கருணாமூர்த்தி தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அதர்வா, சரத்குமார், ரஹ்மான், சின்னி செயந்த், துஷ்யந்த், அம்மு அபிராமி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “நிறங்கள் மூன்று”. துஷ்யந்தும் அம்மு அபிராமியும் காதலர்கள். ஒருநாள் அம்மு அபிராமி காணாமல் போய்விடுகிறாள். அதே நேரத்தில் ஒரு இளம்பெண் கடத்தப்படுவதை துஷ்யந்த் பார்க்கிறார். அந்தப் பெண்தான் தனது காத்கலியாக இருக்குமோ என்று கலங்குகிறார். ரஹ்மான் ஒரு உயர்நிலைபாடசாலையில் ஆசிரியராக இருக்கிறார். அவரின் மகள்தான் அம்மு அபிராமி. துஷ்யந்த் ரஹ்மானின் பாடசாலை மாணவன். இப்படியிருக்க ஒருநாள் ரஹ்மான் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொள்கிறார். சரத்குமார் லஞ்சம் வாங்கும் போலீஸ் அதிகாரி. அவர் சுடப்பட்டு சாகிறார். அதர்வா சினிமா இயக்குநராக வேண்டுமென்று ஆசைப்படுகிறார். அவர் எழுதிவைத்த கதையை யாரோ திருடி ஒரு படக் கம்பெனிக்கு விற்றுவிடுகிறார்கள். அந்த திருடன் யார் என்று தேடுகிறார். இந்த மூன்று பேர்களின் மிருக குணங்களை எடுத்துச் சொல்லுவதுதான் கதை. ரஹ்மானின் காமம், அதர்வாவின் போதை, சர்த்குமாரின் சுயநலம் இவைகளைத்தான் படம் முழுக்க சித்தரித்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக் நரேன். சரத்குமார், அதர்வா, ரஹ்மான் மூவருமே கதாநாயகர்களாக தமிழக ரசிகர்களால் அறியப்பட்டவர்கள். நன்றாகவே மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கிறார்கள். எதிர்மறை கதாபாத்திரத்திலும் திறம்பட நடிக்க முடியும் என்பதையும் மூவருமே நிரூபித்துள்ளார்கள். ஒரு தந்தை செய்யக்கூடாத தவறை செய்த பிறகு வருந்தி கண்கலங்கும் காட்சியில் ரஹ்மானின் நடிப்பு கைத்தட்ட வைக்கிறது. போதை தலைக்கேறிவிட்டால் எப்படியெல்லாம் நடந்து கொள்வார்கள் என்பதை தத்ரூபமாக நடித்துள்ளார் அதர்வா. சுயநலவாதிகள் வெட்கமில்லாமல் நடந்து கொள்வதை அழகாக நடித்துக் காட்டியிருக்கிறார் சரத்குமார்.