சர் சையத் அகமது கான் அவர்களின் மாபெரும் முயற்சியினால் 1875ல் உருவாக்கப்பட்டது ஆங்கிலோ ஓரியண்டல் கல்லூரி. பிறகு அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் என மாறி,150 ஆண்டுகளுக்கு மேல் செயல்படுகிறது. இப்பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை, வேலைவாய்ப்புகளில் முஸ்லிம்களுக்காகத் தனி இட ஒதுக்கீடு நீட்டித்தது. 1967ல் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு, இந்த ஒதுக்கீட்டைப் பறிப்பதற்கு வழிவகுத்தது. மீண்டும் இப்பல்கலைக்கழகத்திற்கு 1981 இல் சிறுபான்மை அந்தஸ்தை முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றி வழங்கி இருந்தார். இதற்குத் தடை விதித்து, 2006ல் அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதன் மீதான மேல்முறையீட்டு வழக்கில் இன்று உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியல் அமர்வு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கி உள்ளது. இது இறுதியான தீர்ப்பு இல்லை என்றாலும் கூட ஒரு நிறுவனத்திற்குச் சிறுபான்மை அந்தஸ்து வழங்குவதற்கான முறைமைகளை இன்றைய தீர்ப்பு வகுத்துத் தந்து இருக்கிறது. அந்த வகையில் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. இந்தத் தீர்ப்பில் சிறுப்பானமை அந்தஸ்திற்கான விதிமுறைகளாகப் பட்டியலிடப்பட்டதை ஏற்கெனவே அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் கவனமாகப் பின்பற்றி வருகிறது.
ஆங்கிலேயர்கள் காலத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் அலிகர் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது என்கிற ஒற்றைக் காரணத்தைக் கொண்டு அரசமைப்புச்சட்டம் 30-ஆவது பிரிவு சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு வழங்கி இருக்கக்கூடிய உரிமைகளைப் பறிக்க முடியாது என்று இந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஒரு கல்வி நிறுவனத்தை உருவாக்கியவர்கள் யார் என்பதையும் அது உருவாகுவதற்கு நிலத்தை அளித்தவர்கள், செல்வத்தை அளித்தவர்கள் யாவர் என்பதைக் கவனத்தில் எடுத்துக் கொண்டு அந்தக் கல்வி நிறுவனம் சிறுபான்மை நிலை பெறுவதற்குத் தகுதி பெற்றதா என்பதைத் தீர்மானிக்க இன்றைய தீர்ப்பு வழிகாட்டி இருக்கிறது. இதன் அடிப்படையில் உச்சநீதிமன்றத்தின் புதிய 3 நீதிபதிகள் அமர்வு அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் சிறுபான்மை அந்தஸ்து பெறத் தகுதியுடையதா என்பதைத் தீர்மானிக்கும். நீண்ட நெடிய காலமாகப் பாஜகவினரின் கண்களுக்கு அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் உறுத்தலாக இருந்து வருகிறது. இந்திய முஸ்லிம்களின் கல்வி உரிமைகளைப் பறிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் சிறுபான்மை அந்தஸ்தைப் பறிப்பதற்கு அவர்கள் பெரும் முயற்சி மேற்கொண்டார்கள். அவர்களின் முயற்சிக்கு இந்தத் தீர்ப்பு முட்டுக்கட்டை போட்டு இருக்கிறது. வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தத் தீர்ப்பை மனதார வரவேற்கிறோம்.