‘கருடன்’ திரைப்பட விமர்சனம்

கே குமார் தயாரிப்பில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி சசிகுமார், உன்னி முகுந்தன் சமுத்திரக்கனி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ‘கருடன்’. தேனியில் ஒரு கோவில் உள்ளது அந்தக் கோவிலை அவ்வூர் ஜமீன்தாரின் வாரிசான உன்னி முகுந்தன் கவனித்து வருகிறார். அதே ஊரில் செல்வந்தராக  சசிகுமார் இருக்கிறார்.  இருவரும் சிறுவயது நண்பர்களாவார்கள்.  சிறு வயதிலேயே அனாதையான சூரியை ஜமீன்தாரின் குடும்பத்தினர் ஒரு பிள்ளையாகவே பாவித்து வளர்த்து வருகிறார்கள்.  அவர் உன்னி முகுந்தனுக்கு விசுவாசமாக நடந்து கொள்கிறார். ஒரு கட்டத்தில் உன்னி முகுந்தனும் சசிகுமாரும் எதிரிகளாக மாறுகிறார்கள்.  செஞ்சோற்றுக் கடனை தீர்க்க அதர்மம் செய்யும் உன்னி முகுந்தன் பக்கத்தில் சூரி நிற்கிறாரா? அல்லது தர்மம் செய்யும்  சசிகுமாரின் பக்கத்தில் சூரி நிக்கிறாரா? என்பது தான் கதை. இந்தப் படத்தின் மூலம் ஒரு கதாநாயகனாகவே பட்டை தீட்டப்பட்டு இருக்கிறார் சூரி. சூரியின் நடிப்பு உச்சத்தை தொட்டிருக்கிறது. காதல் வசப்படுவதிலும், உன்னி  முகுந்தனின்  சூழ்ச்சிகளை அறிவதிலும், பாசத்தின்  உணர்வுகளை  வெளிப்படுத்துவதிலும் சூரி, ஒரு நாட்டிய கலைஞரின் முகபாவத்தை அப்படியே வெளிப்படுத்தி இருக்கிறார். உன்னி முகந்தனின் அமைதியான நடிப்பும், சசிகுமாரின் ஆவேசமான நடிப்பும்  பாராட்டும்படி உள்ளது.   தேனியின் மண்வாசனையை ஒளிப்பதிவாளர் திரையில் மணக்கச் செய்துள்ளார். யுவன் சங்கர் ராஜாவின் இசை படத்தின் வெற்றிக்கு பக்க பலமாக உள்ளது.