கேரளாவை மிரட்டும் ஸிகா வைரஸ்

‘ஸிகா வைரஸ் குறித்து அச்சப்படத் தேவையில்லை; கொசு தானே என, அலட்சியமாக இருந்து விடவும் வேண்டாம்’ என, டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்னும் முழுவதுமாக வெளிவராத நிலையில்,’ஸிகா’ வைரஸ் பாதிப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. அண்டை மாநிலமான கேரளாவில், திருவனந்தபுரம் அருகே, 24 வயது கர்ப்பிணி ஸிகா வைரசால் பாதிப்பட்டது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, 15 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளது, தெரியவந்துள்ளது.கடந்த, 1947ம் ஆண்டு உகாண்டாவில் குரங்குகளிடம், அதன்பின், 1952ல் மனிதர்களிடம் இப்பாதிப்பு இருப்பது உறுதியானது. இதுவரை, 86 நாடுகளில் இப்பாதிப்பு பதிவாகியுள்ளது. இந்தியாவில், 2017 ம் ஆண்டு குஜராத் மாநிலம், அஹமதாபாத்திலும், தமிழகத்தில் கிருஷ்ணகிரியிலும், ஸிகா வைரஸ் பாதிப்புபதிவானது.ஸிகா வைரஸ் குறித்து எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என்றாலும், கொசு தானே என, அலட்சியமாக இருந்து விடவும் வேண்டாம் என, எச்சரிக்கின்றனர் டாக்டர்கள்.
சுற்றுப்புறதுாய்மை அவசியம் : கோவை அரசு மருத்துவமனை சமூக நோயியல் துறை பேராசிரியர் காளிதாஸ் கூறியதாவது:ஸிகா வைரசை பகலில் கடிக்கும், ‘ஏடீஸ்’ வகை பெண் கொசுக்கள் தான் பரப்புகின்றன. கர்ப்பிணியிடம் இருந்து குழந்தைக்கு பரவும் வாய்ப்புகள் அதிகம். உடலுறவின் போதும் பரவுகிறது.தற்போது மழைக் காலம் என்பதால், டயர், பிளாஸ்டிக் டிரம்கள், ஆட்டுக்கல், தொட்டிகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நமது சுற்றுப்புறத்தில் கொசு ஒழிப்புக்கு புகை அடித்தல், மருந்து தெளித்தல் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும். தற்போது காய்ச்சலுடன் வருபவர்களுக்கு முதற்கட்டமாக கொரோனா பரிசோதனை, அதன்பின் டெங்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இவ்விரு பாதிப்புகள் இல்லாதபோது, ஸிகா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. சுற்றுப்புறத்தை துாய்மையாக வைத்துக் கொள்வது அவசியம். இவ்வைரஸ் பாதிப்பு குறித்து கண்டறிய ரத்தமாதிரிகள் புனேவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி பரிசோதனை மேற்கொள்ளப்படும். இவ்வாறு, அவர் கூறினார். வைரஸின் தன்மை’பிளாவி’ எனும் ஆர்.என்.ஏ., வகையை சேர்ந்த இந்த வைரஸ், டெங்கு, மஞ்சள் காய்ச்சல், ஜப்பானிய மூளைகாய்ச்சல், வெஸ்ட் நைல் ஆகிய நோய்களை ஏற்படுத்தும் வைரஸை போன்றது. பரிசோதனைகள் : நாள் பரிசோதனை, எதிர்ப்பாற்றல் புரதப்பரிசோதனை, பி.சி.ஆர்., பரிசோதனை. சிகிச்சைகள்பிரத்யேக சிகிச்சைகள் இல்லை. காய்ச்சல், தலைவலி உள்ளிட்டவற்றுக்கு மேற்கொள்ளப்படும் சிகிச்சை நடைமுறைகள் பின்பற்றப்படும்.அறிகுறிகள் என்னென்ன?’ஏடிஸ்’ கொசு கடித்த 4 – 15 நாட்களுக்குள் காய்ச்சல், தலைவலி, அரிப்பு, வெண்படலம், தசை, மூட்டு வலி, கண் சிவத்தல், வலி, உடல் அசதி, சோர்வு ஏற்படுகிறது. பெரும்பாலான நோயாளிகளுக்கு அறிகுறிகள் இருக்காது. கர்ப்பிணியை இவ்வைரஸ் தாக்கினால், ரத்தம் வாயிலாக சிசுவுக்கும் பாதிப்பு ஏற்படும். பிறக்கும் குழந்தையால் கை, கால், தசைகளை அசைக்க முடியாத அளவுக்கு இறுக்கமாக இருக்கும்.கண்கள் பாதிப்பு, காது கேளாமை உள்ளிட்டவை ஏற்படலாம். நோயால் பாதிக்கப்படும் கர்ப்பிணிக்கு பிறக்கும் குழந்தையின் தலை சிறிதாக இருக்கும். இதற்கு ‘மைக்ரோசேப்லே’ என்று பெயர். இதனால், மூளை வளர்ச்சி குறையும். இருதயம் உள்ளிட்ட பிற உறுப்புகளில் பிறவிக்குறைபாடுகளும் ஏற்படலாம்.