“பராரி” திரைப்பட விமர்சனம்

ஹரிசங்கர் தயாரிப்பில் எழில் பெரியவேதி இயக்கத்தில் ஹரிசங்கர், சங்கீதா கல்யாண் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “பராரி”. திருவண்ணாமலை அருகிலுள்ள ஒரு கிராமத்தில் தாழ்த்தப்பட்ட இனத்தவர்களும் ஆதிக்க இனத்தவர்களும் வாழ்கிறார்கள். இரு இனத்தவர்களுக்கும் குலதெய்வமும் குடிநீர் தொட்டியும் ஒன்றுதான். தாழ்த்தப்பட்டவர்கள் குலதெய்வத்துக்கு பன்றி இறைச்சியையும் மாட்டு இறைச்சியையும் படையல் போடுகிறார்கள். அவர்கள் போனபிறகு அதே தெய்வத்திற்கு ஆதிக்க இனத்தவர்கள் ஆட்டு இறைச்சியையும் கோழி இறைச்சியையும் படையல் போடுகிறார்கள். இதில் அவர்களுக்குள் சண்டை சச்சரவுகள் வருகிறது. அதனால் ஆதிக்க் இனத்தவர்கள் தாழ்த்தப்பட்ட இனத்தவர்களுக்கு செல்லும் குடிநீர் தொட்டிக்கு பூட்டு போட்டுவிடுகிறார்கள். பிறகு இரு இனத்தவர்களும் பிழைப்புக்காக பெங்களூரில் உள்ள ஒரு பழச்சாறு தொழிற்சாலைக்கு வேலைக்கு போகிறார்கள். மேல் இனத்துப் பெண்ணான சங்கீதா கீழ் இனத்தவரான ஹரியை காதலிக்கிறாள். இவர்களது திருமணம் நடந்ததா? கிராமத்தில் குடிநீர் தொட்டிக்கு போடப்பட்ட பூட்டு உடைக்கப்பட்டதா? என்பதுதான் கதை. படத்தின் முன்பகுதியில் வழக்கமாக எடுக்கப்படும் திரைப்படங்களில் மேல்சாதிப் பெண்ணை கீழ்சாதி பையன் காதலிப்பான். இரு இனத்தவர்களுக்கும் வெட்டுக் குத்து நடக்கும். அந்தவகையான படம்தான் இதுவும் என்று எண்ணத்தோன்றுகிறது. ஆனால் இடைவேளைக்குப்பிறகு கதையின் போக்கையே மாற்றி பாராட்டைப் பெற்றிருக்கிறார் இயக்குநர் எழில் பெரியவேதி. அரசியல் சூழ்ச்சிக்கு பலியாகும் மக்களின் மனநிலையை திரையில் காணமுடிகிறது. உச்சக்கட்ட காட்சியின் உரையாடல்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்ளும் மக்களை சிந்திக்க வைக்கிறது. இயற்கையான நடிப்பால் ஹரியும் சங்கீதாவும் மிளிர்கிறார்கள். உயிரோட்டமான ஒளிப்பதிவு கண்ணுக்கு விருந்தாகிறது. பழச்சாறு தொழிற்சாலையில் பாடும்பாட்டு ரசிக்க வைக்கிறது. நல்லதொரு செய்தியை சொல்லியிருக்கிறார் இயக்குநர் எழில் பெருயவேதி.