ஒடுக்கப்பட்டவர்கள் பிற்படுத்தப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் சிறுபான்மையினர்கள்புலம்பெயர்ந்தவர்கள் என அனைத்து தரப்பு மக்களுக்குமாக ஓங்கி ஒலித்த முத்தமிழ்குரல் கலைஞருடையது. திருக்குவளையில் உதித்த திராவிட சூரியன் உலகையெல்லாம் தமிழகத்தைத் திரும்பிப்பார்க்க வைத்தது. எழுத்து செயல் பேச்சு அனைத்திலும் தமிழ் தமிழர் தமிழ்நாடுஆகியவற்றின் முன்னேற்றம் ஒன்றே குறிக்கோளாக இருந்தது. கலைஞர் உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஐம்பெரும் முழக்கங்களில் ஒன்றான வன்முறையைத் தவிர்த்து வறுமையை வெல்வோம் என்பது மிகப் பிரதானமானது. சமகாலத்தில் கத்தியின்றி ரத்தம் இன்றி இந்தியாவின் ஏனைய மாநிலங்களோடு மட்டுமல்ல உலகத்தின் வளர்ந்த நாடுகளோடு போட்டியிடும் தகுதி வாய்ந்த மாநிலமாகத் தமிழ்நாடு மாறியதற்கு அடிப்படை காரணம் மேற்சொன்ன செயல் திட்டமே ஆகும்.
பெரியாரின் சிந்தனையில் அண்ணா காட்டிய வழியில் ஜனநாயக நெறிமுறையில் சமுதாயத்தை வழி நடத்தியவர் முத்தமிழறிஞர். இவரின் போராட்ட குணமும் கொள்கைப்பிடிப்பும்தான் திராவிட இயக்க சிந்தனையை இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கு நகர்த்த இருக்கிறது. கூட்டாட்சி மாநில சுயாட்சி மற்றும் சமூக நீதி போன்ற கொள்கைகளில் இந்திய மாநிலங்களுக்கு இனிவரும் காலங்களிலும் வழிகாட்டக்கூடிய நெறிமுறையை வகுத்துத் தந்தவர். முஸ்லிம்களுக்குத் தமிழ்நாட்டில் 3.5 சதவீத தனி இட ஒதுக்கீடு கலைஞர் அவர்கள் வழங்கியதைப் பாராட்டி தமுமுகவின் சார்பில் நன்றியறிவிருப்பு மாநாடு நடத்தினோம். அந்த மாநாட்டில் உரையாற்றிய கலைஞர் அவர்கள் சமூக நீதி குறித்து எங்களுக்குப் புரிதலை ஏற்படுத்தியவர்கள் ஐயாவும் அண்ணாவும் என்று உரை நிகழ்த்தினார். தமது கொள்கை ஆசான்களை எப்போதும் நினைத்துக் கொண்டே இருந்தவர்.
“நிதான புத்தி நேரியைப் பார்வை நின்று கண்டறிந்து நெடுவழி செல்லல் சதாவ தானத் தனிப்பெருந் திறமை தன்னை யறிந்து பிறர் உளம் நோக்கல் நதியென ஓடி நாளெலாம் உழைத்தல் நாடும் மக்களும் நலம்பெற நினைத்தல் அதிசயச் சொற்றிறன் ஆய்வுறு கூர்மதி அன்பர் நலத்திலும் அக்கறை செலுத்துதல்”
என்ற கவியரசு கண்ணதாசன் அவர்களின் கவிதைக்கு ஒப்ப வாழ்ந்து காட்டிய வரலாறுநூறாண்டைத் தொட்டிருக்கிறது. இன்னும் பல நூறு ஆண்டுகள் வரலாற்றில் நிலைத்து நிற்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.