-ஷாஜஹான்-
லைகா சுபாஸ்கரன் தயாரிப்பில் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா டகுபதி, கிஷோர், மஞ்சுவாரியார், ரித்திகா சிங், துஷாரா விஜயன், அபிராமி, ரோகிணி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “வேட்டையன்”. கல்வியும் சட்டமும் அனைத்து மக்களுக்கும் சமமாக கிடைக்க வேண்டும் என்பதே கதையின் கருவாக வைத்து படத்தை வணிக ரீதியில் இயக்கியிரிக்கிறார் இயக்கர் ஞானவேல். குற்றவாளிகளை சுட்டுக் கொல்லும் காவல்த்துறை அதிகாரி ரஜினிகாந்த். மனித உரிமை ஆணையத்தின் நீதிபதி அமிதாப்பச்சன். திருடனாக இருந்து ரஜினியின் நம்பிக்கைக்கு உரியவராக மாறியவர் ஃபஹத் ஃபாசில். பாடசாலை ஆசிரியை துஷாரா விஜயன் ஒருவனால் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்படுகிறாள். அந்த கொலைகாரனை ரஜினிகாந்த் சுட்டுக் கொல்கிறார். ஆனால் அவன் நிரபராதி என்பது அமிதாப்பச்சனால் பிறகு ரஜினிக்கு தெரியவருகிறது. உண்மையான குற்றவாளியை கண்டுபிடிபதுதான் படத்தின் உச்சக்கட்ட காட்சிவரை நீள்கிறது. ரஜினிகாந்தின் வழக்கமான நடையும் சுறுசுறுப்பும் சற்றும் குறையாமல் நடித்து அவரின் ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளார். திரைப்படம் தொய்வில்லாமல் செல்வதற்கு பெரும் உதவியாக இருப்பது ஃபஹத் ஃபாசில்தான். அவரின் தேதிக்காக ஒருமாதம் காத்திருந்து நடிக்க வைத்தது வீண்போகசில்லை. அவரின் நடிப்பு பார்வையாளர்களுக்கு ஊக்க மாத்திரையாக இருந்தது. தமிழில் வில்லனாக பார்த்த ஃபஹத் ஃபாசிலை இப்படத்தில் சிறந்த நகைச்சுவையாளனாக பார்க்கலாம். அமிதாப்பச்சனின் வயதின் முதிர்ச்சி நடிப்பில் இழையொடிகிறது. இளமையின் துடிப்பை அழகாக காட்டியிருக்கிறார் ரித்திகா சிங். அவர் நிஜமான குத்துச்சண்டை வீராங்கணை. அதை பயன்படுத்த இயக்குநர் தவறிவிட்டார். ஒருவேளை ரித்திகா சிங்கின் சண்டைக்காட்சி ரஜினியின் சண்டைக்காட்சியை வலுவிழக்க செய்து விடுமோ என்ற அச்சம் இயக்குநருக்கு ஏற்பட்டிருக்கலாம். வில்லனுக்கேற்ற உயரம் கொண்ட ராணா டகுபதி, வில்லத்தனதை தொலைத்தவர்போல் விழிபிதுங்கி நிற்கிறார். துஷாரா விஜயன் தமிழ்த்திரைவானில் பறக்க இறக்கை கட்டி நடித்துள்ளார். மஞ்சுவாரியார், அபிராமி, ரோகிணி ஆகியோர் கதாபாத்திரத்தை உணர்ந்து தங்களது நடிப்பை தந்துள்ளார்கள். ஒளி இழந்த முகமாக கதாபாத்திரம் அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.