என்னுடைய தீரா காதல் என் ரசிகர்கள் தான் – சீயான் விக்ரம்

ஹெச்.ஆர்.பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிப்பில் இயக்குநர் எஸ். யூ. அருண் குமார் இயக்கத்தில், ‘சீயான்’ விக்ரம், எஸ். ஜே. சூர்யா , சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வீர தீர சூரன் பார்ட் 2 ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில்  நடைபெற்றது.  இவ்விழாவில் நடிகர் சீயான் விக்ரம் பேசியதாவது: ” இங்கு வந்தவர்கள் படத்தைப் பற்றி நிறைய விசயத்தை சொன்னார்கள். அதை கேட்டும், பார்த்தும் ரசித்தேன்.  நான் படத்தைப் பற்றி பேசுவதை விட படம் உங்களிடம் நிறைய பேசும். நாங்கள் சொல்ல வேண்டிய விசயங்கள் அனைத்தும் படத்தில் இருக்கிறது.  பார்த்து மகிழ்ச்சி அடையுங்கள். ‘சித்தா’ என்றொரு படத்தை பார்த்தேன். அந்தப் படத்தை பார்த்த பிறகு, இயக்குநர் அருண் குமார் என்று அழைத்ததை விட ‘சித்தா’ என்றுதான் அழைத்திருக்கிறேன். அந்த அளவிற்கு அந்தப் படம் என்னை பாதித்தது. ‘சித்தா’ சிறந்த படம். அவர் எந்த படத்தை இயக்கினாலும்.. அதை வித்தியாசமாக இயக்குகிறார். ‘சித்தா’ படத்தை பார்த்த பிறகு இவரது இயக்கத்தில் நடிக்க வேண்டும் என தீர்மானித்தேன். அதுதான் வீரதீர சூரன். என்னுடைய ரசிகர்கள் நீண்ட நாட்களாக சீயான் விக்ரம் வேற மாதிரியான படங்களில் நடிக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருந்தார்கள். அதுபோன்ற படத்தில் நடிக்க வேண்டும் என்று நானும் காத்திருந்தேன். அதற்காக முயற்சி செய்து கொண்டு தான் இருந்தேன். இயக்குநர் சொன்ன கரு எனக்கு பிடித்திருந்தது. அவருடைய ஸ்டைலும் எனக்கு தெரியும். நாங்கள் இருவரும் ஒரே அலைவரிசையில் இருந்தோம். ரசிகர்களுக்காக ரகளையான ஒரு படம் . ஆனால் ஒரு எமோஷனலான படம். ‘சேதுபதி’ மாதிரி இருக்க வேண்டும்… அதில் ‘சித்தா’ போன்றதொரு விசயம் இடம் பிடித்திருக்க வேண்டும் என நினைத்தேன். அந்த மாதிரி படம்தான் வீரதீர சூரன்.  ரசிகர்களுக்காக உருவாகி இருக்கும் திரைப்படம்.