மதுரை புத்தகத் திருவிழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா,இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., பங்கேற்று “இலக்கியத்தில் காதல்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
“இலக்கியம் என்பது நாம் அன்றாடம் பேசும் மொழியில் இருக்கிறது. நமது பழமொழிகள் கூட எதுகை மோனை கொண்ட இலக்கிய நயம் உடையவை. தமிழ் இலக்கியத்தில் காதல் என்ற சொல் அன்பு என்ற பொருளிலேயே பெரும்பாலும் கையாளப்பட்டுள்ளது. தாய் தந்தை போன்ற உறவுகளின் மீது கொண்டுள்ள அன்பும், கடவுள், செய்யும் தொழில் ஆகியவற்றின் மீது கொண்ட அன்பும் கூட காதல் என்ற பொருளில் கையாளப்பட்டுள்ளது. தமிழ் இலக்கியம் வாழ்வியல் தத்துவம் நிறைந்தது. இலக்கியத்தில் உள்ள செரிவான கருத்துக்கள் திரை இசை பாடல்களில் பயன்படுத்தப்பட்ட போது அவை சாமானிய மக்களையும் எளிதாக சென்றடைந்தது. சங்க இலக்கியம் தொடங்கி சமகால இலக்கியம் வரை படைப்புகளும் காதல் என்ற உணர்வின் மேன்மையை எப்போதும் எடுத்துரைக்கிறது. காதலர்கள், கணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும் என்று தமிழ் இலக்கியங்களில் எண்ணற்ற பாடல்கள் உள்ளன. இன்பம் துன்பம் என எத்தகைய சூழ்நிலை வந்தாலும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் நட்புணர்வோடு உள்ள உறவு எப்போதும் நிலைத்திருக்கும். இதனை தமிழ் இலக்கியங்கள் தொடர்ந்து வலியுறுத்திகிறது என முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., பேசினார்.
முன்னதாக சிவகுருநாதன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று “திரை இசையில் இலக்கியம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ர.சக்திவேல், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் சி குருமூர்த்தி, வருவாய் கோட்டாட்சியர்கள் ர.த.சாலினி, ஜெயந்தி உட்பட பலர் பங்கேற்றனர்.