ஹவாய் தீவில் அமைந்திருக்கும் சன்மார்க்க இறைவன் ஆலயத்தைச் சேர்ந்த சற்குரு போதிநாத வேலன் சுவாமி அவர்கள் இன்று மாலை கனடா ஸ்காபுறோ ஶ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தில் ‘ஆன்மீகச் சொற்பொழிவு’ ஒன்றை ஆற்றினார். அவரோடு இணைந்து ஹவாய் ஆலயத்திலிருந்து சற்குரு சண்முகநாத சுவாமி அவர்களும் வருகை தந்திருந்தார். முதலில் ஆலய பூஜைகளில் கலந்து கொண்ட சுவாமிகள் இருவரும் பின்னர் சுவாமி உள் வீதி வலம் வந்ததும் ஆலயத்தின் வாசலில் இருந்து மாலைகள் அணிவிக்கப்பெற்று வரவேற்கப்பெற்றும் உள் வீதிவழியாக வசந்த மண்டபத்திற்கு அழைத்து வரப்பெற்றனர். தொடர்ந்து ஶ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தின் பிரதம குரு சிவஶ்ரீ பஞ்சாட்சர விஜயகுமாரக்குருக்கள் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தி சற்குரு போதிநாத வேலன் சுவாமி அவர்களை உரையாற்றும் வண்ணம் அழைத்தார். சுமார் அரை மணிநேர தனது உரையில் சற்குரு போதிநாத வேலன் சுவாமி அவர்கள் கேள்வியும் பதில்களும் அடங்கிய உரை வடிவத்தை அங்கு வாசித்தார். அந்த உரை மிகவும் எளிமையாகவும் அடக்கமாகவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அவரது ஆங்கில உரையை தமிழாக்கம் செய்து அங்கு கூடியிருந்த அடியார்களுக்கு வழங்கப்பெற்றன.
உரையாற்றிய பின்னர் சற்குரு போதிநாத வேலன் சுவாமி அவர்கள் ஆலயத்தில் ‘ஆன்மீகச் சொற்பொழிவை செவிமடுத்த அனைத்து அடியார்களுக்கும் பிரசாதம் வழங்கியும் ஆசி வழங்கியும் அவர்களுக்கு உற்சாகம் ஊட்டினார்.