1974ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பெற்றதும் எதிர்வரும் 2024ம் ஆண்டில் தனது 50ம் ஆண்டில் கால்பதிப்பதும். உலகின் பல நாடுகளிலும் கிளைகளைக் கொண்டு இயங்குவுதுமான, உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் கிளை அமெரிக்காவில் உதயமாகின்றது என்னும் நற்செய்தியை இங்கு பதிவு செய்வதில் மகிழ்ச்சியடைகின்றோம்.
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தலைமைச் செயலகம் கனடாவில் இயங்கிவருகின்றது. இந்த நீண்ட கால வரலாற்றைக் கொண்ட இயக்கத்திற்கான உத்தியோகபூர்வ பதிவு கனடிய மத்திய அரசாங்கத்தினால் ஏற்கொள்ளப்பெற்றுள்ளது.
இயக்கத்தின் தலைமையக செயற்பாட்டுக்குழுவின் தலைவராக கனடாவாழ் வினாசித்தம்பி துரைராஜா அவர்களும் செயலாளர் நாயகமாக ஜேர்மனி வாழ் துரை கணேசலிங்கம் அவர்களும் வடஅமெரிக்க நாடுகளுக்கான சிரேஸ்ட உப தலைவராக கனடா வாழ் சிவா கணபதிப்பிள்ளை அவர்களும்
அகிலக் கிளைகளின் ஒருங்கிணைப்பாளராக ஜேர்மனி வாழ் இ. ராஜசூரியர் அவர்களும்
கொள்கை பரப்புச் செயலாளராக கனடா வாழ் நடா ராஜ்குமார் அவர்களும் நிர்வாகச் செயலாளராக ஜேர்மனி வாழ் கிரேஷன் ஜேம்ஸ்ரன் அவர்களும் அனைத்துலக ஊடகப் பொறுப்பாளராக கனடா வாழ் லோகன் லோகேந்திரலிங்கம் அவர்களும் தொடர்ச்சியாகப் பணியாற்றி வருகின்றார்கள்.
எதிர்வரும் 2024ம் ஆண்டு செப்ரம்பர் மாதத்தில் அமெரிக்காவில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் பொன்விழாக் கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெறவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. இதனை அடிப்டையாகக் கொண்டு அமெரிக்கா தேசத்தில் முதற் தடவையாக உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் கிளை ஒன்றை நிறுவ தற்போது ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த முயற்சியின் முதற் கட்டமாக அமெரிக்கா வாழ் சட்டத்தரணியும் கவிஞரும் மேடைப் பேச்சாளரும் முன்னாள் வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளருமான மார்க்கண்டு விக்னேஸ்வரன் அவர்களிடம் இந்த பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேற்படி விடயம் தொடர்பாக நேற்று முன்தினம் கனடாவிற்கு வருகை தந்திருந்த மார்க்கண்டு விக்னேஸ்வரன் அவர்களை உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் சார்பில் லோகன் லோகேந்திரலிங்கம் அவர்களும் நடா ராஜ்குமார் அவர்களும் ஸ்காபுறோ நகரில் சந்தித்து உரையாடினார்கள்.
மேற்படி சந்திப்பில் அமெரிக்காவில் கிளையை நிறுவுவது. 50வது ஆண்டான பொன் விழாவை வெற்றிகரமாக நடத்துவது, உலகெங்கும் உள்ள இயக்கத்தின் கிளைகளை சீர் செய்வது மற்றும் தற்போது உலகத் தமிழ் பண்பாட்டு கிளையின் செயற்பாடுகளுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் தமிழ்நாட்டில் செயற்பட்டு வரும் சில நபர்களின் செயல்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அறிக்கை வெளியிடுவது, தேவையானால் சட்ட நடவடிக்கை எடுப்பது போன்ற விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பெற்றது.
இங்கு காணப்படும் படத்தில் திருவாளர்கள் மார்க்கண்டு விக்னேஸ்வரன், லோகன் லோகேந்திரலிங்கம் மற்றும் நடா ராஜ்குமார் ஆகியோர் நிற்பதைக் காணலாம். .