தமிழகத்தில் கல்வி கற்காத 15 வயதிற்கு மேற்பட்டவர்களை கண்டறிந்து அவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு பயிற்றுவிக்கும் நோக்கில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் இக்கல்வியாண்டில் 24,250 நபர்கள் கண்டறியப்பட்டு அவர்களது குடியிருப்பு பகுதிகளிலேயே எழுத்தறிவு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு தன்னார்வலர்கள் மூலம் எண்ணறிவு, எழுத்தறிவு பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்காக, மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 2,041 எழுத்தறிவு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், இம்மையங்களில் பயிற்சி பெறுபவர்களுக்கு நோட்டுப் புத்தகம், பாடப் புத்தகங்கள் போன்ற கல்வி உபகரணங்கள் வழங்கப்படுகின்றன” என வணிகவரி மற்றும் பதிவுதுறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், கடந்த ஆண்டில் இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய கொடிக் குளம், ஆனையூர், எஸ்.மலம்பட்டி, திருமங்கலம் பி.கே.என். ஆரம்பப் பள்ளி, எம்.சுப்பலாபுரம், கொங்கப்பட்டி, அழகாபுரி ஆகிய 7 மையங்களுக்கு அமைச்சர் பி.மூர்த்தி அவர்களால் விருது வழங்கப்பட்டது. மேலும், மேற்கு வட்டாரத்தில் சிறப்பாக செயல்படுத்திய வட்டாரக் கல்வி அலுவலர் ஜான் கென்னடி அலெக்ஸாண்டர் அவர்களுக்கும் கேடயம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியின் போது, மாவட்ட ஆட்சித்தலைவர் .மா.சௌ.சங்கீதா, இ.ஆ.ப., , கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) டாக்டர்.மோனிகா ராணா, இ.ஆ.ப., , சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெங்கடேசன், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கார்த்திகா, உதவி திட்ட அலுவலர் சரவண முருகன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.