திருச்சி அருகே உள்ள புலிவலம் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து தளர்ச்சி இல்லா தொடர் முயற்சிகளாலும் கடுமையான பயிற்சிகளாலும் நான்காவது ஆசிய ரோல்பால் விளையாட்டில் இந்திய அணி சார்பில் பங்கேற்று சாம்பியன் பட்டம் பெற்று, இந்தியாவுக்கும் தமிழ்நாட்டிற்கும் தனிப் பெருமை சேர்த்துள்ளார் வசீமா என்ற மாணவி. இந்தப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்பதற்காக கல்வியிலும் முன்னணி மாணவியான அவர் இறுதி பருவத் தேர்வை எழுத இயலவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. திருச்சியில் உள்ள புகழ்பெற்ற ஜமால் முகமது கல்லூரியின் மாணவியாகிய வசீமா ஒரு சாதாரண தொழிலாளியின் மகளாகப் பிறந்து, கல்வி நிறுவனங்களும் குடும்பத்தினரும் தந்த ஊக்கத்தால் இந்த சாதனையைப் படைத்துள்ளார். ரோல் பால் என்பது மிகுந்த சிரமம் உடைய ஒரு விளையாட்டு ஆகும். உருளைகள் வைத்த காலணிகளை அணிந்து ஆடப்படும் இந்த விளையாட்டில் ஆசியாவின் 10 நாடுகள் பங்கேற்றுள்ளன.
கோவாவில் உள்ள மனோகர் பாரிக்கர் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ஆசிய அளவிலான நான்காவது ரோல் பால் சாம்பியன் பட்டத்துக்கான விளையாட்டில் இந்தியா, இலங்கை, ஈரான், மியான்மர், நேபாளம், மலேசியா, ஓமன், வியட்நாம், பிலிப்பைன்ஸ், பூட்டான் உள்ளிட்ட நாடுகள் பங்கேற்றன இறுதிப்போட்டியில் ஈரான் அணியை எதிர்கொண்டு இந்திய ரோல்பால் மகளிர் அணி வெற்றி பெற்றுள்ளது. மூன்றுக்கு இரண்டு என்ற கோல் கணக்கில் இந்திய மகளிர் ரோல்பால் அணி வெற்றி பெற்றுள்ளது. இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு சாம்பியன் பட்ட வென்ற வசீமாவும் ஆண்கள் பிரிவில் சிவச்சந்திரனும் பாராட்டு பெற்றுள்ளனர். இருவரும் தமிழ்நாட்டினர் என்பது நமக்கு கூடுதல் சிறப்பாகும். இருவருக்கும் தமிழ்நாடு அரசு உரிய அங்கீகாரம் வழங்கி கவுரவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.