பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்களது புதல்வர் நம்பி வித்தியானந்தனின் உருக்கமான உரை (ரொறன்ரோவிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம்)

1974ம் ஆண்டு ஜனவரி மாதம் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை கொழும்பில் நடத்த வேண்டும் என பல சக்திகளாலும் அழுத்தம் கொடுக்கப்பட்ட போதும் துணிச்சலுடன் அதனை யாழ்ப்பாணத்தில் நடத்திக்காட்டி அதற்கு தலைமை ◌தாங்கியும் வழிநடத்தியவர் மறைந்த பேராசிரியர் சு. வித்தியானந்தன் ஆவார் என்பதை நான் அருகில் இருந்து அவதானித்தவன் என்பதை மகிழ்;சசியுடன் இந்த நிகழ்வில் பகிர்ந்து கொள்கின்றேன்.

அதற்கு மேலாக ஒரு பேராசிரியராகவும் ஆய்வு வழிகாட்டியாகவும் பின்னர் துணைவேந்தராகவும் பல்கலைக்கழகங்களில் பணியாற்றிய அவர் இலங்கையெங்கும் தமிழ் மொழியின் முன்னேற்றத்திற்கு மூன்று மதங்களின் ஒன்றுமையும் கூட்டுப் பணியும் அவசியம் என்பதை உணர்ந்து சைவ கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மரபு சார்ந்த கலை வடிவங்களை இணைத்து கூத்து போன்ற மேடைநிகழ்வுகளை இலங்கையின் பல பாகங்களிலும் நடத்தியவரும் பேராசிரியர் வித்தியானந்தன் அவர்களே ஆவார்”

இவ்வாறு கடந்த திங்கட்கிழமை 15ம் திகதி ரொறன்ரொ பல்கலைக் கழக ஸ்காபுறோ வளாகத்தில் நடைபெற்ற 1974ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் நினைவுகளையும் மறைந்த பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்களின் 100 வது ஜனன தினத்தை முன்னிட்டும் அவற்றின் நினைவுகளைப் பகிரும் வகையில் தமிழ் மொழி சார்ந்த செயற்பாட்டாளரும் கணக்காளருமான சிவன் இளங்கோ அவர்கள் தனது குழுவினருடன் இணைந்து நடத்திய நிகழ்வில் முன்னாள் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைப் போராசிரியர் நா. சுப்பிரமணியன் அவர்கள் தனது நினைவுரையில் தெரிவித்தார்.

மேற்படி நினைவுப் பகிர்வு நிகழ்வில் ஆரம்ப உரையாற்றிய சிவன் இளங்கோ அவர்கள் அன்றைய நிகழ்வை கனடாவில் நடத்த வேண்டிய தேவையும் அவசியமும் எவ்வாறு ஏற்பட்டது என்பதை விபரித்து தனது உரையை ஆரம்பித்தார்.

பேராசிரியர் சு.வித்தியானந்தன் அவர்களின் மாணவரும் பேராசிரியருமான கலாநிதி திருநாவுக்கரசு கமலநாதன் அவர்களால் தொகுத்து அச்சிடப்பெற்ற ‘பல்கலைத் தமிழ்ப் பெருநிதியம் ‘ என்னும் பேராசிரியர் -கலாநிதி சு. வித்தியானந்தன்’ என்னும் அவரது நூற்றாண்டு மலரை கனடாவில் வெளியிடும் அதே நாளில் யாழ்ப்பாணத்தில் அசம்பாவிதங்களோடு இடையில் நிறுத்தப்பெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாடு பற்றிய நினைவுகளையும் பகிர்ந்து கொள்ளும் வகையில் இந்த நிகழ்வு நடத்தப்படுவதாக சிவன் இளங்கோ அவர்கள் தனது உரையில் தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் பேச்சாளப் பெருமக்களை மேடைக்கு அழைத்து அவர்களின் உரைகளை சபையோர் செவிமடுக்கும் வகையில் வழி செய்தார்.

தொடர்ந்து ரொறன்ரொ பல்கலைக்கழக ஸ்காபுறோ வளாகத்தின் பேராசிரியரும் தமிழ் மொழி மீதான ஆர்வம் கொண்டவருமான திருமதி பிரண்டா டெக் தனது அனுபவங்களை சிறப்போடு பகிர்ந்து கொண்டார். அவர் தனது உரையில் 1974ம் ஆண்டு ஜனவரி மாதம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் கட்டுரை ஒன்றை வாசித்தது தொடர்பாகவும் பின்னர் யாழ்ப்பாணத்தில் பல நாட்கள் தங்கியிருந்து அந்த தமிழர் தீவின் சிறப்புக்களையும் தமிழர்களின் பண்பாட்டையும் நன்கு அறிந்து தெளிந்து தாயகம் திரும்பியதாகவும் உற்சாகத்துடன் தெரிவித்தார்.

தொடர்ந்து பேராசிரியர்கள் இளையதம்பி பாலசுந்தரம், சந்திரகாந்தன், சேரன் உருத்திரமூர்த்தி ஆகியோரும் தமது உரைகளை சிறப்புக்கள் நிறைந்தவையாக வழங்கினார்கள்.

உரைகளுக்கு இடையில்இளம் இசைக் கலைஞரும் ரொறன்ரொ பல்கலைக் கழக மாணவியுமான செல்வி யாதவி பிரசன்னா அவர்கள் தனது புல்லாங்குழல் இசையில் இனிதான தமிழிசைப் பாடல்களை சபையோர்க்காக சமர்ப்பித்தார்.

பேராசிரியர் சேரன் உருத்திரமூர்த்தி அவர்கள்மேற்படி 1974ம் ஆண்டு மாநாட்டின் ஏற்பாடுகள் மற்றும் குழப்பங்களை ஏற்படுத்தி 11 தமிழர்களின் இறப்புக்களுக்கு காரணமான சம்பங்களை கண்களுக்கு முன்பாகக் கொண்டு வந்தார். அத்துடன் பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்களின் தனித்துவமான சிறப்புக்களையும் எடுத்துக் கூறி அவர் கற்பித்தலோடும் மாத்திரம் நின்று விடாமல் நாட்டார் பாடல்கள் நாட்டுக் கூத்து போன்ற கலை வடிவங்கள் மக்களைச் சென்றடைய எவ்வாறு உழைத்தார் என்பதை விபரமாக எடுத்துரைத்தார்.

தொடர்ந்து பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்களது புதல்வரும் கணக்காளருமான நம்பி வித்தியானந்தன் அவர்கள் தனது தந்தையார் பற்றியும் அவர் குடும்பத்தின் சிறப்புக்கள் பற்றியும் சுவையாக ஆங்கிலத்தில் உரையாற்றினார்.

அவர் தனது உரையில் “எனது தந்தையார் சு.வித்தியானந்தன் அவர்கள் மாணவர்களுக்கு ஒரு இராணுவத் தலைவனாகவும் இருந்து தன் பண்யைச் செய்தார். அவர்களுக்கு வழிகாட்சியாகவும் இருந்தார்.

தனது மாணவர்கள் ஒவ்வொருவரின் எதிர்கால வாழ்க்கை தொடர்பான அக்கறையும் கொண்டவராக விளங்கினார். அத்துடன் தனது மாணவர்களுக்கு கல்வி அறிவூட்டியதோடு மட்டும் நின்று விடாமல் அவர்களுக்கான தொழில் வாய்ப்புக்களையும் பெற்றுக் கொடுக்கவும் செய்தார்”
புதல்வர் நம்பி வித்தியானந்தனின் உருக்கமான உரைஅமைந்திருந்தது.

தொடர்ந்து கலாநிதி திருநாவுக்கரசு கமலநாதன் அவர்களால் தொகுத்து அச்சிடப்பெற்ற ‘பல்கலைத் தமிழ்ப் பெருநிதியம் ‘ என்னும் பேராசிரியர் -கலாநிதி சு. வித்தியானந்தன்’ என்னும் அவரது நூற்றாண்டு மலரின் பிரதிகள் குறிப்பிட்ட சிலருக்கு வழங்கப்பெற்றன.

அவற்றின் பிரதிகளை பெற்றுக்கொண்டவர்கள் பேராசிரியர் மௌனகுரு அவர்களின் புதல்வரும் தற்போது ஸ்காபுறோ பல்கலைக் கழக வளாகத்தில் உருவாக்கப்பெற்றுள்ள ‘தமிழ் இருக்கை’ தலைவராக பொறுப்பேற்றுள்ள பேராசிரியர் மௌ. சித்தார்த்தன் அவர்களிடமிருந்து பெற்று மகிழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது..

மேற்படி நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் இறுதிவரை இருந்து அனைத்து உரைகளையும் கேட்டு மகிழ்ந்தும் வியந்தும் சென்றனர் என்றால் அது மிகையாகாது.

“நமது தாய் மண்ணாம் யாழ்ப்பாணத்தில் 1974ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் 11 பேர் இலங்கை காவல்துறையினரின் துப்பாக்கிச்சூடு உட்பட்ட பல்வேறு அராஜகம் மற்றும் அரசின் அடக்கு முறைகள் ஆகியவை ஏற்படுத்திய குழப்ப நிலையினால் மரணம் அடைந்தனர் என்பதும் இலங்கை அரசின் காவல்துறைத் துப்பாக்கிச் சூட்டினால் மின்கம்பிகள் அறுந்து மக்கள் திரண்டிருந்த இடத்தில் விழுந்தமை, ஆயிரக்கணக்கில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எனத் திரண்டிருந்த மக்கள் மத்தியில் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியமை, இரவு நேரத்தில் ஏற்பட்ட இக்குழப்பத்தினால் நிகழ்ந்த வாகன விபத்துகள், இந்தக் குழப்பங்களினால் ஏற்பட்ட அதிர்ச்சியில் ஏற்பட்ட இதய வலி என்பன இந்த மரணங்களுக்குக் காரணமாயின என மனதை வாட்டும் நினைவுகளை இந்த நிகழ்வு எமக்கு வலிகளுடன் மீண்டும் வழங்கியது என்றும் நாம் கூறலாம்.