சாதி மதங்கள் கடந்து தமிழர்களை ஒருங்கிணைக்கும் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் முயற்சிக்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் அறிக்கை:

இந்தியாவின் விடுதலைக்குப் பின் நிலவழி மாநிலம் எனும் தனது கருத்துக்கு மாறாக இருந்தபோதும், மக்களின் மொழிவழி மாநில உரிமைக் குரலுக்கு மதிப்பளித்த அன்றைய பிரதமர் நேரு, ‘மாநில மறுசீரமைப்புச் சட்ட’த்தை இயற்றினார். அதன்படி, 1956 நவம்பர் 1-ல் இந்தியா, 14 மாநிலங்களாகவும் 6 ஒன்றியப் பகுதிகளாகவும் பிரிக்கப்பட்டது. தமிழகம் சென்னை மாநிலம் என்றும், கர்நாடகம் மைசூர் மாநிலம் என்றும் கேரளம் தனியாகவும் நவம்பர்-1, 1956-ல் தனித்தனி மாநிலங்களாகின.

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட தினமான நவம்பர்- 1ஆம் தேதியை நமது அண்டை மாநிலங்களான கர்நாடகம், ஆந்திரா போன்ற மாநிலங்கள் அவர்களுக்கான தனிக்கொடியை ஏற்றி கொண்டாடி வருகிறார்கள். தமிழக அரசு 2019-ல்தான் முதன்முதலாக அரசு விழாவாகக் கொண்டாடியது. தமிழ்நாட்டுக்கு என்று தனியாக கொடி எதுவும் வடிவமைக்கப்படவில்லை.

கர்நாடக அரசு உள்ளிட்ட பல மாநிலங்களில் அரசுகள், தங்கள் மாநிலங்களுக்கென தனித் தனியே கொடிகளை அடையாளப்படுத்தி ஏற்றி மகிழ்ந்திடுவதுபோல், தமிழ்நாட்டு மக்களும் கட்சி சார்பற்ற நிலையில் ஒரு பொதுவான கொடியினை ஏற்றிக் கொண்டாடிட ஏதுவாக, தமிழ்நாடு தமிழறிஞர்கள், கல்வியாளர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரின் கருத்தறிந்து தமிழ்நாடு அரசே தமிழ்நாட்டுக் கொடியை வடிவமைத்து அறிவித்திட வேண்டும். இந்த பெரும் விழாவை தமிழ்நாட்டில் உள்ள எல்லாக் கல்வி நிறுவனங்களிலும், அரசு அலுவலகங்களிலும், மாநகராட்சி முதல் ஊராட்சி அலுவலகங்கள் வரையிலும் உள்ள தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் கொண்டாட வேண்டுமென அரசு அறிவித்திட வேண்டும்.

நவம்பர் 1ஆம் நாளை விடுமுறை நாளாக அறிவித்திட வேண்டும் போன்ற கோரிக்கைகளை பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு முன்வைத்துள்ளது. சாதி மதங்களைக் கடந்து தமிழர்கள் ஒருங்கிணைவதற்கு இந்த முன்னெடுப்பு உதவியாக இருக்கும் என்று மனிதநேய மக்கள் கட்சியும் கருதுகிறது.  தமிழக அரசு இந்தக் கோரிக்கைக்கு செவிசாய்த்து தமிழர்களின் ஒற்றுமையை வலுப்படுத்த முன் முயற்சி மேற்கொள்ளுமாறு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.