மட்டை பந்தாட்ட விளையாடின் மட்டையை வாங்க ஆசைபடுகிறான். அதற்கு பணம் இல்லை என்று கூறிவிடுகிறார் அவனது தந்தை. மட்டை பந்தாட்ட வீரர்களின் நிழற்படமுள்ள 100 அட்டைகளை சேகரித்தால் ஒரு பந்தாட்ட மட்டை கிடைக்கும் என்ற அறிவிப்பு வருகிறது. அந்த நூறு அட்டைகளை சேகரிக்க அச்சிறுவன் எடுக்கும் முயற்சிதான் கதை. அக்கிராமத்து மக்களையே நடிகர்களாக்கியிருக்கிறார் இயக்குநர். முகத்தில் அரிதாரமும் உதட்டில் சாயமும் பூசாத நடிகைகளை யதார்த்தமாக உலாவவிட்டு படமாக்கியிருக்கும் இயக்குநரை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. பசுமையான கிராமத்தை சூரிய வெளிச்சத்திலேயே படம்பிடிக்கும் சூத்திரத்தை கையாண்டிருக்கும் ஒளிப்பதிவாளர் சிவானந்த காந்தி, பாலுமகேந்திராவை நம் நினைவுக்கு கொண்டு வருகிறார். சிறுவன் அஜிதன் தவசிமுத்து கண்களினாலும் முகத்தில் காட்டும் உணர்வுகளினாலுமே வசனத்தை பேசுகிறான். சிறிதும் சினிமாத்தனம் இல்லாமல் காவியம் படைத்திருக்கும் இப்படம் தேசியவிருதுக்கு தகுதியானவை……….