“மேக்ஸ்” திரைப்பட விமர்சனம்

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் விஜய் கார்த்திகேயா இயக்கத்தில் சுதீப், இளவரசு, வரலட்சுமி சரத்குமார், ஆடுகளம் நரேன், ரெடின் கிங்ஸ்லி, சம்யுக்தா ஹெர்நாட், சுக்ருதா வாக்லே, சுனில், சரத் லோகிதாஸ்வா, வம்சி கிருஷ்ணா, பிரமோத் ஷெட்டி, அனிருத் பட், உக்ரம் மஞ்சு ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “மேக்ஸ்”. ஒரு மாலை நேரத்தில் தனது 13வயது மகளை காணவில்லை என்று புகார் அளிக்க காவல் நிலையத்திற்கு ஒரு பொற்றோர்கள் வருகிறார்கள். “நாளை காலையில் பதவி ஏற்க புதிய ஆய்வாளர் வருகிறார். அதனால் நாளை காலையில் வா” என்று கூறி அவர்களை அனுப்பி வைக்கிறார் தலைமை காவலர் இளவரசு. நாளை காலையில் பதவி ஏற்க அந்த்க ஊருக்கு வருகிறார் ஆய்வாளர் சுதீப். வரும் வழியில் ஒரு அமைச்சரின் மகனும் அவனது நண்பனும் குடி போதையில் காரை ஒட்டி வருகிறார்கள். அந்த கார் போலீஸ் தடுப்பு கம்பியின் மீது மோதி நிற்கிறது. இதை தட்டிக்கேட்கப்போன பெண் போலீசின் காக்கிச் சட்டையை கிழிக்கிறார் அமைச்சரின் மகன். இதைப் பார்த்த ஆய்வாளர் சுதீப், அந்த இருவரையும் அடித்து உதைத்து போலீஸ் நிலைய சிறையில் அடைத்துவிட்டு காலையில் வருவதாக கூறி வீட்டுக்கு செல்கிறார். சென்றயுடன் சிறையில் அடைத்து வைத்த இருவரும் இறந்து கிடக்கிறார்கள் என்று சுதீப்புக்கு போலீஸ் நிலையத்திலிருந்து போன் வருகிறது. அமைச்சரின் மகன் இறந்ததால் நம்மை எல்லோரையும் அமைச்சரின் அடியாட்கள் குடும்பத்துடன் கொலை செய்து விடுவார்கள் என்று மற்ற போலீஸ்காரர்கள் பயந்து நடுங்குகிறார்கள். அமைச்சரின் மகனை கொலை செய்தது யார்? ஏன் கொலை செய்யப்பட்டார்கள்? அமைச்சரின் அடியாட்களிடமிருந்து மற்ற போலீஸ்காரர்களை சுதீப் காப்பாற்றினாரா? காணாமல் போன கொலை செய்யப்பட்டவகளின் உடல்கள் என்ன ஆனது? என்பதுதான் கதை. கதை முழுவதும் ஒருநாள் இரவிலேயே நடந்து முடிகிறது. காட்சியின் ஒவ்வொரு நகர்வும் விறுவிறுப்புடனும் அடுத்தக்கட்டத்தை ஆவலுடன் எதிர்பார்க்வும் வைக்கிறது. சுமார் இரண்டு மணி நேரம் ஓடும் படத்தில் ஒரு வினாடிகூட வீணடிக்கப்படவில்லை. பிரமிக்க வைக்கும் சண்டைக் காட்சிகளும் பின்னணி இசையும் பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்கு கொண்டுவருகிறது. சுதீப்பின் அசால்ட்டான நடிப்பு அனைவரையும் கவர்கிறது. உச்சக்கட்ட காட்சி எழுந்து நின்று கைத்தட்ட வைக்கிறது.