கொரோனா பரவல் அதிகரித்தால் புதிய கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு உள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நாட்டில் கடந்த 4 மாதங்களாக கொரோனா பாதிப்பு முற்றிலும் கட்டுக்குள் இருந்த நிலையில், தற்போது பாதிப்பு விகிதம் மெல்லமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்திய அளவில் நாள் ஒன்றுக்கு கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 12,000-த்தைத் தாண்டியுள்ளது. அதேபோல, தமிழ்நாட்டிலும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நாள் ஒன்றுக்கு 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அதன்படி, ‘இன்று ஒரே நாளில் 15,742 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 589 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த பாதிப்பு 34,59,586 பேராக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 208 பேர் வீடு திரும்பியுள்ளனர். தற்போது கொரோனா பாதித்து 2,694 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழப்பு ஏதும் இல்லை. இன்று மட்டும் சென்னையில் 286 பேருக்கும், செங்கல்பட்டில் 119 பேருக்கும், கோயம்புத்தூரில் 39 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கொரோனா பரவல் அதிகரித்தால் புதிய கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு உள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை, செங்கல்பட்டு மாவட்டம் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் கொரோனா பெருந்தொற்று தடுப்பு பணிகள தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டனர். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்திப்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது, தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. சென்னை அடுத்தப்படியாக செங்கல்பட்டில் தான் அதிக பாதிப்பு இருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளொன்றுக்கு 500 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அதனை ஆயிரமாக அதிகரிக்க சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் அறிவுறுத்தியுள்ளோம். செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா சிகிச்சைக்காக 400 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் விகிதம் 10 சதவீதத்தை தாண்டும் போது புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்பது மத்திய அரசின் விதிமுறை, ஆனால் தமிழகத்தில் கொரோனா பரவல் 2, 3 சதவீதத்திலேயே பாதிப்பு விகிதம் உள்ளது. எனவே இவை அதிகரிக்கும் பட்சத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு உள்ளது என்று அவர் கூறினார்.