கனடாவில் இயங்கிவரும் தமிழ் அமைப்புக்கள் தம்மை சுய விமர்சனங்களுக்கு உட்படுத்த வேண்டும்

மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்டவை அல்லது மக்கள் நலன் கருதி தொடங்கப்பட்டவை அல்லது மக்களுக்கு சேவையாற்றவென நிறுவப்பட்டவை என்ற பிரகடனங்களோடு உலகின் பல நாடுகளிலும் இயங்கிவந்த அல்லது தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் பொது அமைப்புக்களுக்கு சில ஒழுங்கு முறைகள் உள்ளன. அவற்றில், மேற்படி அமைப்புக்கள் அனைத்தும் தேவையேற்படும் போது. தம்மை சுயவிமர்சனங்களுக்கு உள்ளாக்கிக் கொள்ள வேண்டும். .இந்த ஒழுங்கை கடைப்பிடிக்காத அல்லது மேற்கொள்ள மறுத்த அமைப்புக்கள் கால ஓட்டத்தில் கரைந்து போய்விட்டதை வரலாறுகளைப் படிப்பவர்கள் நன்கு புரிந்து கொண்டிருப்பார்கள்.

உலகில் புரட்சிகரப் போராட்டங்கள் நடைபெற்று அதன் மூலம் கொடுங்கோலாட்சிகளை வீழ்த்தி மக்கள் ஆட்சிகளை நிறுவிய நாடுகளான சீனா. சோவியத் யூனியன். கியூபா போன்ற நாடுகளில் புரட்சியில் ஈடுபட்ட போராட்ட இயக்கங்கள் தேவைகள் ஏற்பட்ட போது தங்களை சுயவிமர்சனங்களுக்கு உட்படுத்தின. இதனால் பல நன்மைகள் ஏற்பட்டன. இயக்கங்களுக்குள் இருந்த உள்ளக முரண்பாடுகள் தீர்க்கப்பட்டு தீர்வுகள் காணப்பெற்றன.

இவ்வாறான அனுபவங்கள் எமது தாயகத்தில் வடக்கிலும் கிழக்கிலும் ஆரம்பிக்கப்பெற்ற விடுதலை இயக்கங்கள் மத்தியிலும் புறையோடிக்கிடந்தன என்பதை அவற்றின் செயற்பாடுகள் தொடர்பாக கவனம் செலுத்தியவர்களுக்கு நன்கு தெரிந்திருந்தது. எமது இயக்கங்கள் தமது சக உறுப்பினர்களுக்கு இடையே ஏற்படும் உ ள்ளக முரண்பாடுகளை தீர்க்க முடியாமல் முரண்பட்டு இறுதியில் தமக்குள்ளேயே துப்பாக்கிகளால் சுட்டுக்கொண்டு மரணங்களைத் தழுவிய கவலைக்குரிய சம்பங்கள் ஏராளம்.

இதைவிட பிற இயக்கங்களோடு ஏற்பட்ட புறக்காரணிகள் தொடர்பான முரண்பாடுகளை தீர்க்கும் முகமாக பேச்சுவார்த்தைகள் நடத்துவது அல்லது சந்திப்புக்களை ஏற்படுத்தி அவற்றில் தங்களை சுய விமர்சங்கள் செய்து கொள்வது போன்ற முயற்சிகள் பல தோல்வியடைந்தன. இதன் காரணமாகவே இயக்க மோதல்கள் தோன்றியும் பிற இயக்கங்கள் அழிக்கப்பட்டு எமது விடுதலைப் போராட்டம் பின்னடைவைச் சந்தித்த அனுபவங்களை நாம் பல பதிவுகள் மூலமாக கற்றுக்கொண்டுள்ளோம்.

இதைப் போலவே, கடந்த பல வருடங்களாக கனடாவில் இயங்கிவரும் தமிழ் மக்கள் சார்ந்த பொது அமைப்புக்கள் தொடர்பான பல கேள்விகள் எமது மக்கள் மத்தியில் எழுந்து நிற்கின்றன. அதுவும் மக்கள் தொடர்பான விடயங்களைக் கடந்து அரசியல் சார்ந்து செயற்படுகையில் எதிர்ப்புறத்திலிருந்தோ அன்றி உள்ளக முரண்பாடுகளாக தோற்றம் பெறுவதிலிருந்தோ, முரண்பாடுகள் விரிசல்களைச் சந்தித்து, பின்னர் பல பாதிப்புக்களை எமது கனடிய தமிழர் சமூகம் சா ர்ந்து ஏற்படுத்தியிருந்தன.

கனடாவில் நூற்றுக்கணக்கான மக்கள் அமைப்புக்கள் செயற்படுகின்றன. அவற்றில் பல ஊர் அமைப்புக்கள், நமது தாயகம் சார்ந்து செயற்படும் பாடசாலைகளின் பழைய மாணவர்கள் அல்லது மாணவிகள் சங்கங்கள் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகும். இவ்வாறான அமைப்புக்களில் அரசியல் சார்ந்த செயற்பாடுகள் இல்லாது இருப்பதனால் உள்ளக முரண்பாடுகள் தோன்றும் சந்தர்ப்பங்கள், குறைவாகவே காணப்படுகின்றன.

ஆனால் கனடாவில் அரசியல் சார்ந்த செயற்பாடுகளை தம்மகத்தே கொண்டு இயங்கிவரும் அமைப்புக்கள் சார்ந்து உள்ளக முரண்பாடுகளும் பற முரண்பாடுகளும் தோன்றி முழுமையாக கனடிய தமிழர்கள் மத்தியில் பிளவுகளையோ அன்றி முரண்பாடுகளையோ தோற்றுவிக்கின்றன. குறிப்பாக கனடாவில் இயங்கிவரும் சில முக்கிய அமைப்புக்கள் நிச்சயம் தம்மை சுயவிமர்சனங்களுக்கு உட்படுத்த வேண்டிய நிலையேற்பட்டும் அதைச் செய்யத் தவறிவிட்டன.

குறிப்பாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான அங்கத்தவர்களை தெரிவு செய்யும் இரகசிய வாக்கெடுப்புத் தேர்தல் அ கடந்த வருடம் நடத்தப்பெற்ற போதும் அந்த தேர்தலுக்காக வேட்பு மனுக்கள் கோரப்படட போதும் பல சீர்கேடுகள் இடம்பெற்றன. இதனால் மேற்படி நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தலானது நேர்மையான முறையில் நடத்தப்பட வில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. எனினும் இந்த குற்றச்சாட்டுகளை ஏற்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முக்கிய உறுப்பினர்கள் தங்களை சுயவிமர்சனங்களுக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை உள்ளக அங்கத்தவர்களிடமிருந்தும் வெளியிலிருந்தும் விடுக்கப்பட்டன. ஆனால் அந்த கோரிக்கைகள் சரியான முறையிலும் நேர்மையாகவும் செவிமடுக்கப்படாத காரணத்தால் மேற்படி நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளும் இயங்கும் முறைகளிலும் பாரிய சரிவுகள் ஏற்பட்டுள்ளதை நாம் நேரடியாகவே காணக்கூடியதாக உள்ளது.

இதைப் போன்றே ஏனைய சில அமைப்புக்களான கனடிய தமிழர் பேரவை மற்றும் கனடிய தமிழர் தேசிய அவை போன்ற மக்கள் சார்ந்த அமைப்புக்களும் இவ்வாறான சுயவிமர்சனம் செய்யும் நெறியை தங்களுக்குள்ளே அல்லது புறத்தே கடைப்பிடிக்க வேண்டியது தற்காலத்தின் மிக அவசியமான செயற்பாடாக விளங்குவதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். இதன் மூலம் எமது தமிழர் சமூக மட்டத்தில் உள்ளக மோதல்கள் அன்றி பகிரங்க குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் போக்குகள் நீங்கி ஒரு சீரான நிலை தோன்றலாம் என்று ‘தேசம்’ இதழின் ஆசிரிய பீடத்தின் உறுப்பினர்களாகிய நாம் எமது இம் மாத இதழில் பதிவு செய்கின்றோம்.