ஐ. ஐ. டி யை சனாதனத்தின் பிடியில் இருந்த மீட்க 5.7.2021 அன்று தமிழ்நாடு முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. சென்னை உள்ளிட்ட இந்தியாவின் ஏறக்குறைய அனைத்து ஐ. ஐ. டி களிலும் இட ஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்துவதில்லை. ஆராய்ச்சி, முனைவர் படிப்புகளில் மிக மோசமாக இட ஒதுக்கீடுகள் மீறப்படுவதை நிறைய ஆய்வுகள், ஆர். டி. ஐ பதில்கள், மிக அண்மையில் நாடாளுமன்றத்தில் மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் எழுப்பிய கேள்விகளுக்கான பதில்கள் அம்பலப்படுத்தியுள்ளன. இந்த தடைகளை எல்லாம் மீறி பேராசியர்களாக, மாணவர்களாக ஐ. ஐ. டி க்குள் வருபவர்களை உயர்சாதி ஆதிக்கம் நிழல் போல் துரத்தி துன்புறுத்துகிறது. இதன் தொடர்ச்சியாகவே சென்னை ஐ. ஐ. டி உதவிப் பேராசிரியர் விபின் பணி விலகல் கடிதம் கொடுத்திருக்கிறார். இதற்கெல்லாம் தீர்வு காண்பதற்கு மாறாக இந்திய ஒன்றிய கல்வி அமைச்சகம் அமைத்த குழு ஐ. ஐ. டி ஆசிரியர் நியமனத்தில் இட ஒதுக்கீடே வேண்டாம் எனப் பரிந்துரைத்துள்ளது. இத்தகைய அநீதிக்கு எதிராக பல்வேறு அமைப்புகள் ஒருங்கிணைந்து தமிழ்நாடு முழுவதும் 05.07.2021 திங்கள்கிழமை அன்று கூட்டாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திடவுள்ளன. சமூகநீதிக்கான சமரில் தமிழ்நாடு மக்கள் கரம் இணைத்திட வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இப்படிக்கு
*கே.சாமுவேல்ராஜ்*
தீண்டாமை ஒழிப்பு முன்னணி
*கொளத்தூர் மணி*
திராவிடர் விடுதலைக் கழகம்
*கோவை. ராமகிருஷ்ணன்*
தந்தை பெரியார் திராவிடர் கழகம்
*இரா.அதியமான்*
ஆதித்தமிழர் பேரவை
*கு.ஜக்கையன்*
ஆதித்தமிழர் கட்சி
*நாகை. திருவள்ளுவன்*
தமிழ்ப் புலிகள் கட்சி
*வை. தேவதாசு*
ஐந்திணை மக்கள் கட்சி
*வெண்மணி*
திராவிடர் தமிழர் கட்சி