சென்னை தொலைக்காட்சி நிலையமான ‘டிடி தமிழ்’ சார்பில் இந்தி மாதக் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் நிறைவு விழாவில் ஆளுநர் பங்கேற்று இருக்கிறார். இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மொழிக்கு முக்கியத்துவம் அளித்து விழா எடுப்பது ஏற்புடையது அல்ல. அதில் ஆளுநர் பங்கேற்றதோடு அல்லாமல் தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடும் போது திராவிட நல் திருநாடும் என்கிற வார்த்தையை நீக்கிவிட்டுப் பாடி இருக்கிறார்கள்.ஏற்கெனவே பொதிகை என்ற பெயரில் செயல்பட்ட தொலைக்காட்சி டிடி தமிழ் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. டிடி தமிழ் தொலைக்காட்சிக்குக் காவி நிறத்தில் லோகோ உருவாக்கி இருந்ததற்கே கடும் சர்ச்சைகள் உருவாகி இருந்தது. இந்தத் தொலைக்காட்சி தமிழ் மொழியின் மேன்மைக்காக இதுவரை சிறப்பு மாதத் தொடர் நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தியதாகத் தெரியவில்லை. ஆனால் இந்தி மொழிக்கு ஒரு மாதம் முழுவதும் விழா எடுத்திருப்பது தமிழ் மொழியை அவமானப்படுத்தும் செயலாகும்.
1956-ல் மொழிவாரி மாகாணப் பிரிவினை மூலம் தனிமாநிலமாக உருவெடுத்தபோது, ‘மா தெலுகு தள்ளிகி’ என்ற பாடலைத் தமக்கான மாநிலப் பாடலாக அறிவித்துவிட்டது ஆந்திரம். அந்த வரிசையில்தான் தமிழ்நாட்டுக்கென தமிழ்த்தாய் வாழ்த்து அறிவிக்கப்பட்டது. அதனால் தமிழ்த்தாய் வாழ்த்தால் மாநில இறையாண்மைக்கு ஆபத்து என்ற வாதம் ஆரம்பத்திலேயே அடிபட்டுப் போய்விட்டது. பின்னாட்களில் கர்நாடகம், பீஹார், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களும் தங்களுக்கென தனி மாநிலப் பாடல்களை உருவாக்கி, அங்கீகரித்துவிட்டனர்.1970 ஜூன் 17 அன்று தமிழ்த்தாய் வாழ்த்துக்கான தமிழ்நாடு அரசின் அரசாணை கலைஞர் அவர்களால் வெளியிடப்பட்டது.தொடர்ந்து தமிழ்நாடு அரசிடமிருந்து 2021 டிசம்பர் 17 அன்று ஓர் அரசாணை வெளியானது. அது தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படும் முறை குறித்த சில வழிகாட்டும் நெறிமுறைகளைக் கூறியிருந்தது. இவ்வளவு நெடிய வரலாறு தமிழ்த் தாய் வாழ்த்துக்கு இருக்கிறது. அதனை அரைகுறையாகப் பாடுவது தமிழர்களையும் தமிழ்நாடு அரசையும் அவமானப்படுத்தும் செயலாகும்.
தமிழ்நாட்டின் ஆளுநர் ஏற்கனவே தமிழ்நாடு அரசின் நீண்ட காலச் சிறைவாசிகளின் முன் விடுதலைக்கான பரிந்துரையை ஏற்று கையெழுத்து விடாமல் மறுத்ததற்காக நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு உள்ளாகி இருக்கிறார். தமிழ் மொழிக்கும் தமிழ்நாடு அரசின் செயல் நெறிமுறைகளுக்கும் எதிராகத் தொடர்ந்து செயல்படும் தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர் என் ரவி உடனடியாகப் பதவி விலக வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.