தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் மற்றும் கடையம் பகுதிகளில் நிலவும் வறட்சியைப் போக்க இராமநதி அணையின் உபரி நீரை ஜம்புநதி பாசன பகுதிக்கு கொண்டு வரும் இராமநதி-ஜம்புநதி இணைப்புக் கால்வாய் திட்டம் ரூபாய் 41.08 கோடி மதிப்பீட்டில் கடந்த 2015 ஆம் ஆண்டு அரசாணை எண்.292 இன் படி அறிவிக்கப்பட்டது.
இத்திட்டத்திற்கான கால்வாய் வெட்டும் பணிக்கு கடையம் பெரும்பத்து, ஆவுடையானூர், வெங்கட்டாம்பட்டி ஆகிய மூன்று கிராமங்களில் தனியார் நிலங்கள் 48ஏக்கர் கையகப்படுத்த அரசாணை எண் 80/2020வெளியிடப் பட்டு, அப்பணி நிறைவுறும் நிலையில் உள்ளது. கால்வாய் வெட்டும் வகைக்கு அரசாணை எண் 64/2020 வெளியிடப்பட்டு நபார்டு நிதி 39 கோடியும், தமிழ்நாடு அரசு நிதி 2 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 04.06.2020 அன்று ஒப்பந்தப்புள்ளி நிறைவுபெற்றது. இத்திட்டத்திற்காக தேவைப்படும் நபார்டு நிதி உதவி நீண்ட காலமாக விடுவிக்கப்படாமல் இருந்ததை இந்திய ஒன்றிய நிதி அமைச்சர் அவர்களிடம் நேரிலும், கடிதம் மூலமாகவும் சுட்டிக்காட்டி விரைவாகக் விடுவித்திட உதவினேன்.
இதற்கிடையே 20.08.2020 அன்று பணி துவங்கி, கால்வாய் வெட்டும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் துணை இயக்குனரால் பணி நிறுத்தப்பட்டு, வனத்துறையின் தடையின்மை சான்று பெற்று பணியைத் தொடர அறிவுறுத்தப்பட்டது. அதன்படி பொதுப்பணித் துறையால் தடையின்மைச் சான்றுபெற விண்ணப்பிக்கப்பட்டு அது நிலுவையில் இருந்து வந்தது.
இந்நிலையில், 10.03.2022, 10.08.2022, 05.06.2022, 16.09.2022 ஆகிய நாளிட்ட கடிதங்கள் வாயிலாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை நான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க மாநில வனத்துறையின் வன உயிரின நல வாரியக்குழு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் மாற்றி அமைக்கப்பட்டு, பின்னர் அக்குழு கூடி இத்திட்டத்திற்கான ஒன்றிய அரசின் வனத்துறையின் அனுமதிக்கு பரிந்துரை செய்து அனுப்பியுள்ளது. அதைத் தொடர்ந்து ஒன்றிய வனத்துறை அமைச்சர் மாண்புமிகு பூபேந்தர்யாதவ் அவர்களை நேரிலும், கடிதம் வாயிலாகவும் நான் தொடர்பு கொண்டபோது, மாநில வனத்துறை அனுப்பிய பரிந்துரையில் கூடுதலாக சில விவரங்கள் கோரி உள்ளதாகவும், அது வரப்பெற்றவுடன் ஒன்றிய வனக்குழு கூட்டத்தை கூட்டி அனுமதி வழங்குவதாகவும் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். இதுகுறித்து ஒன்றிய அமைச்சர் 12.01.2023 அன்று எனக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இதற்கிடையே, 08.12.2022 அன்று தென்காசி நகரில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்றுப் பேசிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள், இராமநதி – ஜம்புநதி இணைப்புக் கால்வாய்த் திட்டம் இந்திய ஒன்றிய அரசின் வனத்துறை அனுமதி கிடைத்தவுடன் நிறைவேற்றப்படும் என்று அறிவித்துள்ளார்கள்.
எனவே, வறட்சியான கடையம், கீழப்பாவூர் ஒன்றியப் பகுதிகளைச் சேர்ந்த 4050 ஏக்கர் பாசன வசதியையும், சுமார் நூறு கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் வாய்ப்பையும் வழங்கக் கூடிய இத்திட்டத்தை விரைவாகச் செயல்படுத்திட, இந்திய ஒன்றிய அரசின் வனத்துறை கோரியுள்ள கூடுதல் விவரங்களை தமிழ்நாடு அரசு வனத்துறை விரைவாக வழங்கிட நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
இது குறித்து தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் மாண்புமிகு துரை முருகன் அவர்களுக்கும், வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் அவர்களுக்கும், தமிழ்நாடு அரசு நீர்வளத்துறைச் செயலாளருக்கும் 16.02.2023 அன்று கடிதம் கொடுத்துள்ளேன்.