பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட டிசம்பர் 6 அன்று தமுமுக சார்பில் விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம்!

இந்திய நாட்டின் பீடுமிகு வரலாற்றுச் சின்னமாக 450 ஆண்டுகாலம் நிலைபெற்றிருந்த அயோத்தி பாபரி மஸ்ஜித், உச்ச நீதிமன்ற உத்தரவுகளையும், இந்நாட்டின் சட்டங்களையும் மீறி மதவாத பாசிச கும்பலால் டிசம்பர் 6, 1992 ஆம் ஆண்டு பட்டப்பகலில் இடித்துத் தகர்க்கப்பட்டது. உலக அரங்கில் இதனால் நம் தாய்நாடு தலைகுனிந்து நிற்க நேர்ந்தது. பாபரி மஸ்ஜித் இடிப்பிற்குக் காரணமான குற்றவாளிகளை 17 ஆண்டுகால நெடிய ஆய்வுக்குப்பிறகு நீதிபதி லிபரான் ஆணையம் பட்டியல் போட்டது, ஆனால் அக்குற்றத்திற்காக ஒருவர்கூட தண்டிக்கப்பட வில்லை. பாபரி மஸ்ஜித் வழக்கில் முதலில் அலஹாபாத் நீதிமன்றம் அதை மூன்றாகப் பங்கு பிரித்து அதில் ஒரு பங்கு முஸ்லிம்களுக்கு என்றது. மேல்முறையீட்டு விசாரணையை பல்லாண்டு காலம் இழுத்தடித்த உச்சநீதிமன்றம், பாபரி மஸ்ஜித் வழக்கில் வழங்கிய தீர்ப்பு தேசத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

* பாபரி மஸ்ஜித் எந்த ஒரு கோவிலையும் இடித்துவிட்டு கட்டப்படவில்லை
* பாபரி மஸஜித்தின் கீழ் எந்தக் கோவிலும் இல்லை
* 1949 டிசம்பர் 22ல் அங்கு அத்துமீறி சிலைகள் வைக்கப்பட்டன.
* 1992 டிசம்பர் 6 அன்று  சட்ட விரோதமாக பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டது

என முஸ்லிம்கள் தரப்பு கூறிய அனைத்தையும் உண்மைப்படுத்தி, தீர்ப்புரையில் குறிப்பிட்ட உச்சநீதிமன்றம், பாபரி மஸ்ஜித் நின்றிருந்த நிலத்தை, நம்பிக்கை அடிப்படையில் சங்பரிவார் தரப்பிற்கு வழங்கியது. ஒன்றிய அரசு அறக்கட்டளை அமைத்து அங்கு ராமர் கோவில் கட்ட வழிப் போட்டது.
முஸ்லிம்களுக்கு 5 ஏக்கர் மாற்று நிலத்தை ஆறுதல் பரிசாக வழங்கியது. பாபரி மஸ்ஜித் நிலம், மதவாத பாசிஸ்டுகளுக்கு உரியதில்லை என்று நன்கு தெரிந்தும் ஏன் அவ்விடம் நீதிமன்றத்தால் முஸ்லிம்களிடம் ஒப்படைக்கப்படாமல் சங்பரிவார் தரப்பிற்கு பிடுங்கித் தரப்பட்டது. இந்தக் கேள்வியை ஆழமாக சிந்திப்போர்க்கு, டிசம்பர் 6 அன்று தமுமுக நடத்தும் விழிப்புணர்வு ஆர்ப்பாட்டத்தின் தேவை விளங்கும். இந்த நாட்டில் பாபரி மஸ்ஜிதிற்கு பிறகு எந்தவொரு வழிபாட்டுத் தளத்தின்  மீது வன்முறை வெறியாட்டம் நடத்தப்பட்டுவிடக்கூடாது

– சங்பரிவாரம் குறிவைக்கும் காசி, மதுரா பள்ளிவாசல்கள் பாதுக்காக்கப்பட வேண்டும்.
– சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தப் பட வேண்டும் – சிறுபான்மை மக்களின் வழிபாட்டு உரிமை நிலைநாட்டப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தமுமுக சார்பில் தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் கொட்டும் மழையில் மாபெரும் விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமுமுக தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவருமான ச. பீட்டர் அல்போன்ஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் சகோ. எஸ்.எஸ்.பாலாஜி எம்.எல்.ஏ., பேரா. அ. கருணானந்தன், தமுமுக தென்சென்னை மேற்கு மாவட்டத் தலைவர் அபூபக்கர் கோரி,மத்திய சென்னை மாவட்ட தலைவர் கே.அப்துல் சலாம், வடசென்னை மாவட்ட தலைவர் நசுருதீன், உள்ளிட்ட ஏராளமான ஆண்களும், பெண்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினர்.