யாழ்குணசேகரன் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘கெழப்பயா‘. இப்படத்தில் கதிரேசகுமார், விஜய ராணாதீரன், கே.என்.ராஜேஷ், பேக்கரி முருகன், அனுதியா, உரியடி ஆனந்தராஜ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஒருகாரில் ஒரு கர்ப்பிணி பெண் உள்பட நான்கு இளைஞர்கள் நகர் பகுதிக்கு செல்ல ஒரு கிராமத்தின் வழியாகசெல்கிறார்கள். அந்த கிராமத்தின் சாலையில் இவர்களின் காருக்கு முன்னால் ஒரு வயதான முதியவர் பழைய மிதிவண்டியில் காருக்கு வழிவிடாமல் செல்கிறார். பலமுறை ஒலிபெருக்கியை எழுப்பியும் காதில் வாங்கிக்கொள்ளாமல் மெதுவாக செல்கிறார். விரக்தியான இளைஞர்கள் முதியவரை அடித்து பயங்கரமாகதாக்குகிறார்கள். அடிவாங்கியும் முதியவர் அவர்களுக்கு வழிவிடவில்லை. ஏன் அந்த இளைஞர்களுக்கு வழிவிடமறுக்கிறார் என்பதை உச்சக்கட்ட காட்சியில் இயக்குநர் அழகாக விளக்கியிருக்கிறார். படத்தின் முன்பகுதிமுழுவதும் வழிவிட மறுக்கும் காட்சிதான் என்றாலும் சலிப்பு தட்டாமல் கதை நகர்கிறது. படத்தின் பின்பகுதியையும் வழிவிட மறுக்கும் காட்சிதான் ஆக்கிரமித்து கொள்கிறது. ஆனாலும் அடுத்தக்கட்டம் எதுஎன்பதை அறிய ஆவலை தூண்டவைக்கிறது. காரணம், கதையின் ஓட்டத்தில் வேறு கிளைக்கதைகளை சொருகாமல் பயணிப்பதுதான். திரைக்கதையை ஒரு புதிய பாதையில் கொண்டு செல்கிறார் இயக்குநர். கிராமத்தின் வரண்ட பூமியையும் புழுதிக்காற்றையும்கண்ணுக்கு விருந்தாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் அஜித்குமார்.