“மதகஜராஜா” திரைப்பட விமர்சனம்

ஜெமினி பிலீம் சர்கூட் தயாரிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் விஷால், சந்தானம், மணிவண்ணன், மனோபாலா, ஆர்யா, சுவாமிநாதன், நித்தின் சத்யா, சோனுசூட், சடகோபன் ரமேஷ், வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி, காயத்ரி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “மதகஜராஜா”. விஷால் தன் ஆசிரியரின் மகள் திருமணத்திற்கு செல்கிறார். அங்கு தனது சிறுவயது நண்பர்களான சந்தானம், நித்தின் சத்யாவை சந்திக்கிறார். சென்னையிலுள்ள அரசியல் செல்வாக்குள்ள ஒருவரால் நித்தின் சத்தியா 50 லட்சம் ரூபாய் இழந்திருப்பதை விஷால் தெரிந்து கொள்கிறார். அதை மீட்டு கொடுப்பதற்காக சென்னைக்கு சென்று ஏமாற்றிய அந்த நபரை சந்தித்து பணத்தை கேட்கிறார் விஷால். பணத்தை அந்த நபர் கொடுத்தாரா? இல்கையா? என்பதுதான் கதை. கதையில் வலுவில்லையென்றாலும் திரைக்கதை 2 மனி நேரம் இடைவிடாத நகைச்சுவையுடன் செல்கிறது. சந்தானத்தின் நகைச்சுவை கலாட்டா திரையரங்கை அதிர வைக்கிறது. இப்படம் 12 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட படம். இப்போதுதான் வெளிவந்திருக்கிறது. இப்போது கதாநாயகனாக நடித்துவரும் சந்தானம், 12 வருடங்களுக்கு முன்பு கதாநாயகர்களுக்கு நண்பனாக நடித்து நகைச்சுவையில் அசத்தி இருப்பார். அந்த நகைச்சுவையை இப்போது ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் சுந்தர் சி..  கதாபாத்திரத்திற்கேற்ப விஷால் சண்டைக்காட்சியிலும் சிரித்த முகத்துடனே காணப்படுகிறார். வரலட்சுமியும் அஞ்சலியும் கவர்ச்சி காட்டுவதில் போட்டிபோடுகிறார்கள். அரசியல்வாதியாகவும் பின்பு பிணமாகவும்  நடித்திருக்கும் மனோபாலாவின் நகைச்சுவை கதாபாத்திரம் மிகமிக அற்புதம். மனிதர் இறந்துவிட்டாரே என்ற ஏக்கம் ரசிகர்களுக்கு ஏற்படுகிறது. காசு கொடுத்து படம் பார்க்க வரும் ரசிகர்கள் குறைந்தது 2 மணி நேரமாவது தங்களின் மனக் கவலைகளை மறந்து சிரித்துவிட்டு போகட்டுமே என்ற எண்ணத்தில்தான் இப்படத்தை இயக்கியிருக்கிறார் சுந்தர் சி. மதிப்பீடு 5க்கு 3.