லிஸ்டின் ஸ்டீபன் தயாரிப்பில் ஜித்தின் லாய் இயக்கத்தில் டோவினோ தாமஸ், கீர்த்தி ஷெட்டி, ஐஸ்வரியா ராஜேஷ், ரோகிணி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும்படம் “ஏ.ஆர்.எம்”. மூன்று காலகட்டங்களில் நடக்கும் கதையாக படம் எடுக்கப்பட்டுள்ளது. முதல் காலகட்டத்தில் (சில நூறு ஆண்டுகளுக்கு முன்) ஒரு மலைக்கிராமத்தில் ஒரு விண் எரிகல் வந்து விழுகிறது. அந்த விண்கல் துண்டுகளோடு சில உலோகங்களையும் சேர்த்து ஒரு விளக்கை செய்கிறார் அந்நாட்டு மன்னன். அந்த விளக்கிற்கு அற்புத சக்திகள் உள்ளன. அதை தனது அரண்மனையிலுள்ள கோயிலில் பிரதிஷ்டை செய்கிறார். அதன் பிறகு விண்கல் விழுந்த கிராமத்தில் வாழ்ந்த ஒரு போர் வீரன் டோவினோ தாமஸ்க்கு அந்த விளக்கை பரிசளிக்கிறார். இரண்டாவது காலகட்டத்தில் (நூறு ஆண்டுகளுக்கு முன்) அதே கிராமத்தில் வாழ்ந்த மணியன் என்ற திருடன் அந்த விளக்கை திருடி விடுகிறான். இக்காலகட்டத்தில் வாழ்கின்ற திருடனான மணியனின் பேரன் அஜய்யன் அந்த விளக்கை கண்டுபிடித்து ஊரமக்களிடம் ஒப்படைத்து திருடனின் பேரன் என்ற அவப்பெயரை மாற்ற போராடுகிறான். அந்த நேரத்தில்தான் போர் வீரனுக்கு மன்னன் பரிசளித்த விளக்கு போலியானது என்றும் உண்மையான விளக்கை மன்னன் எங்கு மறைத்து வைத்திருக்கிறார்? அதை அஜய்யன் எப்படி கண்டுபிடிக்கிறான் என்பதுதான் கதை. இது ஒடுக்கப்பட்ட ஒரு சமுதாயத்தின் உண்மையான வரலாற்றை திரைக்கதையாக தந்துள்ளார் இயக்குநர் ஜித்தின் லாய். மூன்று காலகட்டத்தின் கதாநாயகர்களாக டோவினோ தாமஸ் அற்புதமாக நடித்துள்ளார். வில்லத்தனம் வழுவாக இல்லாமல் மேலோட்டத்தனமாக இருப்பதுதான் குறை. ஒளிப்பதிவும் இசையும் பார்க்கும்படியும் கேட்கும்படியும் அமைந்திருக்கிறது. உச்சக்கட்ட காட்சியில் ரகசிய முடிச்சிக்கள் அவிழ்க்கப்படுவதை ரசிக்க முடிகிறது.