“திரு.மாணிக்கம்” திரைப்பட விமர்சனம்

ஜி.பி. ரவிக்குமார் தயாரிப்பில் நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி, பாரதிராஜா, நாசர், கருணாகரன், தம்பி ராமைய்யா, இளவரசு, ஶ்ரீமன், சின்னி ஜெயந்த்,வடிவுக்கரசி, அனன்யா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “திரு.மாணிக்கம். கேரளாவில் லாட்டரி சீட்டு விற்பனையாளாராக இருக்கிறார் சமுத்திரக்கனி. ஏழ்மையான குடும்ப வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். கடன் தொல்லையால் அவதிப்படும் பாரதிராஜா சமுத்திரக்கனியிடம் ஒரு லாட்டரி சீட்டு வாங்குகிறார். பாரதிராஜா வைத்திருந்த பணம் தொலந்து போனதால் லாட்டரி சீட்டுக்கு பணம் கொடுக்கவில்லை. பணத்தை கொடுத்துவிட்டு சீட்டை வாங்கிக் கொள்கிறேன் என்று கூறிவிட்டு போய் விடுகிறார். அந்த சீட்டை சமுத்திரக்கனி தனியாக எடுத்து வைத்து விடுகிறார். சில தினங்கள் கழித்து அந்த சீட்டுக்கு ரூ. ஒன்றரை கோடி பரிசு விழுகிறது. அந்த சீட்டை எடுத்துக் கொண்டு சமுத்திரக்கனி பாரதிராஜாவை தேடிச் பேரூந்தில் செல்கிறார். இது அவரது மனைவி அனன்யாவுக்கும் போலீஸ்காரர்களுக்கும் தெரிய வருகிறது. விற்பனையாகாத சீட்டு நமக்குத்தான் சொந்தம் என்று சமுத்திரக்கனியின் மனைவியும் அவரது உறவினர்களும்  சீட்டை வீட்டுக்கு கொண்டுவரச் சொல்கிறார்கள். இதற்கிடையில் அந்த சீட்டை அபகரிக்க போலீஸ்காரர்களும் சமுத்திரக்கனியை தேடிச் செல்கிறார்கள். அந்த சீட்டை சமுத்திரகனி வீட்டுக்கு கொண்டு வந்தாரா? அல்லது போலீஸ்காரர்கள் அந்த சீட்டை அபகரித்தார்களா? என்பதுதான் கதை. உண்மையாளர்களை உலகம் கைவிடுவதில்லை என்பதை இத்திரைப்படத்தின் மூலம் தெளிவு படுத்தியிருக்கிறார் இயக்குநர் நந்தா பெரியசாமி. படம் ஆரம்பம் முதல் இறுதிவரை பார்வையாளர்களை அங்கெங்கும் அசையாதபடி காட்டிப்போட்டுவிடுகிறார் இயக்குநர். திரைக்கதையின் ஒவ்வொரு நகர்வோடு நம்மையும் பயணிக்க வைத்திருக்கும் இயக்குநர் பாராட்டுதலுக்குரியவர். சமுத்திரக்கனி ஒரு குடும்பத்தலைவனாகவும் நேர்மையானவராகவும் திரையில் வாழ்ந்திருக்கிறார். குடும்பத்தலைவியாக வரும் அனன்யாவின் நடிப்பு அபாரம். வயோதிகராக வரும் பாரதிராஜா, கர்பிணியான தன் மகள் வாழாவெட்டியாக தன் வீட்டில் தங்கியிருக்கும் நிலையை கண்டு கண்களங்கும் காட்சியில் அவரின் திரையுலக முதிர்ச்சியை காணமுடிகிறது. மெல்லிய குரலில் ஏழ்மையின் எதார்த்தத்தை சொல்லும் காட்சியில் சபாஷ் போட வைக்கிறார். காட்டுப் பாதையில் ஶ்ரீமன் ஓட்டிச்செல்லும் பேரூந்தை காட்டு யானைகள் வழிமறிக்கும் காட்சியில் மட்டும்தான் நகைச்சுவையிருக்கிறது. ஒளிப்பதிவும் இசையும் கண்ணுக்கும் காதுக்கும் விருந்தளிக்கிறது. குடும்பத்துடன் சென்று பார்க்கவேண்டிய படம் “திரு.மாணிக்கம்”.