பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்உள்ள 871 பூங்காக்களிலும் (06.09.2024) காலை 6 மணிமுதல் நண்பகல் 12 மணி வரை தீவிரத் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் கோடம்பாக்கம் மண்டலம், சிவன்பூங்காவில் நடைபெற்ற தீவிர தூய்மைப் பணிகளையும், பூங்காபராமரிப்புப் பணிகளையும் மாண்புமிகு மேயர் திருமதி ஆர். பிரியாஅவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, மாண்புமிகு மேயர் அவர்கள் இந்தப் பூங்காவிற்கு வரும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அங்கு அமைக்கப்பட்டுள்ள சிறு நூலகத்தினைத் திறந்து வைத்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் 165 பூங்காக்கள், தத்தெடுப்பு முறையில் (Adoption) 88 பூங்காக்கள், செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பிற்காக ஒப்பந்தங்கள்அடிப்படையில் (Outsourcing) 616 பூங்காக்கள், சென்னை மெட்ரோஇரயில் நிறுவனம் மூலம் 2 பூங்காக்கள் என 871 பூங்காக்கள்பராமரிக்கப்பட்டு வருகின்றன.
பூங்காக்களில் மேற்கொள்ளப்பட்ட தீவிரத் தூய்மைப் பணியில்தேவையற்ற செடிகள் அகற்றுதல், குப்பைகள்/கட்டுமானக்கழிவுகள் அகற்றுதல் உள்ளிட்ட தூய்மைப் பணிகள்மேற்கொள்ளப்பட்டது. மேலும், இப்பணிகளின் போது, பூங்காக்களில் காணப்படும் சேதமடைந்த நடைபாதை, சுற்றுச்சுவர், விளையாட்டு உபகரணங்கள், உடற்பயிற்சி உபகரணங்கள் மற்றும் கழிவறைகள் ஆகியவற்றை கணக்கெடுத்து அறிக்கை தயார் செய்து, அவற்றை சரிசெய்து சீரமைக்கும் வகையில் தலைமையிடத்தில் உள்ள பூங்காத்துறைக்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், பூங்காக்களில் சேரமாகும் குப்பை, தாவரக் கழிவுகள் மற்றும் கட்டிடக் கழிவுகள் ஆகியவற்றை உடனுக்குடன் அப்புறப்படுத்திடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வட்டார துணை ஆணையாளர்களின் மேற்பார்வையில் சம்பந்தப்பட்ட மண்டல அலுவலர்கள் இந்தப் பணிகளுக்கு தேவைப்படும் இயந்திரங்கள், உபகரணங்கள் மற்றும் பணியாளர்கள்ஆகியவற்றை கண்காணித்து பணிகளை மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின்போது, மேயர்செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின்அறிவுறுத்தலின்படி, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 871 பூங்காக்களில் இன்று (06.09.2024) காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை தீவிரத் தூய்மைப் பணிகள்நடைபெற்றது. இந்தத் தீவிரத் தூய்மைப் பணிகளின்போது, ஒவ்வொரு பூங்காவிலும் சேதமடைந்த நடைபாதை, இருக்கைகள், சுற்றுச்சுவர், விளையாட்டு/உடற்பயிற்சி உபகரணங்கள், செயற்கைநீரூற்று, கழிப்பிடம் போன்றவற்றை இன்று மாலைக்குள்பூங்காக்களின் தேவைகளைக் கணக்கெடுத்து, அவற்றைசீர்செய்வதற்கான மதிப்பீடுகள் தயார்செய்யப்பட்டு பணிகள்மேற்கொள்ளப்பட உள்ளன. இன்று கோடம்பாக்கம் மண்டலத்திற்குட்பட்ட சிவன்பூங்காவில் மேற்கொள்ளப்பட்ட தீவிரத் தூய்மைப் பணிகள் ஆய்வுமேற்கொள்ளப்பட்டது. இதே நேரத்தில் பெருநகர சென்னைமாநகராட்சியின் அனைத்துப் பூங்காக்களிலும் இந்தத் தீவிரத் தூய்மை பணியானது மேற்கொள்ளப்பட்டன.
பெருநகர சென்னை மாநகராட்சியில் கடந்த 2 மாதங்களாகபேருந்து சாலைகள் மற்றும் உட்புறச் சாலைகளிலும் மண்டலங்கள்வாரியாக தீவிரத் தூய்மைப் பணிகள் இரவு நேரங்களில் மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஆண்டு மிக்ஜாம் புயலின்காரணமாக மழைநீர் தேங்கிய இடங்களில் மழைநீர்வெளியேற்றியவுடன் நாளொன்றுக்கு சராசரியாக 10,000 மெட்ரிக்டன் குப்பைக் கழிவுகள் சேகரிக்கப்பட்டன. இந்த ஆண்டு முன்னெச்சரிக்கையாக அனைத்துப் பகுதிகளிலும் தீவிரத் தூய்மைப் பணியின் கீழ் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இந்தத் தீவிரத் தூய்மைப் பணியின்போது, பூங்காக்கள், சாலையோரங்கள், பேருந்து நிறுத்தங்கள், சுரங்கப்பாதைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மழைக் காலங்களில் மண்டலங்களில் உள்ள வார்டு வாரியாகபல்வேறு பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதால், பருவமழைக்கென கூடுதலாக ஒரு வார்டுக்கு 10 நபர்கள் வீதம் நியமிக்கப்படுகிறார்கள். ஏற்கனவே 5 நபர்கள்நியமிக்கப்பட்டுள்ளனர். வடகிழக்குப் பருவமழையையொட்டி, அடுத்த மாதம் கூடுதலாக 5 நபர்கள் நியமிக்கப்படுவார்கள்.பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் கடந்த 2 ஆண்டுகளாக சாலை மற்றும் தெருக்களில் நீண்ட நாட்களாக கேட்பாரற்று கைவிடப்பட்ட வாகனங்கள் அகற்றப்பட்டுவருகின்றன. கடந்த 2 மாதங்களாக இந்தப் பணிகள் மேலும்தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சியின் சார்பில் எடுக்கப்பட்ட வாகனங்களுக்கு காவல்துறையிடமிருந்து தடையின்மைச் சான்று பெறப்பட வேண்டும். காவல்துறையிடமிருந்து தடையின்மைச்சான்று பெறப்பட்டவுடன் இவற்றை ஏலம் விட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் .ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா, மத்திய வட்டார துணை ஆணையர் கே.ஜே.பிரவீன்குமார், இ.ஆ.ப., மண்டலக் குழுத் தலைவர் எம். கிருஷ்ணமூர்த்தி, மாமன்ற உறுப்பினர்கள் து. நிலவரசி, கண்ணன் மற்றும்அலுவலர்கள் உடனிருந்தனர்.