மனுஜோதி ஆசிரமத்தின் “அம்ருத்தா மஞ்சரி” – தெலுங்கு நூல் மலேசியாவில் வெளியிடப்பட்டது

கோலாலம்பூர்,மே.14-கோலாலம்பூர் விஸ்மா துன் சம்பந்தன் அரங்கத்தில்  “அம்ருத்தா மஞ்சரி – ஞான மகரந்தம்” என்ற தெலுங்கு நூல் வெளியீட்டு விழா மற்றும் ஸ்ரீ லஹரி கிருஷ்னுனி கீதாம்ருதம் என்ற தெலுங்கு பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் அனைத்து வேத ஆராய்ச்சியின் போதனைகளை ஆராய்ந்து உணர்ந்த தேவாசீர் லாறி அவர்கள், மனித குலத்திற்கு ஜோதியாக திகழும் மனுஜோதி ஆசிரமத்தில் இருந்து ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் உபதேசத்தை உலகம் முழுவதும் பரப்ப வேண்டும் என தீர்மானித்து, “அம்ருத்தா மஞ்சரி – ஞான மகரந்தம்” என்ற தெலுங்கு புத்தகத்தை சாதாரண மக்களும் படித்து புரிந்து கொள்ளும்படி தொகுத்து எழுதியுள்ளார்.

மனுஜோதி ஆசிரமத்தின் நிர்வாகி லியோ பால் கொலம்பஸ் லாறி, இந்த நூலை மலேசியாவில் வெளியிடுவதற்காக, இந்தியாவின் பல மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பக்தர்களையும், உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பிரதிநிதிகளையும் வரவழைத்து, கோலாலம்பூரில் இவ்விழாவை மிகவும் சிறப்பாக நடத்தியுள்ளார். “தெலுங்கு அசோசியேஷன் ஆஃப் மலேசியா” அங்கத்தினர்கள், தெலுங்கு அறிந்த பல அறிஞர்கள், தொழிலதிபர்கள், மகளிர் சங்க உறுப்பினர்கள், பள்ளி மாணவர்கள், மேலும் பலர் கலந்து கொண்டார்கள்.

இறைவணக்க பாடலுடன் தொடங்கிய இவ்விழாவிற்கு, மும்பையை சேர்ந்த சங்கர் பிரசாத் வெமுலா தலைமை தாங்கினார்.  இந்திய உச்சநீதிமன்ற வழக்கறிஞர் வரபிரசாத் நூலை வெளியிட, “தெலுங்கு அசோசியேஷன் ஆஃப் மலேசியா”வைச் சேர்ந்த வேங்கட பிரதாப் மற்றும் சத்திய சுதாகரன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். சிறப்பு விருந்தினராக டத்தோ.அந்தோனிசாமி கலந்து கொண்டார்.

அடுத்ததாக ஸ்ரீ லஹரி கிருஷ்னுனி கீதாம்ருதம் என்ற தெலுங்கு பாடல் தொகுப்பை ஆந்திர பிரதேச முன்னாள் நீதிபதி ஆர்.மாதவ ராவ் வெளியிட, “தெலுங்கு அசோசியேஷன் ஆஃப் மலேசியா”, முன்னாள் தலைவர் முனைவர் டத்துக் அட்சயா குமார் ராவ் பெற்றுக்கொண்டார்.

அம்ருத்தா மஞ்சரி – ஞான மகரந்தம்” என்ற தெலுங்கு நூலின் முக்கியத்துவத்தைக் குறித்து அறிஞர்கள் பேசும்போது, மனுஜோதி ஆசிரமம் பின்பற்றக்கூடிய “ஒன்றே குலம்! ஒருவனே தேவன்” என்ற கோட்பாடு உலகமெல்லாம் பறைசாற்ற பட்டு , மக்களெல்லோரும் ஒரே கடவுளின் கீழ் ஐக்கியப்பட வேண்டும் என பேசினர். மேலும் மலேசியாவிலுள்ள தெலுங்கு சங்கத்தினர் இக்கொள்கையை அறிந்து பேசும்போது, இன்றைய இளைய சமுதாயத்தினருக்கும், சிறுவர்களுக்கும் வேதங்களைக் குறித்தும், பண்பாட்டைக் குறித்தும் கற்றுக்கொடுத்தால், அவர்களின் எதிர்காலம் சிறப்பாகவும் சந்தோசமாகவும் அமைந்து, உலக மாயையிலுருந்து விடுபட்டு வாழ முடியும். அதன்மூலம் இறை ஆசி பெற்று, கடவுளுடன் ஒன்றர கலந்து, ஜீவன் முக்தி பெற்றுக்கொள்ளலாம் என பேசினர்.

இறுதியாக மனுஜோதி ஆசிரமத்தின் நிர்வாகி லியோ பால் கொலம்பஸ் லாறி, விழாவில் கலந்து கொண்ட அனைத்து பேச்சாளர்களையும், பங்கேற்ப்பாளர்களையும் சிறப்பாக கௌரவித்தார். பங்கேற்ற அனைவரும், தாங்கள் ஒருமுறை மனுஜோதி ஆசிரமத்தை தரிசித்து, அதன் கொள்கையுடன் தங்களை இணைத்துக் கொள்வோம் என வாக்களித்து விடைபெற்றனர்.