தமிழக உரிமையியல் நீதிமன்றங்களில் சிவில் நீதிபதி பதவிக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வாயிலாக 2018ல் 222 பேரும், 2019 ல் 56 பேரும் சிவில் நீதிபதிகளாக தேர்வு செய்யப்பட்டனர். அதற்குப் பிறகு நான்கு ஆண்டுகளாக இந்த தேர்வு நடத்தப்படவில்லை. தற்போது சிவில் நீதிபதி பதவிக்கு புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்ப பதிவு, ஜூன் ஒன்றாம் தேதி துவங்கியது. ஜூன் 30க்குள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும். முதல்கட்ட தேர்வு ஆகஸ்ட் 18ம் தேதியும், மெயின் தேர்வு அக்டோபர் 28, 29 ஆகிய தேதிகளிலும் நடைபெற உள்ளது.இதில் மொத்தம் 245 பணியிடங்கள் நிரப்பிட உள்ளதாகத் தெரிய வருகிறது.
அரசின் சட்டக் கல்லூரிகளில் பயின்று வரும் மாணவ மாணவிகள் தற்போது தான் தேர்வுகளை எழுதி முடித்துவிட்டு மதிப்பெண் முடிவுகளை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். தற்போது தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் பயின்று தேர்வுகளை எழுதியுள்ள மாணவர்கள் இந்த தேர்வை எழுத முடியாத சூழ்நிலை உருவாகி இருக்கிறது.
அதே வேளையில் பல தனியார் சட்டக் கல்லூரிகளில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டிருப்பதால் அங்குப் பயின்றோர் சிவில் நீதிபதி தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தகுதியைப் பெற்றுள்ளனர். இதனால், தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட அரசுக் கல்வி நிறுவனங்களில் படித்தவர்களுக்கு அந்த வாய்ப்பு பறிபோகும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது. தனியார் சட்டக் கல்லூரிகளில் படித்தவர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்பு தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் படித்தவர்களுக்கு மறுக்கப்படுவது சமூகநீதிக்கு எதிரானது. இதனைக் கருத்தில் கொண்டு TNPSC சிவில் நீதிபதி தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்றும் விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டித்து வழங்க வேண்டும் என்றும் மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கின்றேன்.