நடிகர் ஜீவா இந்திய சினிமாவின் நாயகன் ஆனார்.

1983 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி உலககோப்பையை வென்று இந்தியாவின் சரித்திரத்தை மாற்றி அமைத்தது. இந்தியாவில் வரலாற்றின் பொன் தருணமாக அனைவராலும் போற்றப்படும் இதன் பின்னணியில் தான் #83 படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவெங்கும் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இப்படத்தில் நடிகர் ஜீவா கிரிக்கெட் வீரர் ஶ்ரீகாந்த் பாத்திரத்தில் அசத்தியிருக்கிறார். இதனால் இந்தியா முழுக்க கொண்டாடப் படுகிறார்,ஜீவா. இதையடுத்து ‘பேன் இந்தியா’ ஆர்டிஸ்ட் ஆனார் ஜீவா. எல்லா மொழிகளிலும் அறியப் படுகிற ஹீரோ ஆனதில் பரபரப்பாக காணப்படுகிறார்.

83 படத்தின் அனுபவங்கள் குறித்து நடிகர் ஜீவா பகிர்ந்துகொண்டதாவது:  இந்தியா முழுவதும் #83 படம் பெரிய வெற்றியை குவித்திருக்கிறது.இதை ரசிகர்கள் கொண்டாடி பெருமிதமாக வருகிறார்கள். அதிலும் உங்கள் ஶ்ரீகாந்த் பாத்திரம் செய்யும் காமெடி மற்றும் உருக்கமான சீன் பெரிதாக பேசப்படுகிறது. இந்த வரவேற்பை எப்படி உணர்கிறீர்கள் ?

எல்லோருமே பாராட்டுறாங்க, ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஆனா உண்மையில் நான் இந்த படத்தில் எதுவும் காமெடி பண்ணல. ஶ்ரீகாந்த் சார் அந்த சூழ்நிலையில என்ன ரியாக்ட் பணணுவாரோ அத மட்டும் தான் செய்தேன். நிஜ வாழ்க்கையில ஶ்ரீகாந்த் சாருக்கு ஹியுமர் அதிகம். அது படத்தில கரக்டா ஒர்க் அவுட் ஆனது சந்தோசம். அது மக்களுக்கு பிடிச்சது இன்னும் சந்தோசம்.

#83 பட வாய்ப்பு எப்படி கிடைத்தது ?

CCL போட்டிகள் நமது நடிகர்களுக்கிடையே நடந்த போது நான் அதில் விளையாடினேன். எல்லோருக்கும் தெரியும். ஆனால் இந்தப்படத்தின் தயாரிப்பாளர் விஷ்ணு இந்தூரி அந்த போட்டிகள் நடத்திய நிறுவனத்தின் ஒரு ஓனர். இந்தப்படம் எடுக்க திட்டமிட்ட போது, அவருக்கு என் ஞாபகம் வந்திருக்கிறது. CCL போட்டியின் போது நான் ஒரு கவர் டிரைவ் அடித்திருப்பேன். அது அப்படியே ஶ்ரீகாந்த் சார் விளையாடியது போலவே இருக்கும். அந்த ஷாட்டை , பல்வீந்தர் சிங்கும், விஷ்ணு இந்தூரியும் பார்த்து என்னை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். உண்மையில் அந்த போட்டியில் விளையாடியது தான் எனக்கு இந்த வாய்ப்பை வாங்கி தந்தது. அந்த பால் போட்ட பௌலருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.

1983 ல் நடந்த உலக கோப்பை போட்டியை பார்த்திருக்கிறிர்களா?

நான் எல்லாம் சச்சின் காலத்து ஃபேன். அவர் கிரிக்கெட் விளையாடியதை தான் அதிகம் பார்த்திருக்கிறேன். இந்த போட்டி பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் பார்த்தது இல்லை. இந்த போட்டியின் சின்ன சின்ன கிளிப்ஸ், கொஞ்சம், கொஞ்சம் பார்த்திருக்கிறேன். முழுசாக பார்த்தது இல்லை. ஆனால் கபில்தேவை கிரிகெட் உலகின் ஹீரோவாக எல்லோருக்கும் தெரியும். அந்த போட்டியில் விளையாடிய மற்ற 11 பேரை பற்றி எல்லாம் எல்லோருக்கும் தெரியாது. நான் ஸ்கூல் படிக்கும் போது ஒரு முறை பேட்டிக்காக ஶ்ரீகாந்த் சார் வீட்டுக்கு போயிருக்கிறேன். அப்போது அவர் செய்த சாதனைகள் தெரிந்து கொண்டேன். ஆனால் சச்சின், வாசிம் அக்ரம் காலம் தான் என்னோடது. அவர்கள் விளையாடியதை தான் நெருக்கமாக பார்த்திருக்கிறேன்.

1983ல் வரலாற்று சாதனை நிகழ்த்தப்பட்டது. அது இன்றும் இந்தியர்கள் மனதில் பெரும் தாக்கத்தை தந்து வருகிறது படத்தில் அதை உருவாக்கும் அனுபவம் எப்படி இருந்தது ?

உண்மையிலேயே ரொம்ப பெரிய விசயம். பிரிட்டிஷ் அரசு 1947 சுதந்திரம் தந்த பின்னாடி மொத்த நாடும் ஒன்னு சேர்ந்து கொண்டாடியது இந்த போட்டியோட வெற்றியதான். அப்படி ஒரு வரலாற்றை எடுக்குறாங்க. அந்தப்படத்தில் நானும் ஒரு பங்காக இருந்திருக்கேன். அப்படிங்கிற உணர்வே சந்தோசமா இருக்கு. இது வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம்.

ஶ்ரீகாந்த் பாத்திரத்தை செய்யலாம் என எப்படி முடிவு செய்தீர்கள் ?

முதன் முதல்ல இந்த வாய்ப்பு எனக்கு வந்தப்ப  ஸ்ரீகாந்த் சார் உலக கோப்பையில என்ன பண்ணிருக்காருனு பார்த்தேன். செமி ஃபைனல்ஸ், ஃபைனல்ஸ் ரெண்டுலயும் ஸ்கோர் பன்ணிருக்காரு. அப்படினா கண்டிப்பாக க்ளைமாக்ஸ்ல நம்மள பெரிசா காட்டுவாங்க, இந்தியாவோட பெரிய டைரக்டர் கபீர்கான், அவரோட இயக்கத்துல நடிக்கலாம். அப்புறம், நான் ரண்வீர் சிங், தீபிகா படுகோன் ரெண்டு பேரோட ஃபேன். அவங்களோட சேர்ந்து நடிக்கலாம் என்ற எண்ணம் எல்லாம் தான் முக்கிய காரணம்.
முதல் முறையா கபீர் சார் பார்த்தப்ப அவர் படத்தோட இன்ஸிடென்ஸ் சொல்ல ஆரம்பிச்சிட்டார். ஆனா அதெல்லாம் உண்மையா நடந்ததுனு தெரிய வந்தப்ப இத கண்டிப்பா மிஸ் பண்ணிடக்கூடாதுனு தோணுச்சு. இந்த கேரக்டருக்காக பேச மும்பை கூப்பிட்டிருந்தாங்க. போயிட்டு திரும்ப வர்றப்ப சிவராம் கிருஷ்ணன் சாரை ஏர்போர்ட்ல பார்த்தேன். அவர் என்ன இங்கனு கேட்டப்ப #83 பத்தி சொன்னேன். அவர் உடனே ஶ்ரீகாந்த் சாருக்கு போன் போட்டு, ஜீவா உன் ரோல் பண்றான்னு சொல்லிட்டாரு. அவர்கிட்ட பேசினேன். வா மீட் பண்ணலாம் சொல்லி வீட்டுக்கு வரச்சொன்னாரு. அவர் நேர்ல பார்த்த பிறகு நடிக்க முழு தைரியம் வந்துடுச்சு.

#83 பட அனுபவம் எப்படி இருந்தது ? அட்டகாசமான அனுபவம், ஒரு இண்டர்நேஷனல் படம் பண்ண மாதிரி இருந்தது. நீங்க பார்க்கும் போதே அத உணர்ந்திருப்பீங்க. முழுப்படப்பிடிப்பும் லண்டன்ல தான் நடந்தது. எல்லா காட்சியிலும் அவ்வளவு கூட்டம் இருக்கும் ஆனாலும் துல்லியமா அந்த கூட்டத்த கண்ட்ரோல் பண்ணி பிரமாண்டமா எடுத்தாங்க. அந்த அனுபவமே ரொம்ப புதுசா இருந்தது. படப்பிடிப்பெல்லாம் லார்ட்ஸ் மைதானம், ஓவல் மைதானம் போய் எடுத்தோம். தெருவுல கிரிக்கெட் விளையாடிட்டு இருந்த பையனுக்கு லார்ட்ஸ் மைதனாத்த பார்க்கறதே கனவு தான். ஆனா நான் நேர்ல அங்க கிரிக்கெட் விளையாடினதெல்லாம் ஏதோ மாயாஜாலம் மாதிரி தான் இருந்தது. லார்ட்ஸ்ல விளையாடுனதுல என்னோட ஃபிரண்ட்ஸ் எல்லோருக்கும் பொறாமை. எல்லோருமே அதப்பத்தியே கேட்டுட்டு இருந்தாங்க மொத்தமா இந்தப்படமே ரொம்பவும் புதுசா இருந்தது.

ஷீட்டிங்ல பண்ண கலாட்டாக்கள் ஏதாவது ?

எக்கசக்கமாக இருக்கு. லண்டன் போன மொத நாளே ஹோட்டல் மொத்தத்தையும் காலி பண்ணி பெரிய கலாட்டா நடந்தது. முதல் நாள் ஷீட்டிங் எல்லோரும் ஹோட்டல் வந்தப்புறம், நான் அங்க இருந்த டீமோட சேர்ந்து ரிகர்சல் பண்ணேன். படத்துல ஒரு சீன் வரும் ஶ்ரீகாந்த் தொடர்ந்து சிகரெட் பிடிக்கிற மாதிரி, அந்த காட்சிக்காக டீமோட சேர்ந்து சிகரெட் பிடிக்க அந்த புகையால ஹோட்டல்ல அலாரம் அடிச்சு, 11 மாடில இருந்து எல்லோரையும் காலி பண்ணிட்டாங்க . அப்புறம் மெதுவா கபீர் சார்கிட்ட நாங்க தான் காராணம்னு சொன்னோம். இந்த மாதிரி படம் முழுக்க கலாட்டா நடந்துட்டே தான் இருந்தது.

படத்துல மிக முக்கியமான இடத்துல ஒரு நீளமான டயலாக் படத்தோட மொத்த கருவையும் சொல்ற டயலாக் உங்களுக்கு இருந்ததே அதப்பத்தி ?

படம் ஆரம்பிச்சதிலிருந்தே அதப்பத்தி தான் மொத்த டீமும் பேசிட்டு இருந்தாங்க, சரியா பண்ணிடுவீங்கள்லனு கேட்டுக்கிட்டே இருந்தாங்க, முத நாள் ஷீட் எல்லாம் ஒன் டேக்ல நல்லா போயிடுச்சு. திடீர்னு கூப்பிட்டு அந்த டயலாக் பேச சொன்னாங்க எனக்கு சுத்தமா வரல எல்லொருக்கும் பயம். அப்புறம் நான் கபீர் சார்ட்ட அதெல்லாம் பார்த்துக்கலாம் நான் ரெடியாகிடுவேன்னு சொல்லி அந்த டயலாக்க தனியா பயிற்சி செஞ்சு ரெடியானேன். ஆனாலும் எல்லோருக்கும் ரொம்பவும் பயம் இருந்தது. ஏன்னா அந்த காட்சில நிறைய கூட்டம் இருக்கும் பெரிய செட்டப், ஆனா அத எடுத்தப்ப ஒரே டேக்ல ஒகே பண்ணிட்டேன். எல்லோரும் பாராட்டுனாங்க. படம் பார்த்துட்டு எல்லோரும் பாராட்டுறது இன்னும் சந்தோசம்.

பாலிவுட் பட அனுபவம் எப்படி இருந்தது? தமிழிலிருந்து வித்தியாசமாக இருந்ததா ?

படம் பார்த்தாவே உங்களுக்கு என்ன வித்தியாசம்னு தெரியும். அவங்களோட செட்டப் பெரிசு. பட்ஜெட் ஜாஸ்தி. அதனால அவங்களோட ஒர்க்கும் பெரிசா இருக்கு. நமக்கு இங்க அந்த பட்ஜெட் கிடைச்சா நாமளும் அவங்க மாதிரி வேலை பார்க்கலாம் அவ்வளவுதான்.

நீங்கள் கிரிக்கெட் அதிகம் பார்ப்பிர்களா உங்களுக்கு பிடித்த வீரர் யார் ?

இப்ப ஷீட்டிங்கால அதிகம் பார்க்க முடியல ஆனா தொடர்ந்து பார்ப்பேன் நான் கிரிக்கெட் ரசிகன் தான் பாஸ். இப்ப யார்கிட்ட கேட்டாலும் தோனிதான் ஃபேவரைட் பிளேயர்னு சொல்லுவாங்க. எனக்கும் அவரப்பிடிக்கும். ஆனா அவர தாண்டி விராட் கோலி ரொம்ப பிடிக்கும். அப்புறம் ரோகித் சர்மா சொல்லலாம்.

#83 உலககோப்பை விளையாடிய வீரர்கள் பற்றி தெரியுமா? அவர்களை சந்தித்தீர்களா ?

படத்துக்காக சந்திச்சதுதான். கபில் சார், கவாஸ்கர் சார், மொகிந்தர் சார் எல்லோரையும் படத்துக்காக பார்த்தோம். கபில் சார் நிறைய பேசினார். கவாஸ்கர் என்னோட விளையாட்ட பார்த்துட்டு.. எங்கிருந்து பிடிச்சீங்க.. அப்படியே ஶ்ரீகா ( ஸ்ரீகாந்த் ) மாதிரியே விளையாடுறான்னு சொன்னார். ரொம்ப சந்தோசமா இருந்தது.

 

படத்தில் உங்க பாத்திரத்திற்காக ஹோமொர்க் செய்தீர்களா ?

பெரிசா எதுவும் பண்ணல. ஶ்ரீகாந்த் சார் நிறைய சொன்னார். அவர்கூட இருந்தா போதும். அவரே எல்லாம் சொல்லி தந்துடுவார். அவர் வீட்டுக்கு போய் அவரோட இருந்து முழுக்க வீடியோ எடுத்துட்டு வந்தேன். ஒவ்வொரு சீன் பண்ணும் போதும் அத போட்டு பார்த்துப்பேன் அவ்வளவுதான்.

நாயகன் ரன்வீர் எப்படியானவர் ? அவருடன் உங்கள் அனுபவம் எப்படி இருந்தது ?

ரண்வீர் ஒரு புரபசனல். முன்னாடியே கல்லிபாய் பார்த்து அவருக்கு நான் ஃபேன். ஆனா இந்தப்படத்துல அவர் முழுக்க முழுக்க கபில் தேவா தான் இருந்தார். ஒரு மிகச்சிறந்த நடிகர். அவரோட வேலை பார்த்தது சூப்பரா இருந்தது. நிறைய பேசினோம். நிறைய சொல்லிக்கொடுத்தார்.

தீபிகா படுகோனே உடன் காட்சிகள் நடித்த அனுபவம் ?

தீபிகா மேம் கூட காட்சிகள் ரொம்ப கம்மி தான். அந்த அனுபவமெல்லாம் சூப்பரா இருந்தது. என்ன நிறைய சப்போர்ட் பண்ணாங்க. தமிழ் படம் பத்தியெல்லாம் பேசினாங்க.

பிரபலங்களிடமிருந்து ஏதும் பாராட்டுக்கள் கிடைத்ததா ?

எக்கசக்கமா, படம் வந்ததிலிருந்து தினமும் எதிர்பாராத இடத்திலிருந்து பாராட்டு வந்திட்டே இருக்கு. கிரிக்கெட் வீரர் அஷ்வின் எல்லாம் போன் பண்ணி பாராட்டினாரு. நிறைய பாராட்டுக்கள் வந்துட்டே இருக்கு.

பாலிவுட் வாய்ப்புகள் வருகிறதா ?

இப்போ நிறைய வர ஆரம்பிச்சிருக்கு. நிறைய கதைகள் பத்தி பேசுறாங்க. ஆனா இன்னும் எதுவும் கமிட் பண்ணல. ஒரு பெரிய வெளிச்சம் கிடைச்சிருக்கு. அத சரியா பயன்படுத்திக்கனும். அதனால வெயிட் பண்ணி சரியானத பண்ணலாம்னு இருக்கேன்.

தற்போது நடிக்கும் படங்கள் பற்றி ?

இப்போதைக்கு ரெண்டு படங்கள் போய்ட்டு இருக்கு. வரலாறு முக்கியம் நல்ல காமெடி படம், வெளியீட்டு ரெடியாகிட்டு இருக்கு. இன்னொன்னு சிவா கூட ‘கோல்மால். ஷீட் பரபரப்பா போயிட்டு இருக்கு. அடுத்த புராஜக்ட் பேச்சுவார்தைகள்ல இருக்கு விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வரும்.