பாஜக ஆளும் திரிபுராவில் கடந்த ஒரு வாரக் காலத்தில் 16 பள்ளிவாசல்கள் தீக்கிரையாக்கப்பட்டு, 3 வீடுகள் இடிக்கப்பட்டு, ஒரு பெண் மானபங்கப்படுத்தப்பட்டது உள்ளிட்ட 27 வன்முறைச் சம்பவங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்றுள்ளன. இக்கலவரங்களைத் தொடர்ந்து நகரப்பகுதிகளில் மட்டுமே பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டதாகவும், ஆனால் ஊரகப் பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்கள் அதிக அளவில் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.
வன்முறைக்கு இலக்கான முஸ்லிம்களே கைது செய்யப்பட்டுள்ளனர். சுதந்திர மாகச் செயல்பட்ட ஓரிரு செய்தியாளர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று செய்தி சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளனர். திரிபுராவில் முஸ்லிம்களின் செல்வாக்கு செல்லுபடியாகாது என்றும் இறைத்தூதரை இகழ்ந்தும் முழக்கமிட்டபடி கலவரக்காரர்கள் ஊர்வலமாகச் செல்லும் வீடியோ வைரலாக்கப்பட்டுள்ளது. ஹிந்து ஜார்கன் மன்ஞ், ஆர்.எஸ்.எஸ். மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நடத்திய ஊர்வலத்தில் இத்தகைய முழக்கங்கள் எழுப்பப்பட்டன. வன்முறை முழக்கங்களுடன் நடைபெற்ற ஊர்வலங் களுக்கு காவல்துறை முழு பாதுகாப்பு அளித்ததோடு அங்கு நடைபெற்ற வன்முறை வெறியாட்டங்களின் போது அமைதிகாத்துள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
இவ்வன்முறைகளை எதிர்த்து, செவ்வாயன்று சுமார் 20 ஆயிரம் முஸ்லிம்கள் வடதிரிபுராவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து உடனடியாக அங்கு 144 விதிக்கப்பட்டது. ஆனால், கிராமப்புறங்களில் சங் பரிவாரத்தினர் வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்ட போது அப்படியான எந்த தடை உத்தரவும் அமல்படுத்தப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற சம்பவங்கள் இனிமேலும் நிகழாமல் இருக்க திரிபுரா முழுவதும் சிறுபான்மையினரின் வழிபாட்டுத்தலங்கள் மற்றும் வாழ்விடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட வேண்டுமென்றும், சிதிலமாக்கப்பட்ட பள்ளிவாசலையும், தீக்கிரையாக்கப்பட்ட கடைகள் மற்றும் வீடுகளையும் அரசே மறு நிர்மாணம் செய்து தரவேண்டுமென்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு உடனடியாக வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி