சென்னையிலிருந்து புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்! ஒன்றிய சிறுபான்மை விவகாரத் துறை அமைச்சருக்கு மனிதநேய மக்கள் கட்சி கடிதம்

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை:

“புனித ஹஜ்- 2022ல் ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் முஸ்லிம்களிடமிருந்து, சில விதிமுறைகளுக்கு உட்பட்டு மும்பை, இந்திய ஹஜ் குழு சார்பாகத் தமிழ்நாடு மாநில ஹஜ் குழு, ஹஜ் விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. சென்னை விமான நிலையத்திலிருந்து சவூதி அரேபியாவிற்குப் புறப்படும் விமானங்கள் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து புறப்படும் என அறிவித்திருப்பது தமிழக மற்றும் புதுவை ஹஜ் பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் 20 இடங்களிலிருந்து ஹஜ் புனித பயணத்தை மேற்கொள்ள அனுமதி இருந்த நிலையில் தற்போது அது 10ஆக குறைக்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. சென்னையிலிருந்து கொச்சி வெகுதூரத்தில் உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் இந்த மூன்று மாநிலத்தவரும் சென்னையிலிருந்தே புனித ஹஜ் யாத்திரைக்குப் புறப்பட்டுச் செல்கின்றனர். சென்னையிலிருந்து ஹஜ் விமானம் புறப்படாது என தெரிவித்துள்ள ஒன்றிய அரசு, தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான், கேரளா ஆகிய நான்கு மாநிலப் பயணிகளையும் கொச்சி விமான நிலையத்தில் வரவழைப்பதால் ஹஜ் பயணிகளுக்கு பெருத்த அலைச்சலையும் கூடுதல் பொருட்செலவையும் ஏற்படுத்தும் என்பதை உணரத் தவறியது ஏன்? 1994ஆம் ஆண்டு முதல் சென்னையிலிருந்து விமானம் மூலம் ஹஜ் யாத்திரிகர்கள் பயணம் மேற்கொண்டுவரும் நிலையில் தற்போது முக்கியத்துவம் வாய்ந்த சென்னை விமான நிலையம் புறக்கணிப்பட்டுள்ளது ஏற்புடையதல்ல. சென்னையிலிருந்தும் ஹஜ் விமானங்களை இயக்க கோரி ஒன்றிய சிறுபான்மையினர் விவகாரத் துறை அமைச்சர் திரு. முக்தார் அப்பாஸ் நக்விக்கு கடிதமும் எழுதியுள்ளேன். எனவே, தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தோர் எப்போதும் போல் சென்னையிலிருந்தே புனித ஹஜ் யாத்திரை மேற்கொள்ள ஒன்றிய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு முதலமைச்சரும் இதனை ஒன்றிய அரசிடம் வலியுறுத்த வேண்டும் என்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.