-ஷாஜஹான்-
லைகா நிறுவனம் சுபாஸ்கரன் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார், திரிஷா, அர்ஜூன், ரெஜினா ஹாஸ்ன்றா, ஆரவ், ரவிராகவேந்திரா, ரம்யா சுப்பிரமணியன், நிகில் சஜித், ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “விடாமுயற்சி”. அஜர்பைஜான் நாட்டில் 12 வருடங்களாக அஜித்குமாருடன் மனைவியாக வாழ்ந்த திரிஷா, வேறு ஒரு நபருடன் காதல் வசப்படுகிறார். அதனால் அஜித்குமாருக்கு விவாகரத்து தாக்கல் செய்கிறார். அதுவரை தன் அம்மாவின் வீட்டுக்கு செல்ல விரும்புகிறார் திரிஷா. “நானே உன்னை உன் அம்மாவின் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறேன். இது என் கடைசி ஆசை” என்று அஜித்குமார் சொல்கிறார். திரிஷாவும் சரியென அஜித்குமாருடன் காரில் தன் அம்மாவின் வீட்டுக்கு பயணமாகிறார். வழியில் கார் நின்றுவிடுகிறது. அப்போது அங்கு சரக்கு வேனில் வந்த அர்ஜூனும் அவரது மனைவி ரெஜினாவும் அஜித்குமாரிடம், “பெண்களுக்கு இந்த இடம் பாதுகாப்பானது இல்லை. உங்கள் மனைவியை பக்கத்திலிருக்கும் விடுதியில் விட்டுச் செல்கிறோம். நீங்கள் காரை சரி செய்து அங்குவந்து உங்கள் மனைவியை கூட்டிச் செல்லுங்கள்” என்று சொல்கிறார்கள். சரியென்று திரிஷாவை அர்ஜூனுடன் அனுப்பி வைக்கிறார் அஜித்குமார். பிறகு விடுதிக்கு வந்து அஜித்குமார் தனது மனைவி திரிஷாவை தேடுகிறார். அங்கு திரிஷா இல்லை. திரிஷா என்ன ஆனார்? கடத்தப்பட்டார் என்றால் யார் கடத்தியது? எதற்காக? திரிஷாவை அஜித்குமார் மீட்டாரா? இல்லையா? திரிஷா கொடுத்த விவாகரத்து தாக்கல் என்னானது? என்பதுதான் கதை. இப்படம் 1997ல் வெளிவந்த “பிரேக் டவுண்” என்ற ஆங்கிலப்படத்தை தழுவி எடுக்கப்பட்டது. இரண்டு வருட இடைபெளிக்குப் பிறகு அஜித்குமார் நடித்திருக்கும் இப்படத்தை கண்டுகளிக்க அவரது ரசிகர்கள் மிகுந்த ஆரவத்துடன் காத்திருந்தனர். அஜித்குமாரை பொறுத்தவரை அவரது கடின உழைப்பு படத்தில் நன்கு தெரிகிறது. மூன்று விதமான தோற்றங்களில் நடித்து அவரது ரசிகர்களை உற்சாக்ப்படுத்தியுள்ளார். ஆனால் இது அஜித்குமாரின் தனித்துவமான படம் இல்லை. இயக்குநர் மகிழ் திருமேனி ‘தல’ யாட்டி மொம்பயை தட்டி தட்டிவிட்டு விளையாடியிருக்கிறார். உச்சக்கட்ட காட்சி வரும்வரை அஜித்குமார், ஆரவ்விடம் அடிவாங்கும் காட்சிகளில் அவரின் ரசிகர்கள் மயான அமைதியை கடைபிடித்திருந்தார்கள். உச்சக் கட்ட காட்சியில் அஜித்குமார் வில்லனை திருப்பி அடிக்கும்போதுதான் ரசிகர்களின் விசில் சத்தம் காதை பிளக்கிறது. உச்சக்கட்ட காட்சி மட்டுமே அஜித் படமாக இருந்தது. வில்லத்தனத்தில் அர்ஜூனும் ஆரவ்வும் போட்டிப்போட்டு நடித்திருக்கிறார்கள். வழக்கமான நடிப்பிலிருந்து எந்த வேறுபாடும் திரிஷாவின் நடிப்பில் காணமுடியவில்லை. காட்டில் கர்ஜனை செய்யும் சிங்கத்துக்கு அரிசி சோறு சாப்பாடு. தாய்லாந்து நாட்டில் நட்சத்திர விடுதி வவேற்பு அறைக்குப் பக்கத்தில் சிங்கத்தை கட்டிவைத்திருப்பார்கள். அது கர்ஜனை செய்யாமல் அமைதியாக இருக்கும். கட்டணம் செலுத்தி அந்த சிங்கத்தின் முதுகில் கைவைத்து அல்லது தலைவைத்து நிழற்படம் எடுத்துக் கொள்வார்கள். அந்த உணர்வோடுதான் திரையரங்கைவிட்டு வெளியே வரவேண்டும். மதிப்பீடு 5க்கு 3.
“விடாமுயற்சி” திரைப்பட விமர்சனம்
