மதுரையை எரித்த கண்ணகி குற்றவாளியா? “கொங்கைத்தீ” நவீன தெருக்கூத்து நாடகம்

முற்காலத்தில் இராமாயணம் மகாபாரதம் போன்ற புராணக் கதைகளை பாவைக்கூத்து, தெருக்கூத்து என்ற பெயரில் தெருவீதிகளில் அடவுகட்டி (வேடம்) பாட்டுப்பாடி காலில் சலங்கை கட்டி ஆடுவார்கள். அந்த தெருக்கூத்து  பிறகு பரிணாம வளர்ச்சி பெற்று வீதிகளில் மேடை அமைத்து ஆடும் நாடகமாக உருமாற்றம் பெற்றது. அதன் பிறகு புராணக்கதைகள் மறையத் தொடங்கி, சமுதாய சீர்த்திருத்த நாடகங்கள் வளர தொடங்கின. வீதிகளில் நடந்த மேடை நாடகங்கள் நவீன காலத்திற்கேற்ப தற்போது மண்டப அரங்கங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில் முற்காலத்து கலை பொக்கியஷத்தை நவீன காலத்து செல்வந்தர்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே பிரேம சதாசிவம் என்பவர் “கொங்கைத்தீ” என்ற பெயரில் கண்ணகி காவியத்தை தயாரித்துள்ளார். குளிரூட்டப்பட்ட  ஒரு சிறிய அரங்கத்தில் மேடையில்லாமல் தரையில் நடிகர்கள் நடித்துக் காட்டினார்கள். முற்காலத்து தெருக்கூத்தில் கட்டியக்கரர்கள் முன்கூட்டியே கதையை கூறுவார்கள். அதைப்போலவே இந்நாடக அரங்கிலும் ஜனனி மற்றும் சபரி ஆகியோர் கண்ணகி கோவலனின் தன்மைகளைப்பற்றி நயம்பட உச்சரித்து கூறியது பாரவையாளர்களை மிகவும் கவர்ந்தது. இந்நாடகத்தில் ஜனனி இசையமைத்து பின்னணிப் பாடலும் பாடினார். கேட்பதற்கு இனிமையாக இருந்தது. கட்டியக்காரர்கள் கோவலனைப்பற்றியும் கண்ணகியைப்பற்றும் கூறுகிறார்கள். கோவலன் வணிகர் குலத்தில் பிறந்தாலும் அவனுக்கு கணக்கு பார்க்கவே தெரியாது. (கணக்குப் பண்ணத்தான் தெரியும்) அவன் தினமும் தாசிகளை நாடிச் செல்வதையே வழக்கமாக கொண்டிருக்கிறான். சோழ மன்னர் சபையில் நடனமாடிய தாசிகுலப் பெண் மாதவியின் அழகில் மயங்கி அவளையே திருமணமும் செய்துகொண்டு மாதவியின் வீட்டிலேயே தங்கிவிடுகிறான் கோவலன். கோவலனுக்கும் மாதவிக்கும் மணிமேகலை என்ற பெண் குழந்தையும் பிறக்கிறது. மாதவியின் பெற்றோர்கள் கோவலனின் சொத்துக்களையெல்லாம் பறித்துக் கொண்டு அவனை பரதேசியாக்கிவிடுகிறார்கள். இந்நிலையில் மாதவி தாசிக்குல பெண் என்பதால் அவள்மீது சந்தேகப்படுகிறான் கோவலன். அதனால் மாதவியைவிட்டுப்பிரிந்து பரதேசியாக கண்ணகியிடம் வருகிறான். பிழைப்பு நடத்த கண்ணகியின் கால் சிலம்பில் ஒன்றை விற்று பொருள் ஈட்டுவதற்காக கோவலனும் கண்ணகியும் மதுரைக்கு செல்கிறார்கள். அங்கே கோவலனை கள்வன் என்று கூறி கொன்றுவிடுகிறான் பாண்டிய மன்னன்.  அதற்கு பழிக்குப்பழி தீர்ப்பதாக கூறி மதுரை மாநகரத்தியே தீக்கு இரையாக்குகிறாள் கண்ணகி. இந்த கதை அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

இக்கதையை முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் எளிதாக்கி ரசிக்கும்படி தந்திருக்கிறார் இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி. நாடகத்தின் உச்சக்கட்ட காட்சிக்கு முந்திய காட்சிகளில் கண்ணகியாக நடித்த கவிதா ஷிவக்குமார், பூனை மம்புவதுபோல் அமைதியாக நடித்தார். ஆனால் உச்சக்கட்ட காட்சியில் பாண்டிய மன்னன் சபையில் புலியாக பாய்ந்தார். கண்களை அகல விரித்து உருட்டிக் கொண்டு நடித்த நடிப்பைப் பார்த்தால் உடம்பில் ரோமங்கள் சிலிர்த்துக் கொண்டன. நல்ல வேளையாக சிறு குழந்தைகள் அரங்கில் இல்லை. இருந்திருந்தால் அதற்கு ஜுரமே வந்திருக்கும். அப்படிப்பட்ட ஒரு ஆவேச நடிப்பு.

மாதவியாக நடித்த பிரீத்தி,  தாசிகுலப் பெண்களின் உடல் நளினத்தை பார்வையாளர்களின் கண்முன் நிறுத்தினார். கோவலனாக நடித்த சாமிநாதன் பிரித்திக்கு சம அளவு ஈடுகொடுத்து நடித்தது ரசிக்கும்படியாக இருந்தது. கவுந்தியடிகளாக நடித்த லதாவின் குரல் உச்சரிப்பு கேட்கும்படி தெள்ளத்தெளிவாக இருந்தது. ஜனனிக்கும் சபரிஷ்க்கும் என் தனிப்பட்ட வாழ்த்துக்கள். உங்களின் சொல் உரையாடல் அலாதியானது.

(கணவனை கொன்ற குற்றத்திற்காக பாண்டிய மன்னன் பழியாகலாம். ஆனால் மதுரை மக்கள் ஏன் தீக்கு பழியாக வேண்டும். விசாரணையின்றி கோவலனை கொன்ற குற்றத்திற்காக தன் உயிரை நீத்து நீதிகாத்தான் பாண்டியன். அவன் மார்பில் சாய்ந்து உயிர் துறந்தாள் மன்னனின் மனைவி பாண்டிமா தேவி. அத்துடன் விடவில்லை சோழகுடி மகள் கண்ணகி. மன்னன் வாழ்ந்த அரண்மனையை தீக்கிரையாக்கினாள். அத்துடன் நிறுத்தியிருந்தால் கண்ணகியின் நீதி போற்றப்பட்டிருக்கும். ஆனால் எந்த குற்றமும் செய்யாத மதுரை மக்களையும் மதுரை நகரையும் எரித்தது கண்ணகி செய்த குற்றம்தானே. நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று இறைவனையே நேருக்கு நேர் கேள்வி கேட்ட நக்கீரன் இருந்திருந்தால் கண்ணகியை எரித்திருப்பானோ? என்னவோ?).

-சிவசண்முகப்பிரியன்-

—————–