கண்ணுசாமி ராமச்சந்திரன் தயாரித்து கதை எழுதி இயக்கிருக்கும் படம் ‘வட்டார வழக்கு‘. சோழவந்தான் கிராமத்தின் பகுதியில் இரு பங்காளிகளுக்குள் நடக்கும் பகையை வெட்டுக்குத்துடன் காட்டியிருக்கிறார் இயக்குநர். இதில் சிறப்பம்சம் எதுவென்றால், பறந்து பறந்து குத்தும் சினிமாத்தனம் சிறிதுமில்லாமல், தரையில்கட்டிப்புரண்டு சண்டையிடும் காட்சியிலும் இசைக்கருவிகளின் ஓசையில்லாமல், பெண்களின் அலறல் சத்தத்தை மட்டும் பின்னணிக்குரலாக கொடுத்து கிராமத்தில் நடக்கும் இயற்கையான சண்டையை காணவைத்த இளையராஜாவின் பின்னணி இசை பாராட்டுதலுக்குறியது. வெண்திரையில் படம் ஓடுகிறது என்பதை நாம் மறந்துவிட்டு, நாமும் அந்த கிராமத்துக்குள்தான் இருக்கின்றோம் என்ற உணர்வை ஏற்படுத்துகின்றது. பகையையும் பாசத்தையும் கலந்து கொடுத்திருக்கின்றார் இயக்குநர் கண்ணுசாமி ராமசந்த்ரன். கதாநாயகன்சந்தோஷ் நம்பிராஜனும் கதாநாயகி ரவீனா ரவியும் கிராமத்தானுக்கு மிகப் பொருத்தமாக நடித்திருக்கிறார்கள்.