நாளை நடைபெற இருக்கும் புதிய பாராளுமன்றத் திறப்புவிழா ஒரு தேசியக் கொண்டாட்டம். எனக்கும் மிகுந்த பெருமிதம் கொடுக்கும் நிகழ்வு இது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நேரத்தில் இந்திய அரசாங்கத்திற்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தேச நலன் கருதி, பாராளுமன்றத் திறப்புவிழாவை நானும் வரவேற்கிறேன். அதே சமயத்தில், மாண்புமிகு இந்தியக் குடியரசுத் தலைவரை இந்த நிகழ்ச்சிக்கு அழைக்காததற்கும், திறப்புவிழா நிகழ்வின் திட்டமிடலில் எதிர்க்கட்சிகளை இணைத்துக் கொள்ளாததற்கும் எனது எதிர்ப்பினைப் பதிவு செய்கிறேன்.
தேசத்திற்கே பெருமிதம் தரவேண்டிய ஒரு தருணம், அரசியல்ரீதியான பிரிவினைகளை வெளிப்படுத்துவதாக அமைந்துவிட்டது துரதிர்ஷ்டவசமானது. மாண்புமிகு பாரதப் பிரதமரிடம் நான் முன்வைப்பதெல்லாம் ஒரே ஒரு எளிய கேள்விதான்: “தயவுசெய்து இந்தத் தேசத்தின் மக்களுக்கு ஒன்றை மட்டும் தெரியப்படுத்துங்கள், ஏன் மாண்புமிகு இந்தியக் குடியரசுத் தலைவர் நமது புதிய பாராளுமன்றத் திறப்புவிழாவில் கலந்துகொள்ளக் கூடாது?”
இந்தத் தேசத்தின் தலைவர் என்ற முறையில் குடியரசுத் தலைவர் இந்த முக்கியமான நிகழ்வில் ஏன் கலந்துகொள்ளக்கூடாது என்பதற்கான காரணமாக எனக்கு எதுவுமே புலப்படவில்லை.
பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் சட்ட வரைவுகள் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைத்தால்தான் இந்த நாட்டில் அது சட்டங்களாகவே ஆகமுடியும். பாராளுமன்றத்தின் அமர்வுகளைத் தொடங்கவும், தள்ளிவைக்கவும் குடியரசுத் தலைவருக்கே அதிகாரம் உண்டு. பாராளுமன்றம் செயல்படுவதில் நாட்டின் குடியரசுத் தலைவருக்கும் மிக முக்கியப் பங்கு உண்டு.
இந்த விவகாரத்தில் சமரசம் நிலவும் விதமாக மாண்புமிகு இந்தியக் குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு அவர்களை இந்நிகழ்வுக்கு அழைக்க வேண்டும் என்பதை என் தரப்பு ஆலோசனையாக பிரதமருக்குத் தெரிவிக்கிறேன்.
புதிய பாராளுமன்றம் சாதாரணமானதொரு கட்டடம் மட்டும் அல்ல. இனி வருங்காலம் நெடுக அதுவே இந்தியக் குடியரசின் அரசியல் உறைவிடமாகத் திகழும். மாபெரும் வரலாற்றுப்பிழையாக இடம்பெறக்கூடிய ஆபத்துமிக்க இந்தப் பிழையை உடனடியாக சரிசெய்யும்படி பிரதமரை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இந்தத் தவறு சரிசெய்யப்பட்டால், அரசியல் தலைமைகளின் வரலாற்றில் இஃதொரு மைல்கல்லாகத் திகழும்.
நமது குடியரசின் உறைவிடத்தில் அதன் அத்தனை உறுப்பினர்களும் சென்று அமரவேண்டும். அனைத்துத் தரப்பினரும் பங்கேற்பதே சரியான மக்களாட்சி என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை. எனவே, இந்த நிகழ்வைப் புறக்கணிக்க முடிவுசெய்திருக்கும் அத்தனை எதிர்க்கட்சிகளையும் கூட தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யக் கோருகிறேன். இதனை ஒட்டி உங்களுக்கு இருக்கும் மாற்றுக் கருத்துக்களை பொதுவெளியில் பதிவு செய்யலாம், புதிய பாராளுமன்றத்தின் சபையிலும் பதிவு செய்யலாம்.
நம்மைப் பிரிப்பவற்றைக் காட்டிலும் இணைப்பவை அதிகம் என்பதை அனைத்துக் கட்சியினரும் நினைவில் கொள்ள வேண்டுகிறேன். இந்த நிகழ்வுக்காக நமது தேசமே ஆர்வமாகக் காத்திருக்கிறது, மொத்த உலகமும் அமைதியாக நம்மை உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது. புதிய பாராளுமன்றத் திறப்புவிழாவை நமது தேசிய ஒருமைப்பாட்டின் நிகழ்வாக ஆக்குவோம், நமது அரசியல் கருத்து வேறுபாடுகளை ஒரு நாள் தள்ளிவைப்போம்.