தொடர்ந்து பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு தெரிவிக்கையில்: “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் வழங்கி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் தென் தமிழகத்தில் மிக முக்கிய நகராக விளங்கும் மதுரையில் மிக பிரம்மாண்டமான நூலகம் ஒன்று அமைத்திட வேண்டும் என்று உத்தரவிட்டு புது நத்தம் சாலையில் உலகத்தரத்தில் கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. நூலகம் தொடங்கப்பட்டு கடந்த ஓராண்டில் 11 இலட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகை தந்து பயன்பெற்றுள்ளனர். இந்நிலையில் பொதுமக்களுக்கான வசதிகளை மேலும் மேம்படுத்தும் நோக்கில் கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகத்தில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. ரூ.10 கோடி மதிப்பீட்டில் திறந்த வெளி அரங்கு அமைக்க திட்டமிடப்பட்டு, விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டு விரைவில் இப்பணிகள் தொடங்கப்படும். அதேபோல வாசகர்கள் தாங்கள் கொண்டுவரும் சொந்த புத்தகங்களை வாசிப்பதற்கு ஏதுவாக ரூ.2.40 கோடி மதிப்பீட்டில் தனி அரங்கு அமைக்கப்பட உள்ளது. மேலும் நூலக கட்டடத்தில் பொதுப்பணித் துறையின் மூலம் ரூபாய் 40 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்யப்பட்டது” என பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்தார்.
இந்த நிகழ்வின்போது பொதுப்பணித்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் மங்கத்ராம் சர்மா,இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ. சங்கீதா, இ.ஆ,ப., பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அய்யாச்சாமி உட்பட பொதுப்பணித்துறை அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.