மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
காற்று மற்றும் நீர் மாசுபாடு சட்டத்தில் மாநில அரசின் அதிகாரத்தைப் பறிக்கும் வகையில் ஒன்றிய சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சகம் சில திருத்தங்களை முன்வைத்து வரைவு சட்டத் திருத்தங்களை அரசிதழில் வெளியிட்டு இருக்கிறது. இதன் வாயிலாக மாநிலத்தின் அதிகார வரம்பைத் துண்டித்து இருக்கும் ஒன்றிய அரசிற்கு எனது வன்மையான கண்டனங்கள். ஒரு தொழிற்சாலையை நிறுவுவதற்கான அனுமதியும் இயக்குவதற்கான அனுமதியையும் மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்கள் இதுவரை வழங்கி வந்திருக்கிறது. அத்தோடு இல்லாமல் ஆணைகளைப் புதுப்பிப்பது ரத்து செய்வது மறுப்பது போன்ற நடவடிக்கைகளும் மாநில அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அதிகாரமாக இதுவரை இருந்து வந்தது.
எந்த ஒரு தொழிற்சாலையும் கட்டுமானமும் செயல்படுவதற்கு முன்பாக ஒன்றிய அரசிடமும் மாநில அரசிடமும் முன் அனுமதி பெற வேண்டும். தற்போது இந்தச் சட்டத்திருத்தத்தின் வாயிலாக மாநில அரசின் அதிகாரத்தைப் பறித்து ஒன்றிய அரசு மட்டுமே அனைத்து ஆணைகளையும் வழங்கும் உரிமைகளைத் தன்னகத்தே வைத்துக் கொண்டது. இது முற்றிலும் மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அதிகாரத்தைப் பறிக்கும் செயலாகும். உதாரணமாக வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் எல்லையில் தனியார் நிறுவனம் ஒன்று பல ஆண்டுகளாக மருந்து உற்பத்தி ஆலையை நடத்தி வருகிறது. அந்த ஆலை சரணாலய எல்லைக்குள் இருக்கின்றது என்பது தெரியாமலேயே அதன் ஆலை விரிவாக்கத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதியை ஒன்றிய அரசிடம் இருந்து அந்தநிறுவனம் பெற்று இருக்கிறது. பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்ட பின்னரும் கூட சர்ச்சைக்குரிய அந்தச் சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்யாமல் நிறுத்தி வைக்க மட்டுமே ஒன்றிய அரசு உத்தரவிட்டிருக்கிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இவ்வளவு அலட்சியமாகச் செயல்படும் ஒன்றிய அரசு மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவரை தேர்ந்தெடுக்கும் வழிமுறைகளையும் வகுத்துத் தந்திருக்கிறது. இந்தப் பரிந்துரையின் அடிப்படையில் ஒன்றிய அரசால் நியமிக்கப்படும் அதிகாரியும் மாநில சுற்றுச்சூழல் துறைக்குப் பொறுப்பாளர்களில் ஒருவராகச் செயல்படுவார் என்று தெரியவருகிறது. இதுவும் மாநில அரசின் அதிகாரத்தில் ஒன்றிய அரசு தலையிடும் வகையில் அமைந்துள்ளது.
மாநில அரசு நிர்வாகமே இருக்க வேண்டியதில்லை என்ற ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை நிலைநாட்டும் வகையில் மாநில அரசுகளின் அதிகாரங்களை மோடி அரசு தொடர்ச்சியாகப் பறித்து வருகின்றது. இதன் தொடர்ச்சியாக மாநில அரசின் அதிகாரங்களைப் பறித்து பெருநிறுவனங்களுக்கு ஆதரவாகச் சுற்றுச்சூழல் விதிகளை நீர்த்துப்போகச் செய்யும் சட்டங்களும் திருத்தங்களும் கொண்டு வரப்பட்டுக் கொண்ட இருக்கின்றன.
தமிழ்நாடு அரசு இந்தச் சட்ட வரைவுகளை எதிர்த்து ஒன்றிய அரசிடம் கருத்துக்களைப் பதிவு செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் ஒன்றிய பாஜக அரசின் இந்தப் பிழையான முன்னெடுப்பிற்கு இந்தியா கூட்டணிக் கட்சிகள் கடும் கண்டனத்தைத் தெரிவிக்க கேட்டுக் கொள்கிறேன். இயற்கை வளங்களைப் பாதுகாக்க மக்கள் நலனைப் பேண அனைவரும் கரம் கோர்ப்போம்.