நிறை குறையோடு எரியும் “லாந்தர்”.

ஶ்ரீ விஷ்ணு தயாரிப்பில் சஜி சலீம் இயக்கத்தில் விதார்த், ஸ்வேதா டோரத்தி, விபின், சஹானா, பசுபதி ராஜ், கஜராஜ், மீனா புஷ்பராஜ், மதன் அர்ஜுனன் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “லாந்தர்”. விதார்த் மனிதாபிமானமிக்க போலீஸ் அதிகாரி. அவரின் பகுதியில் முகமூடி அணிந்த ஒரு உருவம் இரவு நேரங்களில் எதிரில் வந்தவர்களை எல்லாம் அடித்து கொலை செய்கிறது. அது யார் என்பதை கண்டுபிடித்து கைது செய்ய விதார்த்துக்கு மேலிடத்திலிருந்து உத்தரவு வருகிறது. அந்த உருவத்தை கைது செய்ய நெருங்கிவரும் சமயத்தில் அந்த உருவம் காரில் அடிபட்ட முகம் சிதைந்த நிலையில் இறந்தும் விடுகிறது. அதன் பிறகும் அதே போன்ற ஒரு முகமூடி உருவம் இரண்டு நபர்களை கொலை செய்கிறது. யார் அந்த உருவம் என்பதை கண்டுபிடிப்பதுதான் கதை. படத்தின் முன்பகுதி காரில் அடிபட்டு இறந்துபோன உருவம் யார் என்பதில் கண்டுபிடிக்கும் காட்சிகள் அனைத்தும் மிகவும் திகிலூட்டும் காட்சிகளாக பார்வையாளர்களை கவர்கிறது. படத்தின் பின்பகுதியில் இரண்டொரு காட்சிகளிலேயே அந்த உருவம் யாருடையது என்பதை காட்டிவிடுவதால் முன்பகுதியின் திகிலூட்டும் காட்சிகளை பார்த்து முறுக்கேறியிருந்த ரசிகர்களின் நரம்புகள் பின்பகுதியில் தளர்ந்து விடுகிறது. அதை சமாளிக்க இயக்குநர் உச்சக்கட்ட காட்சியை வேறொரு பாதையில் விரைவு படுத்தி கைத்தட்டலை வாங்குகிறார். மனிதாபிமானமிக்க போலீஸ் அதிகாரி எப்படி நடந்து கொள்வார் என்பதை உடல் மொழியால் விதார்த் பேசுகிறார். அருமையான நடிப்பு. படத்தின் முன்பகுதி பிரகாசமாகவும் பின்பகுதி மங்கலாகவும் எரிகிறது இயக்குநர் சஜி சலீமிம் ‘லாந்தர்’ விளக்கு.