வக்ஃப் திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றிய முதலமைச்சருக்கு மனிதநேய மக்கள் கட்சி நன்றி தெரிவித்த ஜவாஹிருல்லாஹ்

மனிதநேய மக்கள் கட்சி தலைவர்  பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் அறிக்கை: வக்ஃப் வாரியங்களை முடக்கி வக்ஃப் சொத்துகளை ஆக்கிரமிக்க வழி வகுக்கும் வகையில் அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமான பாரபட்சமான விதிகளைக் கொண்டிருக்கும் வக்ஃப் திருத்த மசோதா 2024ஐ முஸ்லிம்கள் கடுமையாக எதிர்த்து வந்த நிலையில் இன்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் இந்த திருத்தச் சட்டத்தை முழுமையாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி தனித் தீர்மானம் முதலமைச்சர் அவர்களால் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டது. சிறுபான்மையின முஸ்லிம்களை வஞ்சிக்கும், வக்ஃப் திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி தொடர்ச்சியாக வைத்த கோரிக்கையை ஏற்று தனித் தீர்மானம் நிறைவேற்றித் தந்த தமிழ்நாட்டின் முதலமைச்சருக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறேன். அதேபோல், இந்த தனித் தீர்மானத்திற்கு தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் ஆதரவளித்து பேசிய அதிமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,  இந்திய கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, பாமக மற்றும் புரட்சி பாரதம் ஆகிய கட்சிகளுக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.