அரசு நிலங்களை பயனாளிகளுக்கு ஒப்படை செய்வது தொடர்பாக ஆந்திர அரசால் அமைக்கப்பட்ட குழுவானது தமிழ்நாடு அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் சந்திப்பு

ஆந்திரப்பிரதேச அரசானது அரசு நிலங்களை தகுதியான பயனாளிகளுக்கு ஒப்படை செய்வதில் உள்ள பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக அம்மாநில வருவாய். பதிவுகள் மற்றும் பத்திரங்கள் துறையின் அமைச்சர் தலைமையில் அமைச்சர்கள். சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் அடங்கிய ஒரு குழுவினை அமைத்துள்ளது.

அக்குழுவானது, மேற்கண்ட பொருள் தொடர்பாக தமிழ்நாட்டின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் தலைமையில் தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறை உயர் அலுவலர்களுடன் விவாதிக்கும் பொருட்டு இன்று (23.1.2022) சென்னை வந்தனர். அக்குழுவில், ஆந்திரப் பிரதேச வருவாய், பதிவுகள் மற்றும் பத்திரங்கள் துறை அமைச்சர் திரு.தர்மான பிரசாத ராவ், சமூக நலத்துறை அமைச்சர் திரு.மெருகு நாகர்ஜீனா, நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு ஆடிமூலபு சுரேஷ், கோடூரு சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர் திரு.கொரமுட்ல சீனிவாசலு, சத்தியவேடு சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர் திரு கோனேட்டி ஆதிமூலம், சிங்கனமாலா சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர் திருமதி. ஜொன்னலகட்டா பத்மாவதி, ஆந்திரப்பிரதேச அரசின் நில நிர்வாக கூடுதல் முதன்மை ஆணையர், திரு.இம்தியாஸ், இ.ஆ.ப., இணைச் செயலாளர். திரு.கணேஷ்குமார். இ.ஆ.ப. மற்றும் உயர் அலுவலர்கள் இடம் பெற்றிருந்தனர்.

இப்பொருள் தொடர்பாக இன்று (23.01.2023) சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், தமிழ்நாடு அரசின் சார்பில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர்                       திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் அவர்கள், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.குமார் ஜெயந்த், இ.ஆ.ப., நில நிர்வாக ஆணையர் திரு.சீ.நாகராஜன். இ.ஆ.ப., மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர் திரு.ஆனந்த், இ.ஆ.ப., மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேற்படி கூட்டத்தில் தமிழ்நாட்டில் அரசு புறம்போக்கு நிலங்களை தகுதியான பயனாளிகளுக்கு நில ஒப்படை செய்ய பின்பற்றப்படும் நடைமுறைகள் குறித்தும், ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் பயனாளிகளுக்கு வழங்கப்படும் இலவச வீட்டுமனைப்பட்டாக்கள் குறித்தும், இணையவழியில் நில ஒப்படை ஆவணங்களை பதிவு செய்வது குறித்தும் வருவாய்த் துறை செயலாளர் மற்றும் நில நிர்வாக ஆணையரால் ஆந்திரப் பிரதேச குழுவினருக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

மேற்படி கூட்டத்தில் ஆந்திரப் பிரதேச குழுவினரால் அரசு நிலங்களை ஒப்படை செய்வது தொடர்பாகவும், நிலச் சீர்திருத்த மற்றும் நில உச்சவரம்பு சட்டங்கள் தொடர்பாகவும் எழுப்பப்பட்ட பல்வேறு சந்தேகங்கள் தெளிவாக விளக்கம் அளிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில் தமிழ்நாட்டில் நில ஆவணங்கள் பராமரிப்பு குறித்தும், இலவச வீட்டுமனைப்பட்டாக்கள் வழங்கும் திட்டங்கள் குறித்தும், நில ஒப்படை நடைமுறைகளை கணினிமயமாக்குதல் குறித்தும் ஆந்திரப்பிரதேச குழுவினர் தமிழ்நாட்டு அரசுக்கு பாராட்டு தெரிவித்தனர்.