பெருமதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய இந்திய நாட்டின் பிரதமர் மாண்புமிகுதிரு. நரேந்திர மோடி அவர்களே! மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு. ஆர்.என்.ரவி அவர்களே! மாண்புமிகு ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் திரு. அனுராக் சிங் தாகூர்அவர்களே! மாண்புமிகு ஒன்றிய இணை அமைச்சர் திரு. எல். முருகன் அவர்களே!மாண்புமிகு தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு. சிவ. வீ. மெய்யநாதன் அவர்களே! தமிழக அமைச்சர்களில் மூத்த அமைச்சராக இருக்கக்கூடிய மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் என்னுடைய ஆருயிர் அண்ணன் திரு. துரைமுருகன் உள்ளிட்டதமிழக அமைச்சர் பெருமக்களே! தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளே! ஃபிடே தலைவர் திரு. அர்க்கடி துவார்கோவிச் அவர்களே! இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர்செல்வி அபூர்வா, ஐ.ஏ.எஸ்., அவர்களே! சிறப்புப் பணி அலுவலர் திரு. தாரேஸ் அகமது, ஐ.ஏ.எஸ்., உள்ளிட்ட செஸ் ஒலிம்பியாட் கமிட்டி உறுப்பினர்களே!AICF கூட்டமைப்பின் நிர்வாகிகளே! இந்தியாவின் முதல் சர்வதேச செஸ் மாஸ்டர் மானுவல் ஆரோன் அவர்களே! ஐந்து முறை உலக சாம்பியன் ஆன கிராண்ட் மாஸ்டர் திரு. விஸ்வநாதன் ஆனந்த் அவர்களே! உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வருகை தந்திருக்கக்கூடிய செஸ்விளையாட்டு வீரர்களே, வீராங்கனைகளே! செஸ் ஆர்வலர்களே! பார்வையாளர்களே! ஊடகத் துறை, பத்திரிகைத் உலக நண்பர்களே! உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம்.
இன்னும் சொல்ல வேண்டுமென்று சொன்னால், இந்த நேருஉள்விளையாட்டு அரங்கத்துக்கு இன்றைய தினம் பன்னாட்டு அங்கீகாரம்கிடைக்கும் வகையில், இந்த அரங்கில் தொடக்கவிழாவானது மிக எழுச்சியோடு, ஏற்றத்தோடு நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. இந்த விழாவிற்கான அழைப்பிதழுடன் டெல்லி சென்று நம்முடைய மாண்புமிகு பிரதமர் அவர்களைச் சந்தித்து நேரில் அழைக்கலாம் என்று நான் திட்டமிட்டு இருந்தேன். ஆனால் இடையில் எனக்கு ஏற்பட்ட கொரோனாதொற்று காரணமாக நேரில் செல்ல இயலாத ஒரு சூழ்நிலை எனக்கு ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த என்னை நலம்விசாரிப்பதற்காக மாண்புமிகு பிரதமர் அவர்கள் தொடர்பு கொண்டார்கள். என்னை நலம் விசாரித்த அவர்களிடத்தில், எனது நிலையை நான் விளக்கினேன்.அவர் பெருந்தன்மையோடு சொன்னார் ‘நீங்கள் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் – நான் நிச்சயம் கலந்து கொள்வேன் – இந்த விழாவானது இந்தியாவுக்கேபெருமை தரக்கூடிய விழா‘ என்று பிரதமர் அவர்கள் குறிப்பிட்டார்கள். அந்தவகையில் மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இங்கே வருகைபுரிந்திருக்கிறார்கள்.
44-ஆவது பன்னாட்டு ஒலிம்பியாட் போட்டி என்பது ரஷ்ய நாட்டில்தான்நடப்பதாகமுதலில் சொல்லப்பட்டது. கொரோனா மற்றும் சில பிரச்சினைகள்காரணமாக, ரஷ்யாவில் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. வேறு எந்த நாட்டில் நடைபெறலாம் என்பதற்கான ஆலோசனைகள்நடந்ததை அறிந்து, இந்தியாவில் நடக்கும் வாய்ப்பு வருமானால், தமிழ்நாட்டில்நடத்தும் வாய்ப்பை நாம் பெற வேண்டும் என்று அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் நான் உத்தரவிட்டேன். இந்த ஆண்டின் தொடக்கத்தில், இது பற்றி நமக்கு தகவல்கள்கிடைத்தன. கடந்த மார்ச் 16-ஆம் நாள் இதற்கான முறையான அறிவிப்பை நான்வெளியிட்டேன். இந்த விளையாட்டுப் போட்டியை நடத்துவதற்கானஏற்பாடுகளைச் செய்வதற்காக 18 துணைக் குழுக்களை தமிழ்நாடு அரசுஉருவாக்கியது. இது போன்ற பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கானஏற்பாடுகளைச் செய்வதற்கு குறைந்தது 18 மாதங்களாகும் என்பார்கள். ஆனால்நான் பெருமையோடு சொல்கிறேன், நான்கே மாதங்களில் பன்னாட்டுப்போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு அரசு சிறப்பாகச்செய்திருக்கிறது. இதற்குக் காரணமான மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும்விளையாட்டுத் துறை அமைச்சர் திரு. மெய்யநாதன் அவர்களையும்,–விளையாட்டுத்துறையைச் சேர்ந்த அனைத்து அதிகாரிகளையும், இதற்குத்துணைநின்ற அனைத்துத் துறை அதிகாரிகளையும் நான் மனதார வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன், நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 44-ஆவது பன்னாட்டு சதுரங்க ஒலிம்பியாட் போட்டி என்பது உலகஅளவில் தமிழ்நாட்டின் மீது கவனத்தை ஈர்க்கும் நிகழ்ச்சியாக இன்றுதுவங்கியுள்ளது. இப்போட்டியின் மூலமாக தமிழ்நாட்டின் விளையாட்டுத் துறைமட்டுமல்ல – சுற்றுலாத் துறையும் – தொழில் துறையும் மிகப்பெரிய வளர்ச்சியைஅடைய இருக்கிறது. இன்னும் சொன்னால், தமிழ்நாட்டினுடைய மதிப்பும்,தமிழ்நாடு அரசினுடைய மதிப்பும் பெருமளவு இன்று முதல் மேலும் மேலும்உயர்கிறது. இந்த உயர்வு என்பது மிகச் சாதாரணமாகக் கிடைத்து விடுவதுஅல்ல. சரியான திட்டமிடல், கடின உழைப்பு, அதனுடைய விளைவே இந்தஉயர்வு. இந்தியத் துணைக் கண்டத்தில் முதல் முறையாகவும், ஆசியா கண்டத்தில்மூன்றாவது முறையாகவும் இந்த செஸ் போட்டிகள் நடக்க இருக்கின்றன.
கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்கு முன்னரே இந்தியத் துணைக்கண்டத்தில்விளையாடப்பட்டு வந்த சதுரங்க விளையாட்டுதான், இன்று உலகம் முழுக்கவும்செஸ் என்ற பெயரால் பரவி இருக்கிறது. சில சில மாறுதல்களுடன் உலகின்பல்வேறு நாடுகளில் சதுரங்கம் விளையாடப்பட்டு வருகிறது. தொடக்கவிழா இங்கு நடைபெற்றாலும், போட்டிகள் முழுமையாக, இயற்கை எழில் கொஞ்சும் மாமல்லபுரத்தில் நடைபெறுவதற்கான ஏற்பாட்டைதமிழ்நாடு அரசு செய்திருக்கிறது. மாமல்லபுரம் இந்தியக் கட்டடக்கலையின் அருங்காட்சியகம். அதற்குப்பக்கத்தில்தான் சதுரங்கப்பட்டினம் என்ற கடலோரப் பகுதி இருக்கிறது.சென்னைப் பட்டனத்தை மெட்ராஸ் என்று அழைத்ததைப் போலசதுரங்கப்பட்டனத்தை சத்ராஸ் என்று அழைத்தார்கள். மன்னர் காலத்தில்இருந்து புகழ்பெற்ற ஊர் அந்த ஊர். இன்றைக்கு தொல்லியல் துறையின்கட்டுப்பாட்டில் அந்த ஊர் கோட்டை இருக்கிறது. அத்தகையசதுரங்கப்பட்டனத்துக்கு அருகில்தான் உலகப்புகழ் பெற்ற சதுரங்கப் போட்டிநடக்க இருக்கிறது.
• 1961-ஆம் ஆண்டு உலக செஸ் சாம்பியனாகப் புகழ் பெற்ற மானுவல்ஆரோன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பது நமக்குகிடைத்திருக்கக்கூடிய மிகப்பெரிய பெருமை ஆகும். இந்தியாவில் செஸ்விளையாட்டை முன்னோக்கி நகர்த்தி, பல்வேறு திறமையாளர்களுக்குஊக்கமளித்ததும் மானுவல் ஆரோன்தான்.
• 1972-ஆம் ஆண்டே சென்னையில் இருந்த சோவியத் கலாச்சார மையத்தில்செஸ் க்ளப் ஒன்றினை உருவாக்கியவர் ஆரோன். செஸ் விளையாட்டில்உலகப்புகழ் பெற்ற வீரர்களை உருவாக்கிய சோவியத் நாடே, ஆரோனின்ஆலோசனையை பெற்றுத்தான் செயல்பட்டது. தமிழ்நாடு செஸ்அசோசியேஷனை உருவாக்கியவரும் இவர்தான்.
• உலகக் கிராண்ட் மாஸ்டராகப் புகழ் பெற்ற விஸ்வநாதன் ஆனந்த்அவர்களைப் பற்றி உங்களுக்கு நான் அதிகம் சொல்லத் தேவையில்லை.
• 1988-ஆம் ஆண்டு தனது 19வது வயதில் உலகப் புகழைப் பெற்றவர் ஆனந்த்அவர்கள். இன்று வரை உலக சதுரங்க ஆட்டத்தில் வலிமையான வீரராகஅவர் விளங்கிக் கொண்டு இருக்கிறார்.
• 2001-ஆம் ஆண்டு பெண் கிராண்ட் மாஸ்டராக பட்டம் வென்றவர்விஜயலட்சுமி சுப்பராமன்.
• 2018-ஆம் ஆண்டு மிக இளம் வயதில் கிராண்ட் மாஸ்டராக உயர்ந்தார்பிரக்ஞானந்தா.
பள்ளி மாணவர்களுக்கு செஸ் விளையாட்டுப் போட்டிகளை நடத்திவிழிப்புணர்வு ஏற்படுத்த ஒரு கோடி ரூபாய் நிதியை பள்ளிக்கல்வித் துறைஒதுக்கீடு செய்திருக்கிறது. அதற்கான சிறப்புமிகுந்த விளம்பரப் பாடலை தமிழ்நாட்டில் பிறந்து, உலகளாவிய இசை உலகத்தின் புகழை தனது இளமைக் காலத்திலேயே பெற்றஎன்னுடைய அருமைச் சகோதரர் திரு. ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் இசைஅமைத்துக் கொடுத்தார். இப்படி செஸ் ஒலிம்பியாட் என்பது விளையாட்டுப் போட்டியாக மட்டுமல்ல, விளையாட்டு விழாவாக மட்டுமல்ல – இந்தியாவில் நடைபெறும் உலகளாவியபண்பாட்டுத் திருவிழாவைப் போல் ஒரு சகோதரத்துவ மனப்பான்மையுடன்நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இத்தகைய விழாவைத் தொடங்கி வைக்க வருகை தந்த மாண்புமிகுஇந்தியப் பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்கு நான் நன்றி சொல்கிறேன், என்னுடைய வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இது போன்றவாய்ப்புகளை தொடர்ந்து நீங்கள் தமிழகத்துக்குத் தாருங்கள் என்றும் வேண்டிவிரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.
ஓர் அரசன் ஓர் அரசி இரு அமைச்சர்கள், இரு குதிரைகள், இரு கோட்டைகள் எட்டுச் சிப்பாய்கள் என கருப்பு – வெள்ளை ராணுவ மைதானமாகவே காட்சி அளிப்பது சதுரங்கம்.