கடந்த 7ம் திகதி திங்கட்கிழமையன்று கனடா மிசிசாகா நகரில் இடம் பெற்ற ‘BEHIND ME’ MEDIA GROUP நிறுவனத்தின் கலையகத்தின் திறப்பு விழா சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிறுவனத்தின் தலைவரும் KT GROUP OF COMPANIES வர்த்தக நிறுவனத்தின் தலைவருமான கனேந்திரன் செல்வராஜா அவர்களும் அவரது பாரியார் திவ்யா கனேந்திரன் அவர்களும் தமது பணியாளர்கள் மற்றும் குழுவினருடன் இணைந்து மேற்படி கலையகத்தை அழகிய முறையிலும் வசதிகள் கொண்டதுமான வகையில் அமைத்திருந்தார்கள்.
அன்றைய நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கம் அவர்களும் முன்னாள் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் கவிஞரும். தற்போது கனடாவிற்கு தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்ட வருகை தந்திருப்பவருமான அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களும் அழைக்கப்பட்டிருந்தனர்.
அனைவரும் வரவேற்கப் பின்னர் ‘BEHIND ME’ MEDIA GROUP நிறுவனத்தின் கலையகத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கும் வைபவம் இடம்பெற்றது. கலையகத்தை நாடா வெட்டி திறந்து வைத்தவர்கள் திருமதி கனேந்திரன் .திவ்யா, திரு. லோகேந்திரலிங்கம் மற்றும் திரு அம்பலவாணர் சிவபாலசுந்தரம் ஆகியோர். தொடர்ந்து நடைபெற்ற வைபவத்தில் நிறுவனத்தின் தலைவர் கனேந்திரன் செல்வராஜா அவர்கள் தலைமை உரையாற்றினார். அவர் தனது உரையில் “வெவ்வேறான சில வர்த்தக முயற்சிகளில் KT GROUP OF COMPANIES என்னும் பெயரோடு வர்த்தகத்துறையில் கடந்த 12 வருடங்களுக்கு மேலாக ஈடுபட்டு வரும் நாம் தற்போது ஊடகத்துறையின் அவசியம் பற்றி நன்கு அறிந்தும் தெரிந்தவர்களாக அனுபவ மிக்க பணியாளர்களோடு ‘BEHIND ME’ MEDIA GROUP நிறுவனத்தை ஆரம்பித்துள்ளோம். எமது நோக்கம் எம்மோடு இணைந்து கொள்பவர்கள் அனைவரும் படிப்படியாக இந்த சமூகத்தின் தலைவர்களாக விளங்கவேண்டும் என்பதே. மேலும் எமது ‘BEHIND ME’ MEDIA GROUP இற்கு இணையாக BEHIND ME’ சேவை மற்றும் உதவிகள் வழங்கும் நிறுவனத்தையும் நிறுவியுள்ளோம். இந்த நிறுவனமானது உலகில் எங்கெங்கு வசதிகள் குறைந்தவர்களுக்கு உதவிகள் தேவைப்படுகின்றதோ அங்கெல்லாம் எமது நிறுவனங்களின் உதவிகள் சென்றடைய வேண்டும் என்பதே ஆகும். எமது BEHIND ME’ ஊடக நிறுவனத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் அனைத்தும் எமது சேவை வழங்கும் நிறுவனத்தின் ஊடாக உதவிகள் மற்றும் சேவைகள் தேவைப்படும் இடங்களுக்கு அல்லது மக்களுக்கு அனுப்பி வைக்கப்படும். மேலும் எமக்கான பணிகளுக்குரிய முக்கியத்துவத்தை நாமே வழங்கவேண்டும். எமக்கு அடுத்ததாகவே நாம் மற்றவர்களை எதிர்பார்க்கலாம். எனவே எம்மோடு ஒத்துழைக்கின்ற அனைவரும் இந்த கோட்பாட்டைக் கடைப்பிடித்தால் நாம் அனைவரும் ஒன்றாகவே முன்னேறலாம். மேலும். இன்றைய சிறப்பு வைபவத்தில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டுள்ள கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கம் அவர்களும் முன்னாள் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களும் எம்மோடு இணைந்திருப்பது எமக்கு உற்சாகத்தைத் தருகின்றது. கனடாவில் முப்பது வருடங்களுக்கு மேலான எழுத்துத்துறை மற்றும் ஊடகத்துறை அனுப.வத்தைக் கொண்ட திரு லோகேந்திரலிங்கம் எமது இயக்குனர் சபையில் இணைந்திருப்பது எமக்கு புத்துணர்வைத் தருகின்றது’ என்று தெரிவித்தார். தொடர்ந்;து அங்கு பலரும் உரையாற்றினார்கள். எல்லாமாக நான்கு மொழிகளில் இயங்கவுள்ள BEHIND ME’ MEDIA GROUP நிறுவனத்தில் ஆங்கிலம். தமிழ். பஞ்சாபி. ஹிந்தி. ஆகிய மொழிகளில் பணியாற்றக் கூடியவர்கள் இணைந்துள்ளார்கள். ஏற்கெனவே ஒளிபரப்பாகி வரும் BEHIND ME’ MEDIA GROUP யுரியுப் செனல்களில் செய்திகள் மற்றும் சினிமா விமர்சனங்கள் சமூக நிகழ்வுகள் ஆகியன ஒளிபரப்பாகி பல் மொழி சார்ந்த மக்களின் அபிமானத்தையும் பெற்றுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அங்கு உரையாற்றிய அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்கள் தனது உரையின் போது” உலகில் மிகவும் பலம் வாய்ந்ததும் முக்கியமானதுமான ஊடகத் துறையில் கால் பதித்துள்ள BEHIND ME’ MEDIA GROUP நிறுவனத்தை நான் வாழ்த்துவதோடு, பாராட்டியும் மகிழ்கின்றேன்.. எனது கனடிய விஜயத்தின் போது இந்த நிகழ்வும் என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு இடத்தைப் பெ ற்றுக்கொண்டது” என்றார். இங்கே காணப்படும் படங்கள் திறப்பு விழாவின் போது எடுக்கப்பட்டவையாகும்.