“தனிக் குடித்தனம்” மேடை நாடகம்

ஜே.சி.கிரியேஷன் வழங்கும் “தனிக்குடித்தனம்” மேடை நாடகத்தை  ஜி.எஸ்.பிரசாந்த் தயாரிக்க, வி.பி.எஸ்.ஶ்ரீராமன் கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார்.  இந்நாடகத்தில் கீதா நாராயணன், ஜெயஶ்ரீ பிரிதம், அனு சுரேஷ், வி.பி.எஸ். ஶ்ரீராமன், சி.கணபதி ஷங்கர், சாய் பிரசாத் ஶ்ரீராம், பாஸ்கர், சுப்பிரமணியன், எஸ்.ஆனந்த், வெங்கடவரதன் ஆகியோர் நடித்துள்ளார்கள்.

மகனுக்கு, மணமகள் தேடும் ஒரு குடும்பம். மகளுக்கு, மாப்பிள்ளை தேடும் ஒரு குடும்பம். இரண்டு குடும்பத்தார்களும் ஜாதகம் பொருத்தம் பார்த்து திருமணம் குதூகலமாக நடைபெறுகிறது. மாப்பிள்ளை வீட்டுக்குச் செல்லும் தனது மகளை மாமா மாமியாரைவிட்டு பிரிந்து தனிக்குடித்தனம் வருவதற்கான சூழ்ச்சிகளை செய்கிறார் மகளின் தாய் மதுரவேணி. சம்மந்தி வீட்டில் இல்லாத நேரம் பார்த்து மகளின் வீட்டுக்கு வந்து தனிக்குடித்தனம் வருவதற்கான துர்போதனைகளை மகளுக்கு சொல்லி கொடுக்கிறார். அதனால் தனிகுடித்தனம் செல்ல வேண்டுமென்று கணவரிடம் நாசூக்காக சில காரணங்களை சொல்லி கணவனை சம்மதிக்க வைக்கிறார் மனைவி கமலா. முடிவு என்னானது என்பதை நாடகத்தின் உச்சக்கட்ட காட்சியில் அனைவரையும் எழுந்து நின்று கைத்தட்ட வைத்துவிட்டார் நாடகத்தின் கதாசிரியரும் வசனகர்த்தாவும் இயக்குநருமான வி.பி.எஸ்.ஶ்ரீராம். பெரியப்பா சுந்தரேசன் என்ற கதாபாத்திரதில் நடித்த இயக்குநர் ஶ்ரீராமுவுக்கு எனது தனிபட்ட வாழ்த்துக்கள். சிந்திக்க வைக்கும் சிறந்த உரையாடல்கள். ஒவ்வொரு உரையாடலும் செவி வழியாக உள்ளத்தில் ஊடுருவி செல்கிறது.

நாடகத்தை தொய்வில்லாமல் கலகலப்பாக்கியது மதுரவேணி கதாபாத்திரத்தில் நடித்த கீதா நாராயணன். வாய்மொழியிலும் உடல் மெழியிலும் பேசி பார்வையாளர்களை கவர்ந்துவிட்டார். உத்காரணத்துக்கு ஒன்று சொல்ல வேண்டுமானால், மாப்பிள்ளையை தனியாக அழைத்துவர நாய்குட்டி கதை ஒன்றை மகளுக்கு சொல்லுவார். அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்துவிட்டது. உடலை ஒடுக்கி கையை நீட்டி அடடா அற்புதம் தோழி உங்கள் நடிப்பு.

அம்மாவையும் விட்டுக் கொடுக்காமல் அதே நேரத்தில் மாமா, மாமி, கணவரையும் விட்டுக் கொடுக்காமல் கழுவுகிற மீனில் நழுவும் மீனாக நடித்திருக்கிறார் கமலா கதாபாத்திரத்தில் நடித்த கதாநாயகி அனு சுரேஷ்.

உச்சக்கட்ட காட்சியில் பார்வையாளர்கள் அனைவரையும் அமைதியாக்கி தாய் தந்தையர்களுக்கு பெருமை சேர்க்கிறார் கதாநாயகன் சாய் பிரசாந்த். வசனம் உயிர்மூச்சி என்றால்,அதனை வெளிப்படுத்த உடலால்தான் முடியும்.உச்சக்கட்ட காட்சியில் கதாசிரியர் எழுதிய உயிர்த்துடிப்பான வசனத்தை உள்வாங்கி அதை நயமுற வெளிப்படுத்திய சாய் பிரசாந்தை பாராட்டாமல் இருக்க முடியாது. ‘புதையல்’ என்ற திரைப்படத்தில் நடிகர் சந்திரபாபு நடிகை பத்மினிக்கு ஒரு காதல் கடிதம் எழுதி தபாலில் அனுப்பியிருப்பார்.  அதை தபால்க்காரரான சிவாஜி பத்மினிக்கு படித்துக் காட்டுவார். சிவாஜி படிக்கும் உச்சரிப்பின்  அழகை கேட்டு கடிதம் எழுதிய சந்திரபாபுவை மறந்து விட்டு படித்துக்காட்டிய சிவாஜியை காதலித்து விடுவார் பத்மினி. அந்த நிலையில்தான் ஶ்ரீராம் எழுதிய வசனத்தை சாய் பிரசாந்த் பேசும்போது பார்வையாளர்களுக்கும் ஏற்பட்டது.

தாத்தாவாக நடித்திருக்கும் கணபதி ஷங்கர் குடும்பத்தில் மூத்த உறுப்பினர் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி நடித்திருக்கிறார். நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் வரதட்சணை சீர்சிரத்தைகள் எல்லாம் பேசிவிட்டு திரும்பும் நேரத்தில், மணப்பெண்ணின் அம்மாவிடம் ஒரு காகித குறிப்பை கொடுத்துவிட்டு, “நாங்கள் எல்லாம் போன பிறகு தனியாக படித்துப் பாருங்கள்” என்று கூறிவிட்டு சென்று விடுவார். இன்னும் வரதட்சணையாக இவர்

என்னவெல்லாம் கேட்கப் போகிறாராரோ? என்ற பெரும்மூச்சில் மணமகளின் அம்மாவும் பார்வையாளர்களும் காதை தீட்டிக்கொண்டிருக்க, அந்த குறிப்புகள் குத்துவிளக்காக ஒளி வீசியது. தாத்தாவின் உருவத்திற்கேற்றபடி உள்ளமும் விரிந்து பறந்து காணப்பட்டது.

மொத்தத்தில் தனிகுடித்தனத்தை ஒருமுறயல்ல பலமுறை பார்க்க வேண்டிய நாடகம்.

-சிவசண்முகப் பிரியன்-