சியோன் ராஜா எழுதி இயக்கி ஜியோனா பிலிம் பேக்டரி சார்பில் தயாரித்திருக்கும் படம் ‘சமூக விரோதி‘. இந்தப் படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியீடு நிகழ்வில் தயாரிப்பாளரும் விநியோகஸ்தர் சங்கத் தலைவருமான கே. ராஜன் பேசும்போது ‘இது ஒரு வித்தியாசமான விழா.இங்கே சமூகத்திற்காகப் போராடுபவர்கள் பலரும் வந்துள்ளார்கள். இந்தச் சமூக விரோதி படத்தில் இரண்டு நாள் தான் படபிடிப்பு என்றார்கள். ஆனால் என்னை நன்றாக வேலை வாங்கி விட்டார்கள், எழும்பை நிமிர்த்தி விட்டார்கள். படத்தில் என்னைக் குத்திக் கொன்று விடுவார்கள். செத்த பிறகும் மறுபடியும் சாவு என்றனர். இப்படி ஐந்து முறை சாக விட்டு எடுத்தார்கள்.எத்தனை முறை சாவது என்றேன். அந்த அளவிற்கு நேர்த்தியாக எடுக்க முயற்சி செய்பவர்கள் இவர்கள்.*******
இன்று பெரிய கதாநாயகர்கள் 10 பேர்இருக்கிறார்கள் .அவர்கள் ஒரு இயக்குநர் வளர்ந்த பிறகு தங்களுக்குத் தான் இயக்க வேண்டும் என்கிறார்கள். லோகேஷ் கனகராஜ் மாநகரம் என்று ஒரு தயாரிப்பாளர் படத்தை இயக்கினார். அது மாதிரி தயாரிப்பாளருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுப்பாரா? கொடுக்க மாட்டார் .சிறிய தயாரிப்பாளர்களை பரிசோதனை எலிகளைப் போல அவர்கள் பயன்படுத்துகிறார்கள். புதிய இயக்குநர்கள் சின்ன தயாரிப்பாளர்களிடம் தங்கள் திறமையை நிரூபித்து விட்டு,வெற்றி பெற்று விட்டு வந்த பிறகு தங்கள் படங்களை இயக்க வேண்டும் என்று பெரிய கதாநாயக நடிகர்கள் நினைக்கிறார்கள் இன்று சமூகவிரோதிகள் பட்டியலில் யார் இருக்கிறார்கள்?லஞ்சம் வாங்குபவன், அடுத்தவன் சொத்தை அபகரிப்பவன் என்று சொல்லிக் கொண்டே போகலாம். இந்தச்சமூக விரோதி படம் மக்களால் வரவேற்கப்படும்” என்றார்.
மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி பேசும் போது “திரைப்படத் துறையும் அரசியலும் சம்பந்தமில்லாதது போலும் ஒன்றை ஒன்று தொடர்பு படுத்த வேண்டாம்என்றும் இங்கே சர்ச்சை முன்வைக்கப்பட்டது. திரைத்துறைக்கும் அரசியல் துறைக்கும் சம்பந்தம் உள்ளது. சினிமா ஒரு புகழ்பெற்ற ஊடகமாக வளர்ந்துள்ளது . 1973 –ல் காட் பாதர் படத்தில் நடித்ததற்கு நடிகர் மார்லன்பிராண்டோ ஆஸ்கார் விருதுக்குத் தேர்வானார். அந்த விருது விழாவில் அவர் அந்த விருதை ஏற்காமல் ஒருசெவ்விந்திய பெண்ணை வைத்து தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைப் பேச வைத்தார். அந்தப்பூர்வீக குடிகளின் ஒடுக்குமுறை பற்றிக் கவலைப்பட்டு அந்த விருதை மறுப்பதாகத் தெரிவித்தார்.
கலைஞர்கள் சமூகத்தின் மனசாட்சியாக இயங்க வேண்டும். சார்லி சாப்ளின் உலக சர்வாதிகாரி ஹிட்லரைபார்த்து உலகமே பயந்து கொண்டிருந்த போது டிக்டேட்டர் படத்தில் அவரை நகைச்சுவைக்குரிய கேலிக்குரியவராகக் காட்டி அவர் பிம்பத்தை உடைத்தார். இப்படிக் கலைஞர்கள் சமூக மனசாட்சியாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். இங்கே ரஜினி மக்கள் பிரச்சினைக்குக் குரல் கொடுக்கவில்லை என்று கேட்கும் போது அவர் பதில் தரலாம், மறுக்கலாம். அது அவர் மனசாட்சிக்கு உட்பட்டது. ஆனால் சம்பந்தமில்லாத பிரச்சினைகளில் அவர் குரல் கொடுத்து அதைத் திசை திருப்பி தன்னுடைய ரசிகர்களைத் தவறான பாதையில் செல்ல வழி வகுக்கக் கூடாது. ஸ்டெர்லைட் பிரச்சினையில் ரஜினி அப்படிச் செய்திருக்கக் கூடாது. அவர் ஒரு பெரிய கதாநாயகனாக இருக்கிறார். படங்களில் அவர் உடுத்துகிற உடைகளை ரசிகர்கள் உடுத்துகிறார்கள். அவர் பயன்படுத்தும் சோப்பை பயன்படுத்துகிறார்கள் .அப்படிப் பின்பற்றுபவர்கள்இருக்கும்போது ஸ்டெர்லைட் விவகாரத்தில் தீவிரவாதிகள் புகுந்து விட்டார்கள் என்று கூறியது எவ்வளவு தவறானது .எதற்கும் குரல் கொடுக்காதவர் அப்படிப் பேசும்போது கோபம் வரத்தான் செய்யும்.
அரசியலற்று இருங்கள் அமைதியாக இருங்கள். அதைப் பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. ஆனால் உத்தரப்பிரதேசத்தில் 15 ஆயிரம் பேரை என்கவுண்டர் மூலம் கொலை செய்த யோகி ஆதித்யநாத் பற்றி எதுவுமே தெரியாமல் அவர் காலில் விழும்போது, நாங்கள் கேள்வி கேட்கத்தான் செய்வோம். சமூக விரோதி காலில் ரஜினிகாந்த் விழும்போது அதை நாங்கள் கேள்வி கேட்போம் .சமூக விரோதியை அவர் ஆதரிப்பதாக வேஎடுத்துக் கொள்வோம். நான் மூன்று ஆண்டுகள் ஐநா சபையில் உரையாற்றினேன். மீண்டும் செல்வதற்கு அங்கே அனுமதி உண்டு .ஆனால் 5 ஆண்டுகளுக்கு எனது கடப்பிதழை முடக்கி விட்டார்கள் .
சமூகப் பிரச்சினைகளை பேசினாலே சமூக விரோதிகள் என்கிறார்கள். தேசத்தின் பிரச்சினை பேசினால் தேசவிரோதி என்கிறார்கள். இங்கே எதிர் முகாம் பிரம்மாண்டமாகப் பெரும் பலத்தோடு நிற்கிறது. அப்படிப்பட்டவர்களை இது மாதிரி படங்கள் மூலம் தான் எதிர்க்க வேண்டும். அவர்கள் பலம் பொருந்தியவர்களாக இருக்கிறார்கள். அப்போது டேவிட் கோலியாத் சண்டை போல் நாம் போடவேண்டும். அதனால் தான் இந்த பட முயற்சியை ஆதரிக்கிறோம்” என்று வாழ்த்தினார்.